அரசு சார் நிறுவனத்தின் தவறுகள்... ஆற்றை அழித்து மின் உற்பத்தி!
வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து, வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழலில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது?. அரசு சார் நிறுவனம் சட்டவிதிகளை முறையாகச் செயல்படுத்தாததால் அவதிப்படும் மீனவர்கள்.
எண்ணூர்: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பரந்து விரிந்த பகுதி. எண்ணூர் துறைமுகம், எண்ணூர் அனல்மின் நிலையம், ரயில் நிலையம், கொசஸ்தலை ஆறு என்று சென்னையின் முக்கிய ஆதாரமாக எண்ணூர் பகுதி செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கலப்பதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கலப்பது, அப்பகுதி மக்களின் வீடுகளில் சாம்பல் துசுகள் மாசடைய செய்வது போன்ற பிரச்சனைகளை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
இது பற்றிக் கடந்த டிசம்பர் மாதத்தில் செய்தியாளர் அபர்ணா களத்தில் சென்று ஆவணப்படமாகப் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், நிலத்தடி நீர் தவிர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும்.

அதேபோல் சமீபத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கு நிலக்கரி கன்வேயர் அமைக்க கொசஸ்தலை ஆறு ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே மிகவும் பிச்சனைகுரிய வாழ்வாக இருக்கும் கிராமமக்கள் அனல்மின் நிலையத்தின் செயல்பாடுகளை கண்டித்து போராட்டம் முன்னெடுத்துள்ளனர். அதேபோல் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, நீரியல் ஆய்வாளர்கள் என்று பலரும் இதற்காகக் குரல் கொடுக்கின்றனர்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக டிவிட்டர் பக்கத்தில், “அனுமதியை ஒரு வழித்தடத்திற்கு வாங்கி விட்டு நீர்நிலையை ஆக்கிரமித்து வேறு ஒரு வழித்தடத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கு நிலக்கரி கன்வேயர் பெல்ட் அமைத்து வருகிறது
எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சாரக் குழு கண்டறிந்துள்ள இந்த நீர் நிலை ஆக்கிரமிப்பை அரசு உடனடியாக தடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அனுமதியை ஒரு வழித்தடத்திற்கு வாங்கி விட்டு நீர்நிலையை ஆக்கிரமித்து வேறு ஒரு வழித்தடத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கு நிலக்கரி கன்வேயர் பெல்ட் அமைத்து வருகிறது #TANGEDCO. pic.twitter.com/PcSVo5qCdH
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@Poovulagu) July 14, 2021
TANGECOD நிறுவனத்தால், எண்ணூர் பகுதியில் 1994 முதல் 1996க்கு இடைப்பட்ட காலத்தில் அனல்மின் நிலையத்தின் Stage 1 நிறுவப்பட்டது. அந்த அனல்மின் நிலையத்தால் 3*210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2014-ல் நிறுவப்பட்ட Stage 2 ல் 2*600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்து Stage 3-ல் புதிதாக சில யூனிட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் அனைத்தும் 5 பெரிய குழாய்கள் மூலம் குட்டைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கொசஸ்தலை ஆறு, அருகில் இருக்கும் கிராமம், உப்பளம் என்று அனைத்து இடங்களையும் பாழாக்குகிறது.
நிலக்கரியை எரிக்கும் போது சில வாயுங்கள் காற்றில் கலந்து வளிமண்டலத்திற்குச் சென்றுவிடும். மீதமிருப்பவை சாம்பலில் தங்கியிருக்கும். அது தண்ணீரில் கலக்கிறது. “இந்த சாம்பலில் செல்லினியம் என்ற பொருள் இருக்கிறது. அந்த சாம்பலை மீன்கள் சாப்பிட்டால் அவற்றுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும்” என்கிறார் காட்டுக்குப்பம் மீனவர் சங்கத் தலைவர்.
பல ஆண்டுகளுக்கு முன் உப்பளம், மீன்பிடித்து தொழில் என்று மக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருந்த கொசஸ்தலை ஆறு பகுதி பாதி அளவில் சாம்பலால் மூடியுள்ளது. எண்ணூர் கழிவெளி பகுதியில் ஆரணியாறு, கொசஸ்தலை ஆறு இரண்டும் சேர்ந்து கடலில் கலக்கிறது. இதன் அருகில் தான் NCTPS அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் குட்டை சேமிக்கப்படுகிறது.

சாம்பல் கழிவுகள் காற்றில் கலப்பதற்கு முக்கிய காரணம், NCTPS அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளைக் குட்டைகளில் சேமிக்க ஈரப்பத்தை தக்கவைக்கவில்லை. எனவே அது எளிதில் காற்றில் கலந்து எல்லா பகுதியையும் மாசடையச் செய்கிறது.
சாம்பல் கொட்டும் இடம், அப்பகுதி மக்களிடம் இருந்து பணம் கொடுத்துப் பெற்றுக்கொண்டு TANGECOD நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. அனல்மின் நிலைய பணிகள் துவங்கியபோது, எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதி அளித்தப்பினரே துவங்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த பகுதியில் பெறப்பட்ட நிலத்திற்கான தொகையும் சரிவர கிடைக்கவில்லை என்கின்றனர், அப்பகுதி மக்கள்.
கொசஸ்தலை ஆறு?
கொசஸ்தலை ஆறு என்று தற்போது குறிப்பிட்டாலும், அதன் பெயர் கொற்றலை ஆறு. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்டம் உள்ளிட்ட வட தமிழகத்தில் இந்த ஆறு பாய்கிறது. எண்ணூர் கழிவெளியில் தான் இந்த ஆறு கடலில் கலக்கிறது. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறு இவை இரண்டுமே எண்ணூர் கழிவெளியில் வந்துசேர்ந்து அங்கிருந்து கடலில் கலக்கின்றன. இந்த பகுதியில் தண்ணீர் சிறிய வாயில் வழியாகக் கடலுக்கும் செல்வதால், கழிவெளி நீர் தேங்கிப் பரந்து விரிந்து காணப்படுகிறது. அந்த பகுதி மக்கள் குறிப்பிடுகையில், அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தும் தண்ணீர் கூட இந்த கழிவெளி பகுதியின் முகத்துவார பகுதியில் தான் கலப்பதாகக் தெரிவிக்கின்றனர்.
அரசு சார் நிறுவனமே சுற்றுச்சூழலைப் பாதிப்படையச் செய்கிறது என்பது, எவ்வளவு பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
எனென்றால், இங்கு மீனவர்களைத் தாண்டி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நீரியல் வல்லுநர் கனகராஜ் உள்ளிட்டோர் இணைந்து ஆய்வறிக்கை தயாரித்துள்ளனர். அதைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, துறைசார் அதிகாரிகள் அனைவருக்கும் கொடுக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆய்வறிக்கை பற்றி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆறுகளிலிருந்து ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்த கழிவெளி வாயிலாக வெளியேறுகிறது. இதனை ஆக்கிரமித்துக் கட்டிடக் கழிவுகளையும், சாம்பல் கழிவுகளையும் அனல் மின் நிலையம் கொட்டி வருகிறது. இதனால் கழிமுக பகுதியில் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சாம்பல் கழிவுகளால், இந்த பகுதியில் வாழும் இறால் உள்ளிட்ட உயிரினங்கள் அதிக அளவில் பாதிப்படைகின்றன. இவை உண்பதற்கும் தகுதியற்று போயுள்ளது. சாம்பல் கழிவுகளை செப்பாக்கம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லும் பணியும், வயலூர் பகுதியில் நிலக்கரி எடுத்துச்செல்லக் கட்டப்பட்டு வரும் வழித்தடமும் எந்தவித சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே பலமுறை எண்ணூர் அனல்மின் நிலையத்தின் செயல்பாடுகளை நீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில் தொடர்ந்து அதே தவறைச் செய்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டனர்.
அதேபோல் அப்பகுதியில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சம்பல் கழிவுகளை முற்றிலும் அகற்றும்படி போராடி வருகின்றனர்.
சாம்பல் கழிவு தவிர, பிற தவறுகளையும் செய்து வரும் வடசென்னை அனல்மின்நிலையம்.
வெறும் சாம்பலினால் மட்டுமல்ல, இங்கு வெளியேறும் புகையினாலும் பாதிப்பு உள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. healthy energy initiative india என்ற அமைப்பு சார்பாக எண்ணூர் பகுதியில் இருக்கும் இரண்டு Stage அனல்மின் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்று அமைச்சகம் (MOEFC) சார்பாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு தொழிற்சாலைகளின் புகைபோக்கியிலும் வெளிவரும் புகைக்கும் அளவீடு வழங்கியிருப்பர். அந்த அளவீட்டை MOEFC 2015 வரைமுறைப்படுத்தியது. அதன்பின் இதுவரை மறு ஆய்வு செய்யப்படவில்லை.
மார்ச் 2021ல் ஏற்கனவே வழங்கப்பட்ட அளவீட்டை, 2024-ம் ஆண்டுவரை நீட்டித்துள்ளனர். இவ்வாறு நீட்டிப்பதால், வரைமுறைக்குள் இருக்கும் அளவீட்டை விடத் தொழிற்சாலைகள் அதிக அளவில் மாசை வெளியிடுகின்றன.

இதில் சல்பர் டை ஆக்ஸைட், நைட்ரஜன் ஆக்ஸைட் உள்ளிட்ட வாயுங்கள் நிறைந்திருக்கும். இவை உடலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை.
“எங்கள் குழு எண்ணூரில் உள்ள இரண்டு அனல்மின் நிலையத்தின் புகைப்போக்கியில் வெளியாகும், புகையின் அளவை கணக்கீட்டுத் துறையிடம் இருந்து பெற்று ஆய்வு செய்தோம். அதில், கொடுத்திருக்கும் வரைமுறையைவிட 53 சதவீதம் அதிகமாக மாசு வெளியிடப்பட்டுள்ள என்பது கண்டறிந்தோம்” என்கிறார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பூஜா.
இவ்வாறு சென்னையில் இருக்கும் அரசு சார் நிறுவனமான TANGECOD எந்த வித சுற்றுச்சூழல் வரைமுறையும் இதுவரை பின்பற்றவில்லை என்று தெரியவருகிறது.
