செய்திகள் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பு.. ஆனால் வருவாய்?
கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஆய்வில், இந்த ஆண்டில் “கொரோனா காலத்தில் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பும், அதனால் ஏற்பட்டுள்ள வருவாய் சிக்கலும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆசிய ஊடகவியல் கல்லூரியும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று தொடர்பான செய்திகள் மீதான நம்பகத்தன்மை குறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) நிறுவனம் சார்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆசிய ஊடகவியல் கல்லூரியின் (Asian college of Journalism) ஆய்வு பிரிவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வில், இந்த ஆண்டில் “கொரோனா காலத்தில் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பும், அதனால் ஏற்பட்டுள்ள வருவாய் சிக்கலும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் மூலம், கடந்த ஆண்டை விட சில செய்தி நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது என்பதும், இதனால் சந்தாதாரர்கள் (subscribers) அதிகரித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தொற்றுநோய் பரவும் வேளையில், டிஜிட்டல் மீடியா, மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு பெரும் மாற்றம் கண்டுள்ளது. இது உலக அளவில் செய்திகள் வெளியிடுவோர் மீது அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. மொத்தமாகப் பார்த்தால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பணம் செலுத்தி செய்திகளைப் படிக்கவோ, பார்க்கவோ ஆர்வம் காட்டுகின்றனர். இளம் தலைமுறையினர் புதிய வழிமுறைகளை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே செய்திகள் மூலம் பணம் ஈட்டுவதென்பது, நிறுவனங்களுக்கு மிகவும் சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ட்டர்ஸின் 10வது ஆய்வில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்களில் 92,000 பேரிடம் ஆன்லைன் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நைஜீரியா, கொலம்பியா மற்றும் பெரு முதல்முறையாகப் பங்கேற்றுள்ளது.
செய்திகள் மீதான நம்பிக்கை அதிகரிப்பு
கொரோனா தொடர்பான செய்திகள் மீதான நம்பிக்கை 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஆய்வு மேற்கொள்ள எடுத்துக்கொள்ளப்பட்ட செய்திகளில் பாதிக்கும் மேற்பட்ட செய்திகளை மக்கள் நம்புவதாகப் பதிலளித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளைக் கணக்கிடும்போது இந்த ஆண்டு செய்திகள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. ஃபின்லாந்து நாடு 65 சதவீத நம்பிக்கையைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நெருக்கடி, மற்றும் ஜார்ஜ் பிளாய்ட் கொலை ஆகியவற்றால் 29 சதவீத நம்பிக்கையுடன் கடைசியிடத்தில் உள்ளது.
பல நாடுகளில் வலுவான மற்றும் தனித்துவமான பொதுச் சேவையாகக் கடைப்பிடிக்கும் ஊடகங்களின் செய்திகள் மீது நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்திய கொரோனா!
கொரோனா காலத்தில் அச்சுத் துறை எவ்வளவு பாதித்துள்ளது என்பதை இந்த ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது. விளம்பரங்கள் குறைவால் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. செய்தித்தாள்களில் பாரம்பரியம் கொண்ட ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளே கடும் வீழ்ச்சியை சந்தித்தன. எனவே, டிஜிட்டல் சந்தாக்கள் முறை பெருகியது. 20 நாடுகளுக்கு மேல் 17 சதவீதம் பேர் புதிதாக டிஜிட்டல் சந்தா செலுத்தி செய்திகள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த ஐந்து வருடங்களாக 2 புள்ளிகள் வீதம் மட்டுமே டிஜிட்டல் சந்தாதாரர்களின் அளவு அதிகரித்துள்ளது. தற்போது அது பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், வசதிபடைத்தவர்கள் மட்டுமே பெருமளவில் பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்வதாகவும், மற்றவர்கள் இலவசமாகவே செய்திகள் படிக்க முற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள் மற்றும் கொரோனா
வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மை பற்றிய கவலை இருக்கிறது. 58 சதவீதம் பேர் இது பற்றிய கவலை கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் சிலர் கொரோனா தொற்று பற்றிய தவறான தகவலைவிட, அரசியல் உள்பட மற்ற விஷயங்களை பற்றிய தவறான தகவல்களைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.

அதிக அளவில் பார்க்கப்படும் ஆப்கள்
உலகம் முழுவதும் 25 சதவீதம் பேர் புதிய வழியைப் பயன்படுத்தி செய்திகளைத் தேடுவதையே விரும்புகின்றனர். 18 வயதிலிருந்து 24 வயதிற்கு உட்பட்ட சமூகவலைத்தளங்கள், ஆப்கள் மற்றும் மொபையில் நோட்டிபிகேஷன்களையே பெரும்பாலும் விரும்புகின்றனர். கடந்த ஆண்டில் பேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் கணிசமாகக் குறைந்துள்ளனர். அதே சமயம், டிக்டாக், டெலகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளைப் பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர்.
