கொற்கை அகழாய்வு: 2000 ஆண்டுகளுக்கு முந்தைய 7 அடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு!
நேற்று நடைபெற்ற அகழாய்வில், ஒரு குழியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவடத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக கொற்கை பகுதியில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 26ம் தேதி மீண்டும் அகழாய்வு பணிகள் நடைபெறத் தொடங்கின. அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையில் கடந்த 4 மாத காலமாக இந்த அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காகக் கொற்கை ஊரின் மையத்தில் 17 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் துரிதமாக நடக்கின்றன.

கடந்த 4 மாதகாலமாக நடைபெற்று வரும் இந்த அகழாய்வில் தொன்மையான பல பொருட்கள் கிடைத்துள்ளன. திரவப்பொருட்களை வடிகட்டும் 4 அடி கொண்ட சுடுமண் குழாய் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அகழாய்வில், ஒரு குழியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே குழியில் இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள், தொழிற்சாலை இருந்ததற்கான அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த அகழாய்வு பணிகளில் தொடர்ச்சியாக பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவது தொல்லியல் ஆய்வாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அகழாய்வு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளன.
