சுனாமியிலிருந்து பாதுகாத்த அலையாத்தி காடுகள்! தமிழ்நாட்டில் செயற்கையாக வளர்க்கும் திட்டம்
பல பகுதிகளில் அலையாத்திக் காடுகளின் அருமை தெரியாமல், அதை அளித்துப் பிற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
அலையாத்தி காடுகள் (mangroves forest), ஒரு இயற்கை அரண். சுனாமி வேளையில் திருவாடனை, பிச்சாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் குறைவாக இருந்ததற்கு அலையாத்தி காடுகளின் பங்கு மிகப்பெரியது என்று இயற்கை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். கடலுக்குக் கீழ் பவளப்பாறைகள் எப்படியோ, அதேபோல் கடலுக்கு மேல் பகுதியிலும் பார்க்க முடியும் அலையாத்திக்காடுகளின் பங்கு மிக முக்கியமானது.
அலையாத்தி காடுகளைச் சதுப்புநில காடுகள் என்றும் குறிப்பிடுவதுண்டு. அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டில் 44.83 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. அதிலும், குறிப்பாக முத்துப்பேட்டை, ராமநாதபுரம், பிச்சாவரம், தஞ்சை மாவட்டத்தின் முகத்துவார பகுதி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. .
உப்பு நிலம், வெப்பம், அலை, சேறு என்று எவ்விதமான நிலப்பரப்பாக இருந்தாலும், அலையாத்தி காடுகள் மிக எளிதில் வளர்ந்துவிடும். பெரும்பாலும் ஆறுகள், கழிமுகங்களின் இடைப்பட்ட பகுதிகளிலேயே அலையாத்திக்காடுகளை அதிக அளவில் பார்க்க முடியும்.

இந்தியாவில் அலையாத்தி காடுகள்?
உலக அளவில் 112 நாடுகள்-யூனியன் பிரதேசத்தில் அலையாத்தி காடுகள் உள்ளன. அவற்றில் 30 நாடுகளில் 200,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அலையாத்திக்காடுகள் பரந்துவிரிந்து காணப்படுகிறது.
இந்தியாவில் மேற்கு கடற்கரையைவிடக் கிழக்கு கடற்பகுதியில்தான் அலையாத்திக்காடுகள் செழித்து வளர்க்கிறது. மொத்தமாகப் பார்த்தால் கிழக்கு கடற்கரையில் 57 சதவீதமும், மேற்கு கடற்கரையில் 23 சதவீதமும், அந்தமான் நிகோபார் பகுதியில் 20 சதவீதமும் அலையாத்திக்காடுகள் உள்ளன.
அலையாத்தி காடுகளில் கிட்டத்தட்ட 100 வகையான சதுப்புநில தாவரங்கள் உள்ளன. இவற்றை தவிர, 559 வகை பாசிகள் மற்றும் பைட்போ பிளாங்க்ட், 11 வகையான கடற்புற்கள், 195 வகையான பாக்டீரியாக்கள் பூஞ்சைகள் மற்றும் ஆக்டியோமைஸ், 12 வகையான உப்பு தாவரங்கள், 32 வகையான ஒட்டுண்ணிகள் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் 55 வகையான இறால்கள், 138 வகையான நண்டுகள், 308 வகையான மொல்லஸக்ஸ், 711 வகையான பூச்சிகள், 7 ஒட்டுண்ணிகள், 745 முதுகெலும்பு உயிரிகள் அலையாத்திக்காடுகளை நம்பியுள்ளன. இதைத் தவிர 546 வகையான மீன்கள், 433 வகையான பறவைகள், 85 வகையான ஊர்வன, 70 வகையான பாலூட்டிகள் அலையாத்திக்காடுகளையே அடைக்கலமாகக் கொண்டிருக்கின்றன.
அலையாத்தி காடுகளை, கடலுக்கான வீடு, விலங்கு மற்றும் மனிதர்களுக்கான உணவு உற்பத்தி, கடல் நீர், மற்றும் காற்று சுத்திக்கரிப்பி, கடல் மற்றும் நிலத்தை இணைக்கும் பாலம், என்று இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.
2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் போது, ராமேஸ்வரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், சேதாரம் குறைவாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பவளப் பாறைகள்தான் என்கிறார் விஞ்ஞானி சத்யநாராயணன். அதே கருத்தை வனவிலங்கு அதிகாரிகள் அலையாத்தி காடுகளின் பங்கில் முன்வைக்கின்றனர். சமீபத்தில் அலையாத்தி காடுகள் பற்றி வெளியிட்ட அறிக்கையில், “800 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சுனாமி பேரலையிருந்து, பலரது உயிர்கள் மற்றும் உடைமைகளை அலையாத்தி காடுகள் காத்துள்ளது” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை அலையாத்திக்காடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அலையாத்திக்காடுகளை, அதிகரிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து விதைகளைச் சேகரித்து அந்த நிலப்பகுதியில் அலையாத்தி காடுகளின் விதை நடப்படுகிறது. அவற்றில் பெரும்பாலான விதைகள் முளைத்துள்ளன.

அதேபோல், முன்பு இருந்த அலையாத்தி காடுகளைப் பராமரிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் செயற்கையாக நடப்பட்ட சதுப்புநில தாவரங்கள் பூஞ்சைகள், நோய்க்கிருமிகள், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற சில, கடல் நீரின் அளவு குறைவதால் பாதிப்படைந்துள்ளது. சுயேடா மரிடிமா மற்றும் சுவேடா மோனோயிகா மற்றும் சாலிகோர்னியா பிராச்சியாடா இன சதுப்புநில தாவரங்கள் தற்போது நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், மொத்த சராசரி அளவை ஒப்பிடுகையில் அலையாத்தி காடுகள் வளர்ப்பு திட்டம் ஓரளவிற்கு வெற்றி கண்டுள்ளதாகவும், வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தைத் தொடர்ந்து பாதுகாக்க மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் தமிழ்நாடு வனத்துறையினர்.
எவ்வாறு எல்லாம் அலையாத்தி காடுகள் பாதிக்கப்படுகிறது?
பல பகுதிகளில் அலையாத்திக்காடுகளின் அருமை தெரியாமல், அதை அளித்துப் பிற வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதேபோல் மிக முக்கிய பிச்சனைகளில் ஒன்று, பிளாஸ்டிக் கழிவுகளை அலையாத்தி காடுகளுக்கு இடையே போடுவது. அது தாவரத்தை மீண்டும் வளராமல் தடுக்கிறது.
மற்றொரு முக்கிய பிரச்சனையாக முன்வைக்கப்படுவது பெட்ரோலியம் போன்ற எரிவாயுக்கள் போன்றவை கடல் நீரில் கலப்பதால் அலையாத்திக்காடுகள் பாதிப்படைகிறது. சமீபத்தில் இலங்கையில் கப்பல் ஒன்று விபத்திற்குள்ளாகி, எண்ணைக் கடலில் கலந்தது. இதுபோன்ற செயல்பாடுகள் அலையாத்தி காடுகளை மிகவும் பாதிப்படையச் செய்கின்றன.
