ரிஷப் பந்த் கேட்ச்சை கைவிடுவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைவிடுவது போல இருந்தது - டிம் சவுதி
ஆரம்பத்தில் நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வோம் என்று நம்பவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு எங்களுடைய முதல் டெஸ்ட்டில் இலங்கையிடம் நாங்கள் தோற்றோம் என்று டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பந்தின் எளிதான கேட்சை தவறவிட்ட போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டது போல் உணர்ந்தேன் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி தெரிவித்தார்.
போட்டியின் முதல் அமர்வில் 5 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடிய ரிஷப் பந்த், கைல் ஜேமீசன் பந்து வீச்சில் இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற டிம் சவுதியிடம் கேட்ச்சை கொடுத்தார், ஆனால் அந்த கேட்ச்சை டிம் சவுதி கைவிட்டார். 82 ரன்களுடன் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், பந்த் - ரஹானேவுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஓரிரு மணி நேரங்களுக்குள் போட்டியின் வேகத்தை மாற்றக்கூடியவர் ரிஷப் பந்த். அந்த கேட்ச் நியூசிலாந்து அணிக்கு மிக முக்கியனமானது.
இதுகுறித்து பேசிய டிம் சவுதி, “ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் இடைவெளியில் ரிஷப் பந்தால் உங்களிடமிருந்து விளையாட்டை எடுத்துச் செல்ல முடியும். ஏற்கனவே ஒரு இறுக்கமான கட்டத்தில் என் தலையில் சில பதட்டங்கள் ஓடின. ஆனால் நான் அடுத்த ஓவரை வீசும்போது அவற்றை கைவிட வேண்டியிருந்தது. நீங்கள் அதை தாண்டிச் செல்ல வேண்டும். பின்னர் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்தபோது எனக்கு மிகவும் நிம்மதி ஏற்பட்டது
கேட்ச்சை தவறவிடுவது என்பது ஒரு பயங்கரமான உணர்வு. நீங்கள் ஒரு கேட்சை கைவிடும்போது, போட்டியை நீங்கள் உங்கள் கைகளில் இருந்து தவறவிடுவது போல் உணர்வீர்கள்.
ஆரம்பத்தில் நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வோம் என்று நம்பவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு எங்களுடைய முதல் டெஸ்ட்டில் இலங்கையிடம் நாங்கள் தோற்றோம். அதன் பின் சில சிறந்த ஆட்டங்களை கொண்டு நாங்கள் முன்னேறினோம்” என்று பேசினார்.
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி 139 ரன்கள் என்ற இலக்கை ஆட்டத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில் துரத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
