மின்வேலியில் சிக்கி இறக்கும் யானைகள் அதிகரிப்பு! யார் காரணம்?
இந்திய அளவில், மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும், யானைகள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சட்டவிரோத மின்வேலியில் சிக்குண்டு பலியாகும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடுமுழுவதும் கடந்த ஆறு ஆண்டுகளில் 474 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்ட தகவலுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 90 யானைகளும், ஒடிசா மாநிலத்தில் 73 யானைகளும், தமிழ்நாட்டில் 68 யானைகளும் உயிரிழந்துள்ளன.
2014 முதல் 2020-ம் ஆண்டுக்குள் மின்வேலியில் சிக்கி மட்டும் 68 யானைகள் உயிரிழந்தது, தமிழ்நாட்டில் உள்ள யானைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. ரிவால்டோ யானையைக் காட்டிற்குள் அனுப்ப வேண்டும் என்று ஒரு தரப்பும், மற்றொரு தரப்பிலிருந்து அனுப்பக் கூடாதென்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்குதான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டும் வருகிறது.
இந்த விவகாரத்தில் யானையைக் காட்டிற்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த முரளிதரன் கூறுகையில், “யானைகளை வளர்ப்பு யானையாக மாற்றுவதே சிறந்தது. இல்லை என்றால், அவை சில காலத்தில் விஷம் வைத்தோ, மின்வேலியில் சிக்கவைத்தோ கொல்லப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
யானையை வளர்ப்பு யானையை மாற்றாமல் காட்டிற்குள் விட வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் கூறுகையில், “யானைகள் வசிக்கும் இடத்திற்கு அருகில், இவ்வளவு வால்டேஜ் கொண்ட, மின்வேலி அமைக்கக் கூடாது. அது மிகவும் ஆபத்தை உண்டாக்கும். யானைகள் வெளி வரும் பாதையில் அவை விரும்பும் பயிர்களை நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வந்தாலும், யானைகள் தற்போது ஆபத்தான சூழலிலேயே உள்ளன.
ஒரு வரத்திற்கு முன்கூட நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் சத்தியமங்கலம் பகுதியில் மக்னா என்று பெயரிடப்பட்ட யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வாழைத்தோட்டம் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி இளம் ஆண் கரடி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
இவ்வாறு மின்வேலியில் சிக்கி வன உயிரினங்கள் உயிரிழப்பது என்பது வாரத்தில் ஒரு சம்பவம் வீதம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இதுபோன்று பயிர்களைப் பாதுகாக்க மின்வேலி அமைக்கப்பட்டாலும், மிகக் குறைந்த அளவிலேயே மின்சாரமே பாய்ச்சப்பட வேண்டும். அதிக அளவில் மின்சாரம் பாய்ச்சப்பட்டால், அது ஆபத்தை விளைவிக்கும் என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், இதைப் பல விவசாயிகள் கடைப்பிடிப்பதில்லை. எனவேதான் அடிக்கடி உயிரிழப்புகள் நடக்கின்றன.
