டெல்டா வைரஸால் அமெரிக்காவில் 80% கொரோனா பாதிப்பு!
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பதிவாகும் கொரோனா வைரஸ் பாதிப்பில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ளன
கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகிலேயே அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க அரசானது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக, அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி, “அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பதிவாகும் கொரோனா வைரஸ் பாதிப்பில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. டெல்டா வைரஸானது மிகவும் மோசமான வைரஸாக உள்ளது. டெல்டா வைரஸ் ஆனது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்று பரவுவதை அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. ஒருசில இடங்களில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைகிறது அதனை அதிகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தடுப்பூசி இலக்கை எட்ட மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, அமெரிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
