ஈமு கோழி தமிழ்நாட்டில் எப்படிப் பிரபலமானது? மோசடி மற்றும் உண்மை?
ஈமு கோழி வளர்ப்பைப் பிரபலப்படுத்த சத்யராஜ், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பாக்கியராஜ் என்று பல நடிகர்கள் வைத்துக்கூட விளம்பரங்கள் செய்யப்பட்டது.
ஈமு கோழி... 11லிருந்து 13 வருடங்களுக்கு முன்பு, சரியாக ஆண்டு எனக்கு நினைவில்லை, ஆல் இந்தியா ரேடியோவின் கன்னியாகுமரி வானொலியில் விளம்பரம் வரும். நல்ல லாபம் ஈட்டு தொழில்... இலவசமாகக் கூடு அமைத்துத் தரப்படும்... என்று ஏராளமான அறிவிப்புகளுடன் அந்த விளம்பரம் இருக்கும். ஈமு முட்டை விற்றால் 2 ஆயிரத்திலிருந்து துவங்கி இன்னும் பல ஆயிரம் ரூபாய்கள் லாபம் கிடைக்கும் என்பது போன்ற விவரங்கள் கூறப்படும். பொதுவாக எங்கள் வீட்டில் 6.30 மணியிலிருந்து 8.30 மணி வரை மட்டுமே வானொலி ஒலிக்கும். இந்த நேரத்தில் ஒவ்வொரு இடைவேளையிலும் ஈமு கோழி விளம்பரத்தைக் கேட்க முடியும்.
இந்த விளம்பரத்தைக் கேட்டு, அம்மாக்கள் வயதில் இருப்பவர் பலரும் அந்த கோழி வாங்கி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்குமாம். நம் ஊரில் வளர்க்க முடியுமா? என்று சந்தேகங்களைக் கேட்டு உலவியதும் நினைவிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த விளம்பரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. திடீரென்று விளம்பரம் நிறுத்தப்பட்டது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.
2012-ம் ஆண்டில் ஈமு கோழி வளர்ப்பில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. அந்த வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளனர். நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈமு கோழி வளர்ப்பு திட்டம்?, எப்படி மோசடி நடைபெற்ற என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஈமு கோழி?
ஆஸ்திரேலியா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட ஈமு கோழியின் அறிவியல் பெயர், Dromaius novaehollandiae. ஈமு கோழியின் கிளை இனம் என்று சொல்லப்படும் டாஸ்மேனியன், கங்காரு தீவு மற்றும் கிங் தீவு ஆகியவை ஐரோப்பியர்களின் குடியேற்றத்திற்குப் பின் அழிந்துவிட்டது. தற்போது அவ்வினத்தில் இருக்கும் ஒரே உயிரினம் ஈமு கோழி மட்டுமே.
6 அடி உயரம் வரை வளரும் ஈமு கோழிகள், ஒரு மணி நேரத்தில் 50 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும் திறன் பெற்றுள்ளன. தாவரங்கள் மற்றும் பூச்சிகளையே பெரும்பாலும் உண்ணுகின்றன. தண்ணீர் அருந்துவது மிகவும் குறைவு. ஆனால் தண்ணீர் கிடைக்கும் வேளையில் அதிக அளவில் அருந்திக்கொள்ளும்.

ஆஸ்திரேலியா நாட்டை பொறுத்தவரையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். ஒரு முட்டையின் எடை சராசரியாக 600 கிராம் எடை கொண்டிருக்கும். ஒரு காலத்தில் பல முறை கூட முட்டை இடலாம். ஆண் ஈமு கோழிகளே அடை காத்தலில் ஈடுபடுகின்றன. 8 வாரங்கள் வரை அடைகாக்கும் போது, ஆண் ஈமுகள் உணவோ, தண்ணீரோ எடுத்துக்கொள்வதில்லை. அத்துடன் ஆண் ஈமு கோழிகளே குஞ்சுகளை வளர்க்கின்றன.
எப்படி இந்த ஈமு கோழி பிரபலமானது?
சில நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஈமு கோழிகளைப் பற்றிய விளம்பரங்கள் செய்து வந்தனர். இதன் ஆரம்பம் என்ன என்று தெரியவில்லை. சத்யராஜ், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பாக்கியராஜ் என்று பல நடிகர்கள் கூட, ஈமு கோழி வளர்ப்பு பற்றிய விளம்பரங்களில் நடித்திருந்தனர். இது ஒரு கவர்ச்சிகரமான விளம்பரமாக ஒலித்தது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட `சுதி’ ஈமு கோழி நிறுவனத்தினர் பல ஆபர்களை அள்ளித்தெளித்தனர். அதுவும் விவசாயம் பொய்துபோய், தண்ணீர் இல்லாமல் மிகவும் கடினமான சூழலைச் சந்தித்த காலத்தில் என்பதால் விவசாயிகள், இந்த தொழில் தங்களுக்கு கைகொடுக்கும் என்று நம்பினர். சுதி நிறுவனத்தை நடத்தியவர்கள் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் மற்றும் வாசு, தமிழ்நேசன் ஆகியோராவர்.
ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில், ஒன்றரை லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை முதலீடு செய்தால், உங்கள் நிலத்தில் கோழிகளுக்கான கொட்டகை அமைத்துத் தரப்படும். அதில் ஆறு கோழிகள் விடப்படும். அதற்குத் தேவையான தீவனமும், மாதக் கூலியாக 6000 முதல் 9000 வரை பணம் வழங்கப்படும். கோழி இரண்டு வயதாகி முட்டையிடும் வேளையில் முதலீட்டுப் பணத்தைத் திருப்பித் தந்துவிட்டு, கோழிகளை எடுத்துக்கொள்வோம். விவசாயத்தில் போடுவதைவிட, ஈமு கோழி வளர்ப்பில் செலவழித்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
ஈமு கோழியில் கறி, கொழுப்பு, தோல் என்று அனைத்தும் நல்ல விலைக்குப் போகும். கோழியின் தோலைச் சாயம் போட்டுப் பயன்படுத்தலாம். இறகுகளை வைத்து பிரஷ் தயாரிக்கலாம். கொழுப்பு இல்லாததால் சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் உடையவர்கள் இதைத் தாராளமாக உண்ணலாம். கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்ற இறைச்சி வகைகளைவிட ஈமுவின் இறைச்சி அதிக சத்துமிக்கது என்பது போன்ற பேப்பர் விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்பட்டது.
இறுதியில் கோழி வளர்ந்தபின், விற்பதற்குத் தேடியபோது அந்த நிறுவனம் காணாமல்போய் விட்டது. சில நாட்கள் பொறுத்த விவசாயிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க துவங்கினர். அப்போதுதான் இந்த விவகாரத்தில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மொத்தம் 121 பேர் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சுதி நிறுவனத்தின் உரிமையாளர்கள்மீது வழக்குப் போடப்பட்டது. வழக்கின் விசாரணை 10 வருடங்களாகக் கோவை முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கின் தீர்ப்பில், மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.47 கோடி அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதுபோன்ற மோசடிகள் நடப்பது முதல் முறையா? என்றால் இல்லை. மண்ணுளிப் பாம்பு மோசடியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைச் 'சதுரங்க வேட்டை' படத்தில் விரிவாகக் காண்பித்திருப்பர். அந்த முறைதான் ஒவ்வொரு மோசடிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை முறையில் வளரும் ஓர் உயிரினத்தை வைத்து அது ஆரோக்கியம் தரும் உணவு, பாதுகாப்பானது, லாபமானது என்று குறிப்பிட்டு இதுபோன்ற மோசடி வேலைக்கள் தொடர்கின்றன. இந்த மோசடி திட்டங்கள் இனி நடக்காது என்று யாரும் நம்பி இருக்க முடியாது. எந்த வழியிலாவது வந்துகொண்டே இருக்கும்.
