தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில், இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், கோவாக்சின் கொவிஷீல்டு தடுப்பூசிகள் இலவசமாகச் செலுத்தப்படும்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று வேகமாகப் பரவி வந்தது. தற்போது, கொரோனா 2வது அலை பாதிப்புகள் குறைந்து வருகின்றன. கொரோனா 3வது அலை தொடங்க வாய்ப்பு இருப்பதால், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளத் தடுப்பூசிகளே முக்கிய அரணாக உள்ளன.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த வாரம் 137 மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பெருநிறுவனங்கள் அளிக்கும் சமூக பொறுப்பு நிதியைக் கொண்டு, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில், இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், கோவாக்சின் கொவிஷீல்டு தடுப்பூசிகள் இலவசமாகச் செலுத்தப்படும். அதே நேரம் தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையின் கீழ், தடுப்பூசி போடும் தற்போதைய நடைமுறையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி ஒரு டோஸ் 780 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் 1410 ரூபாய்க்கும் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் சென்னை காவேரி மருத்துவமனையில், 36,000 தடுப்பூசிகள் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இத்திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலாக இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே முதன்முறையாக, இந்தியத் தொழிற் கூட்டமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் #CSRfund மூலம் இலவச #CovidVaccine செலுத்தும் சேவையினை காவேரி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன். pic.twitter.com/yMhbJGXcrl
— M.K.Stalin (@mkstalin) July 28, 2021
