உணவின் தரத்தில் ஏற்படும் பாதிப்பு! பொதுமக்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை?
தமிழ்நாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், உணவின் தரம் பற்றிய சந்தேகத்தை எழுப்புகிறது. அதேபோல், உணவின் தரத்தை கண்காணிக்கும் குழுவின் பணிகள் தற்போதுதான் துரிதப்படுத்தியுள்ளது.
திருவான்மியூர் அவ்வை நகர் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் 10 ரூபாய் பால் பாக்கெட் கிடைக்கும். அரை லிட்டர் வாங்கினால், வீணாகிவிடும் என்று, அருகில் உள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்கள், அந்த கடையில் பால் வாங்குவது வழக்கம். நானும் அந்த கடையில் பால் வாங்கியுள்ளேன். ஒருமுறை நான் பால் வாங்கிய தினத்திற்கு முந்தைய தினம் காலாவதி தேதி போடப்பட்டிருந்த பாலை கடையின் உரிமையாளர் எனக்கு தந்தார். அதைப் பற்றிக் கேட்டபோது, அந்த தினத்திலிருந்து 4 நாட்கள் வரை இதைப் பயன்படுத்தலாம், என்று கடைக் காரர் குறிப்பிட்டார். எனக்குச் சந்தேகம் வலுத்ததும், அவர் இதில் கீழும் மேலுமாகத் தவறாக பிரிண்டிங் செய்துள்ளதால் அப்படி இருக்கிறது. இதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
அதன்பின் ஒவ்வொரு பொருளையும் கவனிக்கும் போது, பல பொருட்கள் காலாவதி தேதி சரிவரக் குறிப்பிடவில்லை என்பது தெரிந்தது. அதாவது, ஒரு பொருள் உருவாக்கப்பட்ட தேதி குறிப்பிட்டிருப்பர். காலாவதி தேதி இருக்காது. கண்ணுக்குத் தெரியாத அளவில் சிறியதாக 'best before 6 months' என்று பதிவிடப்பட்டிருக்கும். அவசரமாகப் பொருட்கள் வாங்குபவர்கள் இதைக் கவனிக்க வாய்ப்பு இல்லை.
பெரிய கடைகளுக்கு, மாதம் ஒருமுறை சென்று அனைத்து பொருட்களையும் வாங்கி வருபவர்கள் நின்று பொறுமையாக ஒவ்வொரு பொருளாகப் பார்த்து வாங்குவர். அதேபோல் இறைச்சிக் கடைகளில் சென்று வாங்கும் பலரும், நேரத்தை மிச்சப்படுத்த ஏற்கனவே வெட்டி வைத்திருக்கும், இறைச்சி துண்டுகளை வாங்கி வருவதுண்டு. மேலும், இறைச்சிக் கடைகளில் முன்கூட்டியே வெட்டி வைத்திருக்கும் மீதம் இருக்கும் இறைச்சிகளை உணவகங்களுக்குக் குறைந்த விலைக்குக் கொடுக்கப்படுவதுண்டு. உணவகங்கள் அதை வாங்கி சுவையூட்டிகளைச் சேர்த்துச் சமைப்பதால், அதன் தரம் பற்றிய விஷயம் வெளியில் தெரிவதில்லை.
சமீபத்தில் நடந்த பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புத் துறை என்ற ஒன்று இருக்கிறது என்பதையும் நினைவூட்டுகிறது.
கெட்டுப்போன சிக்கன
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் பிரபல ஹோட்டலில் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட பலருக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கூலித்தொழிலாளி ஆனந்தம் என்பவரின் குடும்பத்தினர் அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரது 10 வயது மகள் லோஷினிக்கு உடல்நிலை மோசமடைந்ததால், ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கூல்டிரிங்ஸ்
கூல்டிரிங்ஸ் சிக்கன் தந்தூரிக்கு முன்னரே வெளியான பிரச்சனை. ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் மளிகைக் கடை ஒன்றில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த தரணி என்ற அந்த சிறுமி, டோகிடோ கோலா என்ற கூல்டிரிங்ஸை 10 ரூபாய்க்கு வங்கி குடித்துள்ளார். அதன்பின் ரஸ்னா பாக்கெட் ஒன்றையும் வாங்கி குடித்துள்ளார். இரண்டும் குடித்த சில நிமிடங்களிலேயே சிறுமிக்கு வாந்தி எடுத்துள்ளார்.

அதன்பின் மூக்கிலிருந்து இரத்தம் வந்து, சிறுமி மயக்கநிலைக்குச் சென்றுள்ளார். அத்துடன் அவரது உடல் நீலநிறத்தில் மாறியுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், சிறுமி தரணி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து தரணி கூல்டிரிங்ஸ் வாங்கிய கடையை, உணவு பாதுகாப்புத் துறையினர், ஆய்வு செய்தபோது அங்குத் தரமற்ற பல பொருட்கள் இருந்ததும், காலாவதியான பொருட்கள் இருந்தும் கண்டறியப்பட்டது. இச்சம்பவத்திற்குப் பின் தமிழ்நாட்டில் உள்ள பல கடைகளில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பல கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த லக்ஷ்மன் சாய், ஓமேஷ்வர் என்ற இரு சிறுவர்கள், வீட்டின் அருகிலிருந்த கடையிலிருந்து பிளாஸ்டிக் புட்டியில் அமைக்கப்பட்ட குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளனர். குடித்த சிறிது நேரத்திலேயே சிறுவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. எனவே பெற்றோர் பாட்டிலை எடுத்து நுகர்ந்து பார்த்ததில், கெமிக்கல் வாசனை வருவதை உணர்ந்துள்ளனர். உடனே சிறுவர்கள் இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குளிர்பானத்தின் தரத்தைச் சோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
கூல்ட்ரிங்ஸ் வாங்கப்பட்ட கடையில், பல பொருட்கள் காலாவதியானதாக இருந்துள்ளது. அதேபோல் சிறுவர்கள் குடித்த கூல்ரிங்ஸ் கிருஷ்ணகிரியை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. எனவே தயாரிப்பு நிறுவனம், குடோன் ஆகிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பானிபூரி சம்பவம்!
இரு தினங்களுக்கு முன், அம்பத்தூர் பகுதியில், பானிபூரியில் புழுக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை அடித்து உதைத்தனர். அத்துடன், பானிபூரி தயாரித்தவர் மற்றும் விற்பனை செய்தவர் இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இவை அனைத்து மிகச் சமீபத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள். ஒரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டால், அடுத்தடுத்து அத்துடன் தொடர்புடைய பல நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். அதன்படியே இந்நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தனை சம்பவங்கள் நடப்பதை ஒருவர் உயிரிழந்த பின்னரே கவனிக்கிறோம். பல நேரங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் செய்து துறையினர் தரப்பில் சரியான சோதனை செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுவதுண்டு.
தமிழ்நாடு குடும்ப நலத்துறைக்குக் கீழ் இயங்கி வரும் உணவு பாதுகாப்புத்துறையில் பல்வேறு வரைமுறைகள் உள்ளன. 2006-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை நடைமுறைப்படுத்த 32 மாவட்டங்களுக்கு, 32 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியின் அடிப்படையில், 385 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி மற்றும் நகராட்சி கழகங்களின் அடிப்படையில் 199 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் சுகாதார பணியாளர்களிடம் இருந்து பெறப்பட்டவர்கள்.
உணவு பாதுகாப்பும் தர நிர்ணயத்தின் சட்டப்படி, ஆண்டுதோறும் 12 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் எந்த உணவு வியாபாரம் செய்யும் நிறுவனமும், சட்டத்தின் கீழ் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதன் ஆன்லைன் நடைமுறை ஜூன் 13-ம் தேதி துவங்கப்பட்டது.
'அருவம்' படத்தில் காண்பிப்பது போன்று, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் யாரும், அதிரடியாக எல்லாம் செயல்படுவதில்லை. ஏதேனும் புகார்கள் எழுந்தால் மட்டுமே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவர். சமீபத்தில் புதுவண்ணாரப்பேட்டையில் சிறுவர்கள் கூல்ட்ரிங்ஸ் குடித்து உடல் நலக்குறை ஏற்பட்ட விவகாரத்தில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த அதிகாரி குறிப்பிடுகையில், “இங்கு விற்கப்படும் கூல்ட்ரிங்ஸ் அனைத்து, காலாவதியானதாக இருக்கிறது. குழந்தைகளின் உயிருக்கு தற்போது ஆபத்து இல்லை. எனினும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிராண்டட் இல்லாத பொருட்கள் மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம். எங்கள் துறையில், அனுமதி பெறாமலேயே பல சிறிய நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன” என்றார்.
புகார்கள் வந்த பின்னர் மட்டும் சென்று கண்காணிப்பதனால், ஹோட்டல்களிலும், பாக்கெட்டுகளில் அடைத்த உணவுகளிலும் அவற்றின் தரத்தை மேம்படுத்த முடியாது. அதிரடி சோதனைகள் மட்டுமே ஓரளவுக்கு, கலப்பட உணவுகளைக் கட்டுப்படுத்த வழி செய்யும்.
பொதுமக்கள் தரப்பில் செய்ய வேண்டியவை?
பொதுமக்கள் எந்த பொருள் வாங்கினாலும், விலையை மட்டும் பார்த்து வாங்கக் கூடாது. ஒருமுறையாவது உணவின் காலாவதியைக் கவனிக்க வேண்டும். அதேபோல், பொருள் கெட்டுப் போனது என்று சந்தேகம் ஏற்பட்டால், அதைப் பணம் கொடுத்து வாங்கியதால் உண்ண வேண்டும் என்று நினைக்காமல், வாங்கப்பட்ட இடத்தில் விவரத்தைத் தெரிவிக்கலாம்.
அவசரத்திற்காக எப்போது குறைந்த விலையில் கிடைக்கும் கூல்ட்ரிங்ஸ், தின்பண்டங்கள் போன்றவை வாங்கும்போது கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் வாங்கும் உணவுகளின் தரத்தை ஒருமுறைக்கு இருமுறை கவனிப்பது சிறந்தது.

Related Stories
கரோனா காலத்தில் கைகொடுக்கும் அம்மா உணவகங்கள்
மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவும் கரோனா! எப்படித் தடுப்பது?
'மூச்சடைக்கும் அறைகளின் விலை ரூ 6500/-' பெண்கள் விடுதி குறித்த கள ஆய்வு! 2018 அறிவிப்பை நினைவில் கொள்ளுமா அரசு?
வீணடிக்கப்படும் உணவு! நாம் ஒவ்வொருவரும் எப்படிக் கையாளுவது?