`வீட்டில் பிரசவம் பார்ப்பேன்' என்று கூறுபவர்கள் இந்த உத்தரவாதத்தை தர முடியுமா?
வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகள், குழந்தை பிறந்ததும் அதன் தொப்புள் கொடியில் மாட்டுச் சாணத்தைத் தடவுவார்கள். இதனால் பிறந்த குழந்தை ஏழு அல்லது பத்து நாட்களில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவியை போல. இது இரு உயிர்கள் தொடர்பானது. தற்போது, ``மருத்துவமனையில் நடக்கும் பிரசவத்தை போல வீட்டிலேயும் நடத்தலாம். அதற்கான முறையான பயிற்சிகள் தரப்படும், இயற்கையான முறையில் வீட்டிலேயே பிரசவம் நடத்தலாம்” என்னும் விளம்பர பலகைகளை காணமுடிகிறது. சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும் பல யோக கலைகளும், இயற்கை மருத்துவ முறைகளும் இருப்பது உண்மைதான். ஆனால் அலோபதி முறையைத் தவிர வேறு எந்த மருத்துவ வழிமுறைகளிலும் பிரசவம் எப்படிச் செய்யவேண்டும்? என்னும் வழிமுறைகளை யாருக்கும் சொல்லித் தரப்படவில்லை மேலும் நமது இந்திய அரசாங்கமும் அதற்கு முறையான அங்கீகாரத்தையும் தரவில்லை.
எங்கள் பாட்டிக்கு எல்லாம் மருத்துவச்சி வீட்டுக்கு வந்துதான் பிரசவம் பார்த்தாங்க... எங்கள் பாட்டி நல்லா இல்லையா? குழந்தை ஆரோக்கியமாக இல்லையா? என்று சிலருக்கு எழும் கேள்விகளைப் பற்றி மகளிர் மருத்துவரான பிரதீபாவிடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது: அந்த காலத்துப் பெண்களுக்கு வீட்டில் பிரசவம் பார்த்திருக்கலாம். அப்போதெல்லாம் குறைந்தது அனைவருக்கும் 5 அல்லது 6 குழந்தைகளாவது இருந்திருக்கும். அவர்களிடம் இதைப்பற்றி மேலும் ஆழ்ந்து பேசினால் பிறந்தது ஏழு, எட்டு குழந்தைகள் ஆனால் குழந்தைகள் உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருப்பது இத்தனை குழந்தைகள் மட்டுமே என்று உண்மையைக் கூறுவார்கள். மேலும் பிரசவத்தின் போது மரணித்த மனைவியின் தங்கையை திருமணம் செய்துகொள்ளும் வழக்கமும் அப்போது இருந்தது. தற்போது அனைவரும் இரண்டு அல்லது ஒரு குழந்தைக்கு மட்டுமே திட்டமிடுகின்றனர். அதனால் தாய் அல்லது கருவில் இருக்கும் குழந்தையிடம் அலட்சியமாக இருக்க இயலாது. அந்த காலத்தில் பிரசவத்தின் போதும், பிரசவ காலத்தின் போதும் தாய் மற்றும் குழந்தையின் இறப்பு சதவிகிதம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அவை எதையுமே முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.
Dr.N.Sri prathiba mahalakshmi MS(OG)
வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளுக்கு பிரசவத்தின் அபாயம் தெரியாது. பிரசவத்திற்கு பின் ஏற்படும் ரத்தக்கசிவு (Postpartum haemorrage) பொதுவாக 500மிலி வரை இருக்கும். இதனால் அபாயம் ஏதும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட இந்த அளவை தாண்டி செல்லும் போது இரத்த மாற்றம் (Blood Transfusion) தேவைப்படுகிறது, மருத்துவமனைகளுக்கு இரத்த வங்கியுடன் தொடர்பு இருப்பதால் தேவையான இரத்தம் உடனடியாக கிடைத்துவிடும். இவை அனைத்தும் வீட்டில் நடத்தப்படும் பிரசவத்தில் சாத்தியம் இல்லை.
வீட்டில் பிரசவம் பார்ப்பதற்கும் தாயின் உடல் நலத்திற்கும் எத்தகைய தொடர்பு உள்ளது?
கருவுற்ற தாய்க்கு 4-ஆம் மாதத்தில் ஒரு தடுப்பூசி போடுவார்கள் அது ஏன் என்று தெரியுமா? நோயெதிர்ப்பு பெற்ற தாயிடமிருந்து செயலற்ற நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறாத குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளது. கீழே விழும்போது அல்லது மணலிலிருந்தும் க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி (Clostridium tetani) என்னும் நுண்கிருமி ``நியோனாடல் டெட்டனஸ்” என்னும் பாதிப்பை உண்டாகிறது. இது கருவுற்ற தாயைவிடவும் கருவில் இருக்கும் குழந்தையின் உயிருக்கே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். இது போன்ற ஆபத்தான விளைவுகளைத் தடுக்கவே தடுப்பூசி கருவுற்ற தாய்க்கு வழங்கப்படுகிறது.
வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகள், குழந்தை பிறந்ததும் அதன் தொப்புள் கொடியில் மாட்டுச் சாணத்தைத் தடவுவார்கள். இதனால் பிறந்த குழந்தை ஏழு அல்லது பத்து நாட்களில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அதற்குக் காரணம் அந்த சாணத்தில் இருக்கும் க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி மேலே கூறபபட்ட ``நியோனாடல் டெட்டனஸ்” பாதிப்பை உண்டாக்குகின்றது.
பிரசவ வார்டு சுகாதார நிலையில் வைத்திருக்கப்படுவதால் குழந்தைக்குத் தொற்றுநோய் வரும் ஆபத்துக்கள் குறைகிறது. மேலும், குழந்தை பிறந்த ஒரு மாதம் வரையில் கட்டாயம் அனைவரும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய சுகாதார நிலை நாம் வீட்டில் மேற்கொள்வது கடினம்.
பிரசவ வலி உடனடியாக வந்தால் மருத்துவச்சி துணை தேவைப்படாதா?
நூற்றில் நான்கு குழந்தைகள் மட்டுமே குறிப்பிட்ட தேதிகளில் பிறக்கும். மருத்துவரால் குறிப்பிட்ட தேதிக்கு முன்போ அல்லது பின்போ பிறப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒன்பது மாதம் அல்லது 36- வது வாரத்திலிருந்து வாரம் ஒருமுறையாவது மருத்துவரைச் சந்தித்து குழந்தை எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள், கர்ப்பப்பை வாய் திறந்திருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்துவார்கள். வீடு மருத்துவமனைக்கு அருகிலிருந்தால் அனுமதிக்க அவசியம் இருக்காது.
மற்றொரு முக்கியமான விஷயத்தை நினைவில் வைத்திருக்கவும். பலர் சிறுநீரையும் அமினாடிக் திரவத்தையும் (Amniotic ) தவறாக புரிந்து கொள்கிறார்கள். நமது கட்டுப்பாடின்றி வருவது அமினாடிக் திரவமாகும். இது ஒரு கறையாக உள்ளாடையில் படியும் மேலும் விரைப்பாக இருக்கும். ஆனால் இது போன்ற சிறுநீர் கசிவில் இருக்காது. சிறுநீர் உள்ளாடையில் படிந்தாலும் உடனடியாக காய்ந்துவிடும். சிலருக்குக் குழந்தை பிறக்கும் போது வலியை உணராமலும் இருக்கலாம். அதனால் அமினாடிக் திரவ கசிவு ஏற்பட்டால் உடனியாக மருத்துவரைச் சந்தித்து மருத்துவமனையில் அனுமதி பெறவும்.
நீரில் குழந்தையை பெற்றெடுக்கும் முறை மீது பலர் விருப்பம் தெரிவிக்கின்றனரே?
உண்மையைக் கூற வேண்டுமென்றால் இந்தியாவில் இருக்கும் பல மருத்துவர்களுக்கு “வாட்டர் பர்த்திங்” பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த முறை குறிப்பிட்ட சில கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது.
