மறைந்திருக்கும் பெருந்தொற்று! எண்ணூர் கிராமங்கள் குறித்து எச்சரிக்கை Report!
“ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள், சமீபத்தில் பக்கிங்காம் கால்வாயில் வீசப்பட்டன. அதிலிருந்து ஊசியொன்று ஒருவரது காலில் குத்தியதில், அவரது கால் அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்று எண்ணூர் பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நிலை குறித்து நபர் ஒருவர் குறிப்பிட்டார்.
எண்ணூர் பகுதியில், TANGEDCO சாம்பல் கழிவை, கொசஸ்தலை ஆற்றில் கலப்பது பற்றி பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல், அப்பகுதியில் உள்ள துறைமுகத்தால் ஏற்படும் பிரச்சனை பற்றியும் கட்டுரையில் பதிவு செய்துள்ளேன். ஆனால், எண்ணூர் பகுதியே ஒரு தொழிற்சாலைகளின் கூடாரம்போல் செயல்பட்டு அங்கு வாழும் மக்களை எந்த திசையிலும் திரும்ப முடியாத அளவு, அசுத்தம் செய்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில், 'ஆரோக்கிய ஆற்றல் முன்முயற்சி' வெளியிட்ட அறிக்கை விளக்குகிறது. என்னென்ன தொழிற்சாலைகள், என்னென்ன பிரச்சனைகள் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை மாநகரின் வடக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் எண்ணூர் பகுதியில் பல தொழிற்சாலைகள் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. குறிப்பாக அதிக அளவில் மாசு வெளியிடும் ஆலைகள் 5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைகள் நீர், நிலம், காற்று என்று அனைத்தையும் பாழ்படுத்தி வருகிறது.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் துகள்கள் காற்றில் கலந்து எளிதில் மாசடையச் செய்கிறது. அதேபோல், அதிக அளவில் கனரக வாகனங்கள், எண்ணூர் பகுதியில் வந்து செல்வதால், சாலைகளில் கடக்கும் போது காற்றில் மாசு கலந்திருப்பதைக் கவனிக்க முடியும். “கழிவு புகையால் நிறைந்த கண்ணாடி கூண்டைப் போல எண்ணூர் பகுதி உள்ளது” என்று ஆரோக்கிய ஆற்றல் முன்முயற்சி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிவரும் கழிவுகளால், கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு, நிலத்தடி நீர் என்று அனைத்தும் மாசடைந்துள்ளது. அதேபோல், அப்பகுதியில் உள்ள பிற உயிரினங்களின் அளவு வேகமாகக் குறைந்துள்ளது. மற்றொரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுவது, இத்தனை தொழிற்சாலைகள் இங்கு அமைந்திருந்தாலும், வேலையில்லா திண்டாட்டம் என்பது குறையவே இல்லை என்று குறிப்பிடப்படுகிறது.
எத்தனை தொழிற்சாலைகள்? எவ்வளவு மாசு?
5 கிலோ மீட்டர் சுற்றளவில், அனல்மின் நிலையம், நிலக்கரி சாம்பல் குளம், இரண்டு துறைமுகங்கள், உரத்தொழிற்சாலைகள், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், எண்ணைச் சேமிப்பு முனையங்கள், இரும்பு உருக்காலைகள், சிமெண்ட் ஆலைகள் உள்ளிட்டவையும், மற்ற சிறிய ஆலைகளும் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு நிகழ்ந்த தொழிற்மயமாதல் காரணமாகவே இத்தகைய தொழிற்சாலைகள் உருவாகியுள்ளது.
மீன்வளம், விவசாயம், சதுப்புநிலம் போன்றவற்றின் நிலை பற்றி முந்தைய கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். அவை தவிர இந்த பகுதியில் 2016-ம் ஆண்டு முதல் காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றை ஆய்வு செய்ததில், தர நிர்ணயத்தை விட 1.1 முதல் 3.8 மடங்களும் மோசமாக உள்ளது என்பதை ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மேங்கனீசு, சிலிக்கா, நிக்கல், ஈயம் போன்றவையும் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
ஊர்ணாம்பேடு, காட்டுப்பள்ளி, சிம்மபுரம், காட்டுக்குப்பம் ஆகிய கிராமங்களில் மட்டும் ஆய்வு செய்ததில், இத்தகைய நிலையை கண்டறிந்துள்ளனர், ஆய்வு குழுவினர்.

காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் கூறுகையில், “கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு ஆற்று நீரும், கால்வாய் நீரும் கண்ணாடியைப் போன்று சுத்தமாக இருக்கும். நதியின் அடி மணலை தெளிவாகப் பார்க்க முடியும். காசு தண்ணீருக்குள் விழுந்தால் கூட எடுக்க முடியும். தற்போது நிலமை மாறிவிட்டது.
கோத்தாரி உர தொழிற்சாலையிலிருந்து கந்தக வாடை வீசுகிறது. அதைச் சுவாசிப்பதே மிகவும் சிரமமாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
தொழிற்சாலைகளின் கழிவுகளைத் தவிர இந்த பகுதியில் பெருமளவில் மருத்து கழிவுகள் கொட்டப்படுவதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டனர். 29 வயதான நபர் ஒருவர் கூறுகையில், “சிரிஞ்சுகள், ஊசிகள் போன்ற மருத்துவமனை கழிவுகள் பைகளில் அடைக்கப்பட்டு நதியில் வீசப்பட்டுவிடுகின்றன. அந்த பைகளில் இருக்கும் ஊசிகள் வலையில் சிக்கி, அவற்றைக் கிழித்துவிடுகிறது” என்றார்.
அதேபோல் “ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள், சமீபத்தில் பக்கிங்காம் கால்வாயில் வீசப்பட்டன. அதிலிருந்து ஊசியொன்று ஒருவரது காலில் குத்தியதில், அவரது கால் அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்கிறார் 58 வயதான நபர்.
உர்ணாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 37 வயது நபர் கூறுகையில், “இங்குக் கிடைக்கக்கூடிய நீரில் குளித்தால் உடல் வீங்கிப் போய்விடுகிறது. உடலெல்லாம் அரிப்பு ஏற்படுகிறது. புற்றுநோய், காசநோய், முடக்குவாதம், காய்ச்சல், தலைவலி, முட்டி வலி எல்லாம் சாதாரண நோய்போன்று இங்கு உள்ளது” என்கிறார்.
“சிறுமிகள் 9 வயதில் பூப்படைந்துவிடுகின்றனர். சில பெண்களுக்கு 15 நாட்களில் மாதவிடாய் ஏற்படுகிறது. பலருக்கு முறையான இடைவெளியில்லாமல் மாதவிடாய் ஏற்படுகிறது” என்கிறார் காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்.
இவ்வளவு பிரச்சனைகளைச் சந்திக்கும் மக்கள், பொருளாதார ரீதியிலும், கல்வி அறிவு சார்ந்தும் வளர்ச்சியடைய முடியாமல் தடைப்பட்டுள்ளனர். அவர்கள், பெரும்பாலானோர், தொழிற்சாலைக்காக நிலத்தை நாங்கள் விட்டுக்கொடுத்ததே எங்கள் தவறு என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
