தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி! பீலா ராஜேஷ் அறிவிப்பு!
இன்று பாதிக்கப்பட்ட 110 பேர் சென்னை, கோவை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் – பீலா ராஜேஷ்
தமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 110 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் – பீலா ராஜேஷ் பேட்டி
இன்று செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், “டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 515 பேர் தவிர்த்து மற்றவர்கள் பற்றிய தகவல் இல்லை. அவர்கள் தாமாக முன்வந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். அதேபோல அரசின் கோரிக்கையை ஏற்று தாமாக முன்வந்தவர்களுக்கு நன்றி. 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து 4070 பேர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 17 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இதுவரை 2726 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதில் 234 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 110 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 110 பேரும் டெல்லி மாநாடில் கலந்து கொண்டவர்கள். இதனையடுத்து டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சென்று திரும்பியவர்களில் 658 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களும் தயார் நிலையில் உள்ளன. ஏப்ரல், மே மாதங்களில் சுமார் 1 லட்சம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற உள்ளதால், அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ” எனக் கூறினார்.
