பெட்ரோல் பயன்பாடு கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போல் அதிகரிப்பு!
இந்தாண்டு ஜூலை மாதத்தில், 23 லட்சத்து 70 ஆயிரம் டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம்.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் வாகன நடமாட்டம் குறைந்தது. இதனால், இந்தியாவின் எரிபொருள் தேவை நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் என்கிற அளவில் குறைந்தது.
கொரோனா பரவல் குறையத் தொடங்கிய பின்பு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மார்ச் மாதம், பெட்ரோல் பயன்பாடு, கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த இயல்புநிலையை நெருங்கியது. பின்னர் கொரோனாவின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியது. இதன் காரணமாக, கடந்த மே மாதம் மீண்டும் எரிபொருள் பயன்பாடு குறைந்தது. பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், ஜூன் மாதம் எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இந்தாண்டு ஜூலை மாதத்தில், 23 லட்சத்து 70 ஆயிரம் டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. இது, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம்.
கொரோனா பரவத் தொடங்கியதற்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 90 ஆயிரம் டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. தற்போது, கிட்டத்தட்ட அதே நிலையை பெட்ரோல் பயன்பாடு எட்டியுள்ளது. கடந்த மாதம் 54 லட்சத்து 59 ஆயிரம் டன் டீசல் விற்பனை ஆகியுள்ளது. இது, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.36 சதவீதம் அதிகம். ஆனால், 2019ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.9 சதவீதம் குறைவு. ’தீபாவளிக்குள் டீசல் விற்பனையும் கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டும்’ என்று இந்திய எண்ணெய் கழகத் தலைவர் வைத்யா தெரிவித்துள்ளார்.
விமானங்கள் அதிகமாக இயக்கப்படாத காரணத்தால் விமான எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் சமையல் எரிவாயு பயன்பாடு மட்டுமே அதிகரித்துள்ளது.
