துறைமுக மசோதா நிறைவேற்றினால், சிறிய துறைமுகங்கள் மூலம் மாநிலங்களுக்கு வரும் வருமானம் இழக்கும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
துறைமுக மசோதாவை தமிழக அரசு ஏன் எதிர்கிறது?... மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு எதிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்காகவா?. இப்படி பல கேள்விகள் நமக்கு எழுவதுண்டு.
24-ம் தேதி கடல்சார் மாநில மேம்பாட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கோவா, தெலுங்கானா உள்ளிட்ட கடலோர மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய இந்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, “கடல்சார் மாநில மேம்பாட்டுக்குழு கூட்டம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்திய துறைமுகங்கள் மசோதாவை அரசியல் பார்வையுடன் அணுகாமல் வளர்ச்சிக்கான விஷயமாக பார்க்க வேண்டும். கடல் சார் மேலாண்மை மற்றும் பயன்பாட்டுக்கு துறைமுகங்கள் மசோதா துணைபுரியும். இந்த திட்டத்தில் மாநிலங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்” என்றார்.
தமிழ்நாடு சார்பாக கலந்துக்கொண்ட எ.வ.வேலு “1908-ம் ஆண்டு துறைமுகங்கள் சட்டப்படி திட்டமிடுதல், மேம்படுத்துதல், வரையறைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அதிகாரங்கள் மாநில அரசிடம் உள்ளது. திருத்திய வரைவு இந்திய துறைமுக சட்டம் 2021 மசோதா, அதிகாரங்களை மாநில அரசிடம் இருந்து முழுவதும் பறிக்கிறது.
இந்த விதிகளின்படி, கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமமானது சிறு துறைமுகங்களை ஒழுங்குமுறை செய்யும் அமைப்பாக செயல்பட உள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரிகளை மட்டும் உள்ளடக்கியதாக மாற்றப்பட உள்ளது. எனவே மாநில அரசின் அதிகரங்கள் பறிக்கப்படும் சூழல் ஏற்படும்” என்றார்.
2020 துறைமுக மசோதா, 2021 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில், “துறைமுக உள்கட்டமைப்பின் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதையும், வணிகம் மற்றும் வர்த்தக வசதிகளை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, முடிவெடுக்கும் முறையைப் பரவலாக்கி, முக்கிய துறைமுகங்களின் நிர்வாகத்தை செம்மையாக்கும். வேகமாகவும், வெளிப்படையான முறையிலும் முடிவுகளை எடுப்பதை ஊக்குவித்து, பங்குதாரர்களுக்கு பலனளித்து, சிறப்பான திட்ட செயலாக்கத்திற்கு வழிவகுக்கும்.
வெற்றிகரமான சர்வதேச நடைமுறைகளின்படி மத்திய துறைமுகங்களின் நிர்வாக வழிமுறைகளை மாற்றியமைத்து, முக்கிய துறைமுகங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர இம்மசோதா உதவும்.
முடிவெடுப்பதில் முழு தன்னாட்சியை வழங்குவதன் மூலமும், முக்கிய துறைமுகங்களின் நிறுவன கட்டமைப்பை நவீனப்படுத்துவதன் மூலமும் துறைமுகங்களுக்கு அதிகாரமளித்து அவற்றின் செயல்திறனை அதிகரிக்க இந்த மசோதா வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் 24-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் 9 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “1908-ம் ஆண்டிலிருந்து சிறிய துறைமுகங்களை மாநில அரசே கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது ஒன்றிய அரசு இந்த நடைமுறையை கையகப்படுத்த நினைக்கிறது.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டமுன்வடிவை எதிர்க்க முன்வருமாறு 9 கடலோர மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/D4SNLu7j2c
— M.K.Stalin (@mkstalin) June 22, 2021
மாநில அரசின் கையிலிருந்து சிறிய துறைமுகங்கள் ஒன்றிய அரசின் கையில் சென்றுவிட்டால், மாநில அரசுகளுக்கு அரசின் பங்கு எதுவும் அதில் இருக்காது. ஏற்கனவே துறைமுகம் மற்றும் கடல் போக்குவரத்து ஒன்றிய அமைச்சகம் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் சிறிய துறைமுகங்களை மாநில அரசு நிர்வகிக்க முடியும்.
மாநில அரசுகள், மத்திய அரசின் 2021 துறைமுக மசோதாவை கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
