ஹச் ராஜா சர்ச்சைகளால் புறக்கணிக்கப்படுவரா?
ஹெச் ராஜா ஊடகங்களைக் கடுமையாக விமர்சித்த நிலையில், அவரை புறக்கணிக்க வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.
ஹெச் ராஜா சமீபத்தில் பேசிய விஷயம் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பலரும் பலமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
ஹெச் ராஜா, ஒருவரைத் தாக்கி பேசுவதில் எப்போதும், பெயர் பெற்றவர் என்ற அளவில் நடந்துகொள்வதுண்டு. பல இடங்களில், மத்திய அரசின் திட்டங்களை விமர்சிப்பவர்களைத் தேச விரோதி என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இந்த வார்த்தை மீம்களில் பலமுறை டிரெண்டாகியும் உள்ளது.
பல இடங்களில், ஊடகங்கள் மீது Prostitute என்ற வார்த்தையை வீசி விமர்சித்துள்ளார். அவர் இவ்வாறு சிக்கும்போது, ஊடகங்கள் ஹெச் ராஜாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளும் எழுந்ததுண்டு. அந்த வகையில், இந்தமுறையும் ஹெச் ராஜா, வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டுள்ளார்.
மோகன் இயக்கத்தில் வெளியாகும் 'ருத்ரதாண்டவம்' என்ற படத்தின் சிறப்புக் காட்சியை ஹெச் ராஜா பார்க்கச் சென்றிருந்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர். எந்த கேள்வியையும் பொறுமையாகப் பதிலளிக்காத ஹெச் ராஜா, ஆவேசமான வார்த்தைகளை அள்ளி வீசினார். அப்போது ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “ “இந்து இல்லாவிட்டால் தமிழ் எங்கிருந்து வந்தது? இந்து இல்லாவிட்டால் தமிழ் ஏது?” எனக் கேள்வி எழுப்பிய அவர், “இதுக்குதான் சொல்றேன், you all media people Presstitues” என்றார்.
அதேபோல் சீமான் பற்றிய ஒரு கேள்விக்கு, "Who is Seeman? (யார் சீமான்) சீமானோட அம்மா முதல்ல தமிழச்சியா? சொல்லுங்க சார், அன்னம்மா தமிழா? இல்லை. She is a malayali (அவர் ஒரு மலையாளி). அட என்னை பிஹாரிங்கிறான் ஒரு முட்டாள்" என்றார்.
அடுத்ததாக ஆரியர் வருகை குறித்து ஒரு செய்தியாளர் கூறியதும், "சுப. வீரபாண்டியனின் மூளை dust binஆ போச்சுதுன்னா, Aryan invasionஆ? அதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு? அதனால, Don't spread lies. சுப வீரபாண்டியனே அறிவாலயம் வாசல்ல உட்கார்ந்திருக்க பிச்சைக்காரன்" என குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் பத்திரிகை நிறுவனங்களையும் தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா pic.twitter.com/n6ABvHSbc0
— DON Updates (@DonUpdates_in) September 27, 2021
இதுபோன்ற கருத்துகளை வாரி வீசிய ஹெச் ராஜாவுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் தரப்பில் இதற்குக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. “கருத்துரிமையில் நம்பிக்கை உள்ள அத்தனை ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். எச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும் , செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு , நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
எச்.ராஜா அவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்கள் எச்.ராஜாவின் இவ்விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. ஆனால், அவை நேர்மையானதாக, தரமானதாக இருக்கட்டும். மாறாக, அவதூறுகளால், மிரட்டல்கள், வாய்ப்பூட்டு போட நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. தொடர்ந்து ஊடகத்துறையினர் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஊடக நிர்வாகிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஹெச் ராஜா நீதிமன்றத்தையும் கடுமையான வார்த்தைகளில் திட்டிருந்தார். அதற்கு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்த நிலையில், மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில்தான் மீண்டும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடகத்துறையினரை இழிவுபடுத்தும் ஹெச்.ராஜா அவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகத்துறையினரைத் தொடர்ந்து இழிவாகப் பேசி வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையை இழிவாகப் பேசுவது, அவமரியாதை செய்வது போன்ற நாகரிகமற்ற செயல்களில் பாஜகவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு, பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி மிகவும் தரக்குறைவாகப் பதிவிட்டிருந்தார்.
இதே போன்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தியிருந்தார். இவர்கள் மீது அப்போதைய அதிமுக அரசும், காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். ஆனால் நியாயம் கேட்டுப் போராடிய ஊடகத்துறையினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு அஞ்சியது.
அப்போது, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நியாயம் கேட்டுப் போராடியவர்களைக் கைது செய்வது ஜனநாயக கேலிக்கூத்தாகும் எனக் கண்டனம் தெரிவித்திருந்தது. கடந்த ஆட்சியில் எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா மீது அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், ஊடகத்துறையினரை மீண்டும் இழிவுபடுத்தும், அநாகரிக சொற்களால் ஹெச்.ராஜா மீண்டும் பேசியுள்ளார். அதிமுக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால், ஊடகத்துறையினரை மீண்டும் இழிவுபடுத்தும் துணிச்சல் ஹெச்.ராஜா வகையறாக்களுக்கு வந்திருக்காது.
பாஜகவுக்கு ஆன்மிக ஒழுக்கமும் இல்லை, அரசியல் ஒழுக்கமும் இல்லை என்பது ஹெச்.ராஜா உள்ளிட்ட பல்வேறு மாநில பாஜக தலைவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் மூலமாக வெளிப்பட்டு வருகிறது, எனவே, ஊடகத்துறையினரை இழிவுபடுத்திய ஹெச்.ராஜா மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும், ஹெச்.ராஜா போன்ற அடிப்படை நாகரிகமற்றவர்களையும், அரசியல் அறமற்றவர்களையும் ஊடகத்துறையினரும் புறக்கணிக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
