'எரிபொருள் எரிப்பது ஐ.சி.யு-வில் இருக்கும் கேன்சர் நோயாளியிடம் சிகரெட் கொடுப்பது போன்றது'
'இவை எல்லாம் மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் சாத்தியமாகாது என்று. சட்டங்கள் அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்துள்ளனர். இதற்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியே ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதையும் மீறி மீண்டும் அதை நடைமுறைப்படுத்த முயல்கின்றனர். 'என்கிறார் நித்தியானந்த ஜெயராமன்
பலமுறை ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக பல்வேறு விதங்களில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனினும் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் ஹைட்ரோகார்பனை எடுக்க மத்திய அரசு நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் தற்போது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசிற்குக் கடிதம் எழுதினார்.
“மத்திய அரசால் 10.06.2021 அன்று அறிவிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் காவிரிப் படுகை பகுதியில் வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் உற்பத்தியாக ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுக்கை பகுதியிலுள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்த பகுதியில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கையாகும்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்றும், தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் கண்ணை இமை காப்பது போல எங்கள் அரசு காக்கும் என்று உறுதிப்படக் கூற விரும்புகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
13-ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்ட நிலையில், 15-ம் தேதி ONGC சார்பாகத் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.

அதில் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் குழாய் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புகள் இருக்கும் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
நீண்ட காலமாகப் போராடி வந்த விவசாயிகள் தற்போது அரை நிர்வாண போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
ஹைட்ரோகார்பன் என்றால்?
இவ்வளவு எதிர்ப்புகள் இருக்கும் ஹைட்ரோகார்பன் என்பது என்ன என்று நாம் தெரிந்திருக்க வேண்டும்.
ஹைட்ரஜன், கார்பன் சேர்ந்ததுதான் ஹைட்ரோகார்பன். இது ஆக்சிஜனோடு இணைந்து ஏராளமான சக்தியை உமிழும் எரிபொருளாகும். ஹைட்ரோகார்பன் எரிக்கையில் அதிக அளவில் வெப்பம் வெளியாகும். இதன் மூலம் இயந்திரங்கள், மோட்டார்கள் மின் நிலையங்களை இயக்கலாம்.
ஹைட்ரோகார்பன் பல வடிவங்களில் கூறலாம் ஒரு கார்பனும் ஒரு ஹைட்ரஜனும் இருந்தால் அதை மீத்தேன் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர ஈத்தேன், புரொப்பேன், பியூட்டேன், பென்ட்டேன், ஹெக்சேன், என்டேன், ஆக்டேன், நோனேன், டெக்கென் என்று ஹைட்ரஜன் மற்றும் கார்பனின் அளவை பொறுத்து இதனை வகைப்படுத்துகின்றனர்.
கச்சா எண்ணெய்யை எரிக்கும் போது கிடைப்பதும் வெவ்வேறு நிலையிலான ஹைட்ரோகார்பன்தான். பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷெல் எரிவாயு என்று அவை பிரிகின்றன.
ஹைட்ரோகார்பன்கள் பிரிக்கப்பட்ட பின் எரிபொருளாகவும், பிறவகை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. திரவ நிலையில் இருக்கும் ஹைட்ரோகார்பன் பெட்ரோலியம் என்று குறிப்பிடப்படுகிறது. வாயு நிலையில் இருக்கும் ஹைட்ரோகார்பன்கள் இயற்கை எரிவாயு என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு விதங்களில் பயன்படும் ஹைட்ரோகார்பன்கள் நிலத்திற்கு கீழ் மட்டுமல்ல நிலத்திற்கு மேற் பகுதிகளிலும் பல இடங்களில் இருக்கிறது என்கின்றனர், ஆய்வாளர்கள். குறிப்பாகக் குப்பைகளில் கூட ஹைட்ரோகார்பனை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இயற்கை ஆர்வலர் நித்தியானந்த ஜெயராமன் அவர்களிடம் கேட்டபோது, “சுற்றுச்சூழல் அறிக்கையிலிருந்து தப்பிப்பதற்காகவும், பொதுமக்களின் கருத்து கேட்பை தவிர்ப்பதற்காகவும் ஒன்றிய அரசு தற்போது இந்த திட்டத்தை B2 பிரிவில் கொண்டுவந்துள்ளது. முன்பு இது A பிரிவிலிருந்தது. அப்போது ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அனுமதி வாங்க வேண்டும். மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவை எல்லாம் மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் சாத்தியமாகாது என்று. சட்டங்கள் அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்துள்ளனர். இதற்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியே ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதையும் மீறி மீண்டும் அதை நடைமுறைப்படுத்த முயல்கின்றனர்.

ஹைட்ரோகார்பனுக்கு கிணறு வெட்டவேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதியில்லாமல் செய்ய முடியாது. மாநில அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கும் ஒரு பொறுப்பு உள்ளது. அவர்கள் அனுமதி கொடுத்தல் உடனே அதை நடைமுறைப்படுத்த முடியாது. அடுத்து தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். தமிழக அரசு குறிப்பிட்ட இடங்களில் வேறு ஏதேனும் சட்டங்கள் இருந்தால், அதன் அடிப்படையில் தடை விதிக்கலாம்.
ஒன்றிய அரசு செய்வது தவறானது. 2019-ம் ஆண்டு வந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் தவறான விஷயம்.
ஒன்றிய அரசிலிருந்து சூழலியல் மீது அக்கரை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் தமிழ்நாடு மட்டும் குறிவைக்கிறார்கள் என்று கிடையாது. இந்தியா முழுவதும் இதே கொள்கையைத் தான் பின்பற்றுகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இதுபோன்று செயல்படுகின்றனர். EIA அறிவிப்பையே நீர்த்துப்போக வைத்துள்ளனர். 2020 வரைமுறை கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தில் காவிரி படுகையில் இருக்கும் எரிபொருள் உற்பத்தி என்பது குறைவானதுதான். தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் எரிபொருளுக்கும் எந்த தடையும் இல்லை. புதிதாக வெட்டக்கூடாது என்றுதான் கூறுகிறோம். புதிதாகக் கிணறு வெட்டப்படும் போது அதில் ஹைட்ரோகார்பன் கிடைக்குமா? கிடைக்காதா என்று உறுதிப்படுத்த முடியாது.
எதிர்காலத்தில் வரும் எரிபொருள் பற்றாக்குறை வருவதற்கு முன், அதிலிருந்து பின்வாங்கவில்லை என்றால் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. தற்போதோ எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று நினைப்பது பைத்தியகாரத்தனம். 20 வருடத்திற்குப் பின், உலகம் இருக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, அதை இந்த நிலைக்குக் கொண்டு வந்த எண்ணெய்யும் நிலக்கரியையும் அதிகமாகச் சுரண்டினால் என்ன செய்யமுடியும்.
எரிபொருளை எரித்தாலே உலகம் நாசமாகும். அதை மண்ணுக்குள் எடுத்தாலும் சரி, நிலத்திற்கு மேல் இருந்து எடுத்தாலும் சரி அது ஆபத்துதான். எரிபொருள் எரிப்பது ஐ.சியு ஐ.சி.யு வில் இருக்கும் கேன்சர் நோயாளியிடம் சிகரெட் கொடுப்பது போன்றது. இந்த பிரச்சனையின் ஆழத்தை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இன்னும் 15 வருடம், 20 வருடம் கழித்து இந்த உலகம் எப்படி இருக்கும் என்பது யாராலும் கணித்துக் கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் எரிபொருளுக்குப் பின் சுற்றுவதை விட்டுக்கொண்டு மாற்று வழியைத் தேடுவது சிறந்தது” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தஞ்சை நெற்களஞ்சியத்தைப் பாலைவனமாக்கும் பல திட்டங்களுக்கு வித்திட்டது திமுகவின் மூத்த நிர்வாகியான தி.டி.ஆர்.பாலு அவர்கள் தான். ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து அப்போதைய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் திரு.டி.ஆர்.பாலு, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுத்து 2010 மத்திய அரசிடம் அனுமதி பெற்றார்.
இதைத் திரு. டி.ஆர். பாலு பேட்டி ஒன்றிலும் தெரிவித்திருந்தார். அது ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன. திமுகதான் கொண்டுவந்தது என்பதை அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
அதேபோல, ஆழ்துளைக் கிணறு அமைத்து ஆய்வுப் பணிகளைத் துவங்க, நான்கு ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டார்ன் எனர்ஜி கார்பரேசன் நிறுவனத்திற்கு 2011 ஜனவரியில் அனுமதி அளித்தது திமுக அரசுதான். அதுவும் தற்போதைய முதலமைச்சர் முக.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், இத்திட்டத்திற்கான அனைத்து உதவியையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அப்போதைய திமுக அரசு கூறியிருந்தது.
அதிமுக ஆட்சியில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எப்படி அனுமதி மறுக்கப்பட்டதோ அதுபோல் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 17, 2021
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அவர்கள்#Hydrocarbon #AIADMK pic.twitter.com/nv0OCPOh4v
2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிணறுகளுக்கும், 2011-ல் திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளுக்கும், திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது.
2014-ம் ஆண்டில் நிலக்கரி படுகை அடிப்படையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய புரட்சித் தலைவி அம்மா அவர்களால் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படும் மீத்தேன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு மாநில அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் 8.10.2015 அன்று கேட்டுக்கொண்டார்.
2020-ல் அதிமுக அரசு, வேளாண் மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டு, ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனிச் சட்டத்தினை சட்டசபையில் அறிமுகம் செய்து, அதனை நிறைவேற்றியதன் மூலம் காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளைப் பாதுகாத்துள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் ஓ.என்.ஜி.சி நிறுவனமோ, இதர எண்ணெய் நிறுவனங்களோ ஏதேனும் புதிய ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளில் நலனுக்கு எதிரான ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ் நாடு அரசுக்கு எழுதிய கடிதத்திற்குக் கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோல் பல அரசியல் தலைவர்களும் இதற்குக் கண்டம் தெரிவித்துள்ளனர். விசிக தலைவர் திருமாவளவன், “அண்மையில் தமிழக முதல்வர் 'தமிழ்நாட்டில் #ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாதெனப் பிரதமருக்கு மடல் எழுதினார். ஆனால்,ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூரில் ஆய்வுக்கிணறுகள் அமைக்க தமிழ்நாட்டரசிடமே சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்”
அண்மையில் தமிழகமுதல்வர் 'தமிழ்நாட்டில் #ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 17, 2021
கூடாதென பிரதமருக்கு மடல் எழுதினார். ஆனால்,ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூரில் ஆய்வுக்கிணறுகள் அமைக்க தமிழ்நாடுஅரசிடமே சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். pic.twitter.com/cAJIjof1ip
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைட்ரோ கார்பன் எனும் எரிகாற்று எடுக்கும் திட்டத்திற்கெதிராக ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பைத் தெரிவித்து, அதனை ஆளும் அரசும் ஏற்று அத்திட்டத்தைக் கைவிடுவதற்குக் கொள்கை முடிவு எடுத்திருக்கும் நிலையில், அதனை அலட்சியப்படுத்தி மாநில அரசைத் துளியும் மதியாது மத்தியில் ஆளும் பாஜக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைவது அதிர்ச்சியளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதிகேட்டு மாநில சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மாநில அரசின் தன்னுரிமைக்கும், மக்களின் மண்ணுரிமைக்கும் மதிப்பளிக்காது எதேச்சதிகாரப்போக்கோடு தமிழகத்தின் மீது நிலவியல் போரைத் தொடுக்க முயலும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் மக்களாட்சித் தத்துவத்திற்கெதிரான மாபாதகமாகும்.
அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசப்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும்!https://t.co/tocI7anIeN#HydroCorbonProject | #ONGC | #Vedanta pic.twitter.com/rKTc6hVPQV
— சீமான் (@SeemanOfficial) June 17, 2021
அரசு அறிவித்துள்ள கொள்கையின்படி, ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள் மற்றும் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட அனைத்துக்கிணறுகளும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்க்கிணறுகளாக இருக்கும் கிணறுகளில்கூட, நாளை நீரியல் விரிசல் (Hydraulic fracking) முறைப்படி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள முடியும். இந்தப் புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கும் 768 கிணறுகளையும் தடையின்றிச் செயல்பட அனுமதிப்பதுதான் அரசின் திட்டமென்றால் `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்ற முந்தைய அரசின் பேரறிவிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் வளச்சுரண்டலுக்குத் தடையாக இருந்த விவசாயிகள், பொதுமக்களைத் திசைதிருப்பவே என்பது வெட்டவெளிச்சம்.
அரியலூர், புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும் மக்களையும், மண்ணையும் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைபோகக் கூடாதென்றும், இது குறித்தான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்குத் தெளிவாக விளக்கிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், “காவிரி டெல்டாவின் ஒரு பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இப்பிரச்னையில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு நடந்து கொள்வது சரியானது அல்ல.
காவிரி டெல்டாவின் ஒரு பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இப்பிரச்னையில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு நடந்து கொள்வது சரியானது அல்ல. 1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 13, 2021
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் நெடுவாசல் வருவதால், தமது ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
