வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு! அதிமுக, பாஜக-வின் நிலைப்பாடு?
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு பாஜக மற்றும் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றம். கிட்டத்தட்ட ஒருவருடங்கள் நெருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
வேளாண் சட்டம் 2020 செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்குத் தமிழ்நாடு அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அப்போது எதிர்க் கட்சியாக இருந்த திமுக, அதிமுகவைக் கடுமையாகச் சாடியது. வேளாண் சட்டத்திற்குக் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றின. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு பதிவு செய்யப்படாதது, விவசாயிகள் மத்தியில் கோவத்தையும் ஏற்படுத்தியது.
எனினும் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்ட அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி, “வேளாண் சட்டத்தைப் பொறுத்தவரையில், விவசாயிகளைக் கட்டுப்படுத்தும் விஷயங்கள் எதுவும் இல்லை. வேளாண் பொருட்களுக்கு விலை மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையின் நோக்கங்கள் ஆகியவை இவற்றின் மூலம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விளை பொருட்களின் வணிகம் மற்றும் வர்த்தக சட்டத்தைப் பொறுத்தவரையில், வேளாண் பொருட்களை டிரேட் ஏரிய என அறிவிக்கப்படும் எந்த இடத்திலும் விற்பனை செய்ய அனுமதிப்பதால், விவசாயிகளுக்குச் சுதந்திரம் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை வளாகத்தில் பொருட்களை விற்பனை செய்யும்போது வர்த்தகர்களிடமிருந்து ஒரு சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நெல், கோதுமைக்குச் சந்தைக் கட்டணமாக மூன்று சதவீதமும் உள்ளாட்சி மேம்பாட்டுச் சிறப்பு வரியாக மூன்று சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர இடைத் தரகர்கள் 2.5 சதவீத கண்டனம் வசூலிக்கின்றனர்.
விவசாயம் என்பது மாநிலப் பட்டியலிலிருந்தாலும் உணவுப் பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் என்பது மத்தியப் பட்டியலில்தான் இருக்கிறதென்றும் ஆகவே இந்தச் சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு” என்று நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டு அரசின் செயல்பாடுகளை மற்ற கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு பிரச்சனைகளையும், தங்கள் வலுவான எதிர்ப்பை பதிவு செய்தனர். சமூக வலைத்தளங்களில், கேரளாவில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஒப்பிட்டுப் பல பதிவுகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு சட்டப்பேரவையில், தீர்மானம் நிறைவேற்றியது. அத்துடன் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை, முதலமைச்சர் திரும்பப்பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தனர். மற்ற அனைத்து கட்சியினரும், தீர்மானத்திற்கு ஆதரவே தெரிவித்தனர்.
வெளிநடப்பிற்குப் பின் பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் “வேளாண் மக்கள் நல்லமுறையில் வாழ வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால் மாநில அரசு உள்நோக்கத்துடனே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆகையால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் இந்த தீர்மானத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுகையில், “தமிழ்நாடு விவசாயிகள் எவரும் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்க்காமல் மகிழ்ச்சியாக வரவேற்கும் போது, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானம் கண்துடைப்பு நாடகம்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகள்
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடம் ஆக உள்ளது. நிறைவேற்றப்பட்டதும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கிவிட்டனர். டெல்லி எல்லைகளில் 8 மாதங்களுக்கு முன் ஒன்றுகூடிய பஞ்சாப், ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் மாநில விவசாயிகள் பனி, வாட்டும் குளிர், வதைக்கும் வெயில், மிரட்டும் கொரோனா அச்சுறுத்தல் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுவரை நிறைவுபெறாத இந்த போராட்டத்திற்குப் பல கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், போராட்டத்திலிருந்து பின்வாங்க விவசாயிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற இயலாது, ஆனால் திருத்தம் செய்யலாம் என்று முன்வைத்து வருகிறது.
