“மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்துவிடாதீர்கள்” - மு.க.ஸ்டாலின்
கொரோனா பரவுவதற்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது என, மீண்டும், மீண்டும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு, அரசாங்கத்தை நிர்பந்தித்துவிடாதீர்கள் என்று கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக்கொள்கிறேன்.
கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா 2வது அலை பாதிப்பு குறைந்து வந்த சூழலில், கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவின் 3வது அலை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அரசாங்கம் விதித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலம் கருதாத சேவை ஆகியவை கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது. ஆனால், கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதே தவிர முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இது தொற்று நோயாய் இருப்பதால் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாய் கருதிய நாடுகளிலும் இது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் கூடுதலாகி வருகிறது.
மக்கள்தொகை நெரிசலாகவும், அதிகமாகவும் உள்ள நாட்டில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், மக்களைக் காக்கிற பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது லேசாகப் பரவத்தொடங்குகிறது. இதைக் கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
மாஸ்க் அணியாமல் இருப்பது, கூட்டமாய் செல்வது போன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது எனக்கு வேதனையாய் இருக்கிறது. அதனால்தான் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவு கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதியை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியாளர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். சென்னையில் சில பகுதிகள், அப்படி மூடப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே, கடைகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதை உணராமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் நடந்துகொள்ளக்கூடாது.
கூட்டமாகக் கூடுவதின் மூலமாக, கொரோனா பரவுவதற்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது என, மீண்டும், மீண்டும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு, அரசாங்கத்தை நிர்பந்தித்துவிடாதீர்கள் என்று கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக்கொள்கிறேன். 3வது அலை மட்டுமல்ல, எந்த அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வல்லமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏராளமாகத் தயார்நிலையில் இருக்கிறது. அதற்காக கொரோனாவை விலைகொடுத்து வாங்கி விடாதீர்கள் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன். முதல் அலையைவிட மாறுபட்டதாக 2வது அலை இருந்தது. அதைவிட மாறுபட்டதாக 3வது அலை இருக்கலாம். நோய் இப்படித்தான் பரவும், என்பதை உறுதியாகக் கூற முடியாததால் மக்கள் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.
கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ளத் தடுப்பூசியே தலைசிறந்த ஆயுதம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட தலைசிறந்த உண்மை. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் தரப்பட்ட தடுப்பூசியை அனைவரும் முழுமையாகப் போட்டுக்கொள்ளவேண்டும். ஒன்றிய அரசு படிப்படியாகத் தரும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. முதல் டோஸ், 2வது டோஸ்னு முழுமையாகப் போட்டு முடிக்க வேண்டும். 18வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கான தடுப்பூசி குறித்து இன்னும் நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்பானிஸ் ப்ளூ போல 3வது அலை மோசமாகப் பரவுமென்று மருத்துவர்கள் சொல்வதைப் பயமுறுத்தலாக இல்லாமல், நமக்குத் தரப்படுகிற எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வோம். ஜிகா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் என்ற புதிய, புதிய படையெடுப்புகள் சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் நாம் வெல்வோம்.
வீட்டைவிட்டு அவசியத் தேவைக்காக மட்டுமே வெளியே வாங்க. அப்போது, 2 முக கவசங்களை அணியுங்கள். வெளியில் வைத்து முக கவசங்களை கழற்ற வேண்டாம். உடல் நலத்தையும் மன நலத்தையும் பேணுங்கள். நமக்கு நாமே காவல் என்பதை உணருங்கள். கொரோனா வைரசிற்கு முற்றுப்புள்ளி வைப்போம். நம்மையும் காப்போம். நாட்டையும் காப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
#COVID19 அனைவரது வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருக்கும் காலகட்டத்தில், இதிலிருந்து மீள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
— M.K.Stalin (@mkstalin) August 1, 2021
பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; #ThirdWave தடுப்போம் #MASKUpTN pic.twitter.com/4iNtdirZ8o
