'3வது அலையை நினைத்து அச்சப்பட வேண்டியது இல்லை!' அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் அரசு?
டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் நுழைந்துவிட்டாலும், செப்டம்பர் மாதத்தில் 3வது அலையின் உச்சம் எட்டும் என்று எய்ம்ஸ் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அனைத்தும் தயார் நிலையிலிருந்தால் தப்பிக்க முடியும் என்பது மருத்துவர்கள் கருத்து.
கொரோனா 3வது அலைக்குத் தமிழ்நாடு காத்துக் கொண்டிருக்கிறதுபோலும். சில அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டில்கள், மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதைப் பற்றி விசாரிக்கையில், கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்தால், சிகிச்சை வழங்க தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறினர். பக்கத்து மாநிலம் உள்பட சில இடங்களில் கொரோனா தொற்றின் 3வது அலையின் அறிகுறிகள் தென்பட்டாலும், இன்னும் வேகமெடுக்கவில்லை என்று அரசு தரப்பு தகவல்கள் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மார்ச் மாத இறுதியில் துவங்கி ஜூன் மாதம் வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தித் தணிந்தது. அந்நாட்களில் நாள் ஒன்றுக்கு 160 நோயாளிகள் வரை, தான் பணியாற்றிய ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்ததாகவும், தற்போது வெறும் 10 நோயாளிகள் மட்டுமே உள்ளதாகவும் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார். இது ஒரு மருத்துவமனையின் நிலை அல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் தற்போது இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.
அத்துடன், அந்த ஊழியர் குறிப்பிடுகையில் எப்போதும் மருத்துவமனையில் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கத் தெரிவித்துள்ளனர். அதற்கான பணிகளைச் செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். எனவே தமிழ்நாடு அரசு வரவிருக்கும் 3வது அலைக்குத் தயாராகி வருகிறது என்று நாம் நம்பலாம்.
3வது அலை.
3வது அலையைப் பற்றி எண்ணி ஒவ்வொருவரும் அச்சப்பட வேண்டியுள்ளது. குழந்தைகளைப் பெருமளவில் தாக்கும் என்று குறிப்பிடப்பட்ட 3வது அலை, வெறும் குழந்தைகளை மட்டும் தாக்கும் என்று தெரிவிக்கப்பட வில்லை. முதல் இரண்டு அலைகளைவிட, 3வது அலையில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற கருத்தையே மருத்துவர்கள் முன்வைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி போடும் பணி குழந்தைகளுக்கு இன்னும் துவங்கவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பெரியவர்களையும் இது தாக்கலாம்.
மற்றொரு முக்கிய விஷயம் கொரோனா தொற்றின் 3வது அலை பரவும் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். கொரோனா தொற்றின் 2வது அலையில் இந்தியாவைத் தாக்கிய டெல்டா வைரஸ், மற்றும் தென்னாப்பிரிக்காவில் பரவிய பீட்டா வைரஸ் இவை இரண்டின் திறன்களும் டெல்டா பிளஸ் திரிபில் உள்ளது என்று வைராலஜிஸ்ட்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே 3வது அலையில் கொரோனா வைரஸ், 60 சதவீதம் வேகமாகத் தாக்கும் திறன் கொண்டிருக்கும். மனிதனைத் தாக்கியதும், நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் நுழைந்துவிட்டாலும், செப்டம்பர் மாதத்தில் 3வது அலையின் உச்சம் எட்டும் என்று எய்ம்ஸ் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அனைத்து தயார் நிலையிலிருந்தால் தப்பிக்க முடியும் என்பது மருத்துவர்கள் கருத்து.
தமிழ் இனி என்ற மருத்துவக் குழுவை வழி நடத்தும் மருத்துவர் சுபாஷ்காந்தி அவர்களிடம் 3வது அலையின் தாக்கம் பற்றிக் கேட்டபோது, “குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எனவே அவர்களுக்கு 3வது அலையில் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்கள் வெளியில் சென்று வருவதால், அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் கொரோனா 3வது அலையில் குழந்தை நோயாளிகளைப் பாதுகாக்கும் பொருட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. வெறும், குழந்தைகள் நல மருத்துவர்களைத் தாண்டி அனைவரும் இதில் பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளும் செய்துகொண்டிருக்கிறார்கள். 3வது அலையை நினைத்துப் பயப்பட வேண்டியது இல்லை” என்று தெரிவித்தார்.
அதேபோல் தமிழ் இனி குழு சார்பாகக் குழந்தைகளைப் பாதுகாக்கும் மருத்துவ ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவுகிறது. எனவே பெற்றோர் கை கழுவது, முககவசம் அணிவது போன்றவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
குழந்தைகளைக் கூட்டமாக விளையாட அனுமதிக்க வேண்டாம். குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்ல வேண்டாம்.

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம், தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ளலாம். கொரோனா தொற்றுள்ள தாய் குழந்தையைப் பிரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவாது. கைகளைக் கழுவி, முழுக கவசம் அணிந்து சுத்தமாகக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம். அத்துடன் குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்ட வேண்டும்.
குழந்தைகளுக்கு பெரும்பாலும் அறிகுறிகள் தென்படுவதில்லை. ஒருவேளை மூச்சுவிடுவதில் சிரமம், உதடு, நாக்கு நீல நிறமாக மாறுதல், தூக்கமின்மை, அதிக சோர்வு, அதிக வயிற்று வலி, வலிப்பு போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்” என்பன உள்ளிட வழிகாட்டுதல் நெறிமுறைகளை, மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களை ஆலோசித்து நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
