உங்கள் குணத்துக்கும் சிறுவயது சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இவை உங்களுக்கும் நடந்திருக்கலாம்!
உங்களின் குணம் மாறிப்போயிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா. உங்களின் அமைதி, கோபம், படபடப்பு, கூச்சம் என பல்வேறு குணங்களுக்குப் பின்னால் இதுபோன்ற சிறு வயது சம்பவங்கள் காரணமாக இருக்கலாம்!
சிறுவயதில் நமக்கு ஏற்பட்ட உணர்வு ரீதியான பாதிப்புகள் நமது வயோதிக காலம் வரை நமது குணாதிசயங்கள் மூலம் எதிரொலிக்கும். கோபம், பதற்றம், இயலாமை, வெறித்தனம், எதிர்மறை எண்ணங்கள் போன்ற குணங்கள் நம் அனைவருக்கும் அவ்வப்போது வரும் உணர்வுகள்தான். ஆனால், அதுவே நமது குணாதிசயமாக மாறிவிடக்கூடாது. அவனுக்குக் கோபம் வரும் என்பதற்கும், அவன் கோபக்காரன் என்று பெயர் எடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கீழே குறிப்பிட்டுள்ள உணர்வுகளில் எந்த உணர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் அதற்கு சிறுவயதில் ஏற்பட்ட குறிப்பிட்ட உணர்வு ரீதியான பாதிப்புகள் சரிதானா? என்று பாருங்கள்.
1. சமுதாயத்துடன் ஒத்துப்போகாமல் இருப்பது
திருமணம், பார்ட்டி போன்ற சந்தோஷ நிகழ்வுகளிலும் தனியாக ஒரு ஓரமாக இருப்பது. சில நேரங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் ஏதோ ஒரு காரணத்தைக் கூறிவிட்டு ஒதுங்கியே இருப்பது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், நான்கு பேர் என்னை சுற்றி சூழ்ந்து இருந்தால் கூச்சமாகவும், பயமாகவும் இருக்கும் என்பார்கள்.
சிறுவயதில் குழந்தையை நான்கு பேர் இருக்கும் போது திட்டுவது, மட்டமாகப் பேசுவது, அடிப்பது, கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் பெற்றோர்கள் அல்லது உறவினர்களால் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் சமுதாயத்தைச் சந்திக்க அச்சம் கொள்கின்றனர்.
2.வெற்றியைப் புறக்கணிப்பது
தனக்கு வெற்றிக்கான வாய்ப்பு கிடைத்தும், அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அதைப் புறக்கணிப்பது அல்லது முறையாகக் கையாளத் தெரியாமல் அலட்சியப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது.
குழந்தையாக இருக்கும்போது, வெற்றிபெற வேண்டும் என அடிக்கடி பெற்றவர்கள் வலியுறுத்துவது. 99/100 மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டாமல், அந்த ஒரு மதிப்பெண் போனதற்கு மிகப்பெரிய அக்கப்போரில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் குழந்தைகள் வளர வளர என்ன செய்தாலும் யாரும் நம்மைப் பாராட்டப் போவதில்லை. இப்படியே இருந்துவிடலாம் என்னும் மெத்தனம் தோன்றும்.
3. அடுத்தவர் பிரச்னைகளுக்குப் பலி ஆடாக மாறுவது
தனது பிரச்னைகளை கவனிக்காமல், பிறரது பிரச்னைகளுக்கு தீர்வளிக்க முதல் ஆளாகச் செல்வது.
குழந்தையாக இருக்கும்போது அவருடைய பொறுப்புகள் என்ன? என்பதை பெற்றோர்கள் எடுத்துரைக்காமல் போனது. குழந்தையின் சின்ன சின்ன வேலைகளையும் செய்யவிடாமல் அவர்களை சொகுசாக வளர்ப்பது.
4. உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருப்பது
சந்தோஷம், துக்கம், அழுகை என எதையுமே வெளிக்காட்டாமல், அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு புழுங்குவது.
அதிக கண்டிப்பான பெற்றோர்களால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் நிலை. பேசக்கூடாது, சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது, யாருடனும் பழகக் கூடாது போன்ற அதீத கண்டிப்பு.
5. கோபம்
குழந்தைப் பருவத்தில் அடக்கப்பட்ட கோபம், வளர்ந்த பிறகு கோபக்காரராக மாறுவதற்கு வழிவகுக்கும். குழந்தையாக ஒரு பொம்மையை உடைப்பது போன்ற எளிமையான ஒன்றைக்கூட வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்காது என்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
6. மரணம்
பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் ’நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று பயமுறுத்தியிருக்கலாம். இதனால் இளமைப் பருவத்தில் தான் நேசிப்பவர் யாரேனும் மரணித்தால் வெறித்தனமாக மாறிவிடுவார்கள் அல்லது அதிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.
7. முடிவெடுக்கும் திறன் இல்லாமை :
குழந்தைக்குத் தேவையான அனைத்துமே நான் பார்த்துக் கொள்வேன் என்று குழந்தைகளிடம் கலந்தாலோசிக்காமல், என்ன படிக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும் ? என்ன உடையை உடுத்த வேண்டும் ? என அனைத்து முடிவுகளையும் எடுக்கும் பெற்றோர்களால், பிற்காலத்தில் தனக்கு என்ன தேவை? என்பது தெரியாமல் முடிவெடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
8. தேவைக்கு அதிகமாகப் பதிலளிப்பது
சிறுவயதில் அதிகமாகப் பெரியவர்களால் குறை கூறப்பட்டிருப்பார்கள். இவர்கள் பெரியவர்கள் ஆனதும் ஒரு சிறிய தவறு செய்தாலும் உடனடியாக மிகப்பெரிய பதிலையும், அதற்கான காரணத்தையும் கூறிவிடுவார்கள். எங்கே தன்னை தவறாகப் புரிந்து கொள்வார்களோ என்னும் பயமே இதற்குக் காரணம்.
9. அமைதி
நின்றால் குற்றம், பேசினால் குற்றம், என்ன பேசினால் குற்றம் என பெற்றோர்கள் அடிக்கடி கூறும்போது இதற்குப் பேசாமலேயே இருந்து விடலாம் என்று நமக்கு தோன்றிவிடும்.
இனி நீங்கள் உணர்வு ரீதியாகப் போராடும் உங்கள் நண்பர்கள் அல்லது பிள்ளைகளைச் சந்திக்கும்போது, சிறுவயதில் அவர்கள் உணர்வு ரீதியாக என்ன போராட்டங்களை சந்தித்துள்ளனர் என்பதைப் பேச்சுக்கொடுத்துக் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்குப் பதில் கிடைக்கும். பிரச்னைக்கான காரணம் தெரிந்தால்தானே அதிலிருந்து மீண்டு வர முடியும்.
