“செப்டம்பரில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி!” - ரண்தீப் குலேரியா
கொரோனா தடுப்பூசியின் 3வது கட்டப் பரிசோதனைகள் விரைவில் முடிவடைந்து, வரும் செப்டம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா 2ம் அலை பாதிப்பு உலகின் பல நாடுகளைப் பாதித்து வருகிறது. இந்தியாவில், கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும், 42 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
3வது அலை விரைவில் தொடங்கவுள்ளதால், தொற்றிலிருந்து காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்தது என மருத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் சோதனையைக் கடந்த மாதம் 7ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியது. அதன் இரண்டாவது கட்ட பரிசோதனையும், வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் 3வது கட்டப் பரிசோதனைகள் விரைவில் முடிவடைந்து, வரும் செப்டம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவடையும் பட்சத்தில், வரும் செப்டம்பர் மாதம் முதல் 2 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வாய்ப்பு உருவாகும். சரியான பாதுகாப்பு வழிமுறைகளுடன் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், பள்ளிகளை திறக்கலாம். பள்ளிகளில் நேரடியாக பாடம் கற்பது மாணவர்களுக்கு முக்கியமானது” என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

Related Stories
தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
"கொரோனாவின் 2வது அலை இன்னும் முடியவில்லை" - லவ் அகர்வால்