உத்தரவுகளை மீறி விற்கப்படும் குட்கா! அரசின் நடவடிக்கைகள் தற்காலிகமானதா?
குட்கா விற்பனைக்குத் தடை விதித்தாலும், தொடர்ந்து தமிழ்நாட்டில் விற்கப்பட்டு வருகிறது. அரசின் நடவடிக்கைகள், தற்காலிகமாக மட்டும் இல்லாமல் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கை
குட்கா ஊழல், குட்கா விற்பனை என்று குட்கா தொடர்பான செய்திகளுக்கு இங்குப் பஞ்சம் இல்லை. புகை, மது ஆகியவை பயன்படுத்துபவர்கள் தவிர மற்றவர்களுக்கும் அது பற்றிய விவரங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், குட்கா பற்றிய விவரம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று கூற முடியாது. சிலருக்கு அறிமுகமாகியிருக்கலாம், சிலர் இது என்ன குட்கா, பான்மசாலா? என்று செய்திகளை படிக்கும் போது கேள்விகளுடன் கடந்திருக்கலாம்.
குட்கா என்றால் என்ன?, இதன் அரசியல் பின்புலம்?
குட்கா தயாரிக்க புகையிலை, பாக்கு, பாரஃபின் மெழுகு, கால்சியம் ஆக்சைடால் ஆன சுண்ணாம்பு மற்றும் இனிப்பு சுவையூட்டி சேர்க்கப்படுகிறது. இந்தியா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில்தான். குட்கா பயன்பாடு அதிகமாக உள்ளது.
குட்கா பசை போன்று பக்குவமாக்கி வாய் பகுதிக்கும், பல்லுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைப்பார்கள். அது கொஞ்சம், கொஞ்சமாக உணவு குழல் மற்றும் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது

குட்காவில் உள்ள புகையிலை பற்றி உங்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. புகையிலைகள், நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. புகையிலையை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவதால், அது ஆபத்தாக மாறிவிடும்.
“பாக்கும், இயற்கையில் கிடைக்கும் ஒரு காய்தான். இதில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே ஒருவரால் உண்ண முடியும். அதற்கு மேல் உண்ணுபது மிகவும் சிரமமாக இருக்கும். பாக்கு பயன்படுத்துவதால், பிரச்சனை வருமா என்று நேரடியாகக் கூற முடியாது. ஆனால் அளவுக்கு மீறிப் பயன்படுத்தும்போது ஒரு வகை சோகையை ஏற்படுத்தும்” என்கிறார் இயற்கை ஆர்வலர் பாரதிதாசன்.
பாரஃபின் மெழுகு பெட்ரோல், நிலக்கரி, ஷேல் எண்ணெய் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. இதில் 20 முதல் 40 கார்பன் கொண்ட ஹைட்ரோகார்பன் கலவையாக இருக்கிறது. குட்காவை பசை போன்று மாற்ற மொழுகு சேர்க்கப்படுகிறது. பாரஃபின் முக்கியமாக உரங்கள், அழகுசாதன பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு குட்காவில் இடம்பிடிக்கும் ஒவ்வொரு பொருளும், தனிப்பட்ட விதத்திலும் ஆபத்தை விளைவிப்பதாக இருக்கிறது. குட்கா பயன்படுத்துபவர்களுக்கு வாய், தொண்டை, தலை, தொண்டைக் குழி ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் குட்கா பிரச்சனை?
தமிழ்நாட்டில் புகையிலை அடங்கிய குட்கா பான்மசாலா பொருட்களின் விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் 2013ஆம் ஆண்டு தமிழக அரசு முழுவதுமாக தடை விதித்தது. அவ்வாறு இருந்தாலும், பல இடங்களில் எந்தவித தடையும் இன்றி குட்கா கிடைத்து வந்தது.
தமிழ்நாட்டில் மாதவராவ், சீனிவாசராவ் என்ற இருவரும் இணைந்து தடையை மீறி குட்கா விற்று வந்ததாக 2016-ம் ஆண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், உமாசங்கர் குப்தா உட்பட 4பேர் சிபிஐ அதிகாரிகளால் கைதும் செய்யப்பட்டனர்.
மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் வீடுகளில் மேற்கொண்ட சோதனையில், மாதவராவின் டைரி ஒன்று சிக்கியது. அதில் குட்கா விற்பனை குறித்த ரகசியத் தகவல்கள் இடம்பெற்றிருந்தது.
அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பிற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம், இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது. மொத்தம் 40 கோடி அளவில் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள், சிபிஐயால் விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2017-ம் ஆண்டு சட்டப்பேரவையில் எதிர் கட்சித்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் குட்கா எடுத்துவரப்பட்டது. விவாதத்தின் போது, திமுக எம்.எல்.ஏகள், “குட்காவை கையில் வைத்துக்கொண்டே, குட்கா எல்லா பகுதிகளிலும் கிடைக்கிறது, என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினர். எனவே திமுக மீது, தடை செய்யப்பட்ட பொருளைச் சட்டப்பேரவைக்குக் கொண்டுவந்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க அதிமுக, திமுக ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி பேசிக்கொண்டிருந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை குட்கா அமைச்சர் என்று குறிப்பிட்டார். இவ்வாறு இந்த விவாதம் நீண்டது.
தற்போது குட்கா விற்கப்படவில்லையா?
திமுக குட்கா விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே போர்க்கொடி தூக்கியது அனைவருக்கும் தெரிந்ததே. ஆட்சி பொறுப்பேற்றதும், இரண்டு மாதங்களில் குட்கா விற்பதை முற்றிலும், தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார். அதன்படி, கடையில் குட்கா விற்பதாகத் தகவல் கிடைத்தால், சோதனை நடத்தி கடைக்குச் சீல் வைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், பள்ளி கல்லூரிகளுக்கு வெளியே குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதால் மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி கல்லூரி வளாகத்திற்கு வெளியே போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் பற்றி விவாதம் எழுந்ததும், பலர் சமூக வலைத்தளங்களில் குட்கா விற்பனை பற்றிய விவரங்களைப் பதிவிடத் துவங்கினர். #குட்கா_இல்லாத_தமிழ்நாடு ஹேஷ்டேக் பதிவிட்டு @VelSalthi என்பவர், “மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், செக்கணூரணி சுற்று வட்டார பகுதிகளிலும், குட்கா அதிக அளவில் புழங்குகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மதுரை மாவட்டம்,,, சோழவந்தான் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் செக்கணுரணி சுற்று வட்டார பகுதியில் அதிக அளவுக்கு புலக்கத்தில் உள்ளது தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் #குட்கா_இல்லாத_தமிழ்நாடு
— SAKTHI VEL (@VelSalthi) September 12, 2021
@DinosaurOfficial 'திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் கிடைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் கிடைக்கிறது! @TrichyCityPolic @Collector_Try @Anbil_Mahesh @KN_NEHRU @Subramanian_ma @CMOTamilnadu #குட்கா_இல்லாத_தமிழ்நாடு pic.twitter.com/3NomZNUHFh
— டைனோசர் ???? (@DinosaurOffcial) September 11, 2021
இவ்வாறு பலரும் தங்களுக்குத் தெரிந்த, குட்கா விற்பனை தொடர்பான தகவல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
குட்காவிற்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தற்போது விரைவாக இருந்தாலும், இது வரும் நாட்களிலும் தொடர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
