வியாபாரம் செய்யப்படும் 'நீலத்தங்கம்'! கவனத்தில் கொள்ளவேண்டிய எதிர்கால பிரச்சனைகள்? அலசல்
கோவை மாநகராட்சியில் குடிநீர் வழங்கல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. திமுக தேர்தல் வாக்குறுதியில், குடிநீர் வழங்கல் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்ற விதத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. விரிவான தொகுப்பு!
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு அச்சப்படும் நாம், அடுத்த தலைமுறையைத் தண்ணீர் விலையேற்றத்தைக் கண்டு அச்சப்படும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
“கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். கோயம்புத்தூர் மாநகராட்சியே மக்களுக்குக் குடிநீர் வழங்கும்” இது திமுகவின் தேர்தல் அறிக்கையில், இடம்பிடித்த வாக்குறுதி.
சூயஸ் ஒப்பந்த விவகாரத்தில், ஊடகம் ஒன்றுக்கு அமைச்சர் கே.என் நேரு அளித்த பதிலில், சூயஸ் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை 80 சதவீதம் பணிகள் முடிந்து பல வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பைக் கொடுத்துவிட்டனர். முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இது பற்றி, நீலத்தங்கம் புத்தக எழுத்தாளர் முருகவேள் அவர்களிடம் கேட்டபோது, “100 சதவீதம் திட்டத்தை நிறைவேற்றிய பின்னரும், தண்ணீர் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கையில், அந்த திட்டம் சரி இல்லை என்னும் பட்சத்தில் அதை நிறுத்தியது எல்லாம் நடந்துள்ளது. ஜாம்செட்பூரில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது. சூயஸ் நிறுவனம் இருக்கும், பாரிஸிலும் இது போன்ற நிலை ஏற்பட்டது. முதலில் தண்ணீர் வழங்க ஒப்பந்தம் போட்ட அரசு ஆட்சியை இழந்தது, அதன்பின் சோசலிச அரசு ஆட்சியைப் பிடித்ததும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. எனவே திட்டத்தை நிறுத்துவதற்கும், வேலை முடிந்தது என்று சொல்வதற்கும் தொடர்பு இல்லை. அந்த திட்டம் நமக்குப் பயன்படுகிறதா?, தண்ணீர் வழங்கும் பொறுப்பை அரசு ஏற்கிறதா? என்பதுதான் முக்கியம். திமுக அரசு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற திட்டங்களில், பழைய கொள்கையை பின்பற்றுவதையே காட்டுகிறது” என்றார்.
சூயஸ் என்ற பெயர் உங்களுக்கு நினைவிருக்கலாம். சூயஸ் கால்வாயில், 6 நாட்கள் கப்பல் ஒன்று தரை தட்டி நின்றதும், அதனால் உலக நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்ததையும் பார்த்தோம். அந்த சூயஸ் கால்வாயின் உடமஸ்தர்கள்தான், இந்த சூயஸ் திட்டத்தையும் வழிநடத்துகின்றனர்.
ஏன் தண்ணீரை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும்?
தண்ணீர் எல்லோருக்கும், எல்லாக் காலத்திலும் தேவைப்படும் மிக முக்கிய ஆதாரம். இதைக் கருத்தில் கொண்டே பெடெல், சூயஸ், SAUR போன்ற நிறுவனங்கள், பல நாடுகளுக்குள் நுழைந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தை தங்கள் வசப்படுத்தி, வியாபாரத்தைத் துவங்கிவிட்டன. தண்ணீர்தான் நாளை விலைமதிப்பற்றதாக இருக்கும் என்பதை இந்நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. இந்நிறுவனங்கள் ஒரு நாட்டிற்குள் நுழைந்துவிட்டால், முதலில் குறைந்த விலையில் அதாவது '1 ரூபாய்க்கு ஒருநாள் தண்ணீர்' என்ற விதத்தில் தங்களின் வியாபாரத்தைத் துவங்குகின்றன அதன்பின் அதன் விலையும், வழிமுறைகளும் சிக்கலாக்கப்படுகிறது. “இந்த திட்டத்தால் பயன் உள்ளதா? என்று கேட்டால் நிச்சயம் பயன் இருக்க முடியாது. அரசு தண்ணீரை நமக்குக் கொடுக்கிறது. அதற்கு நாம் அரசுக்கு வரி கட்டுகிறோம். இது நமது உரிமை. இதை மாற்றி, விற்கும் பொருளாகப் பார்க்கிறார்கள். எல்லோருக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற கடமையிலிருந்து அரசு விலகுகிறது. தனியாருக்கு அப்படி ஒரு எண்ணமும் கிடையாது. பணத்தைக் கொடுத்தால் தண்ணீர் கொடுக்கிறேன் என்ற நிலையை உருவாக்குகின்றனர். இதுபோன்ற நடைமுறைகள் சரியானவையல்ல” என்கிறார் முருகவேள்
இறுதியில் இது எந்த நிலைக்குச் செல்லும் என்பதை எழுத்தாளர் நக்கீரன் 'நீர் எழுத்து' என்ற புத்தகத்தில் சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். “2002-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் உலக வங்கியிடம் இருந்து கடனை பெற்றதும், விதிக்கப்பட்ட முதன்மை நிபந்தனை நீர் தனியார்மயம் என்பதை ஏற்றுக்கொண்டது. 'ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்குத் தண்ணீர்' என்று மக்கள் மயக்கப்பட்டனர். மைசூரில் டாடா நிறுவனமான JUSCO நிறுவனத்திற்கு நீர் விநியோகம் வழங்கப்பட்டது.
நீர் தனியார்மயமானதும் பொதுக் குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. பொதுக்கிணறுகளும் ஆழ்குழாய்க் கிணறுகளும் மூடப்பட்டன. குடிசைகள் உள்ளிட்ட வீடுகளில் அனைத்துமே தண்ணீர் மீட்டார்கள் பொருத்தப்பட்டது. இச்செலவுகளை ஈடுகட்ட, தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. 24 மணிநேரம் குடிநீர் விநியோகம் 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மூன்றாண்டுகளில் ஏழைகள் தண்ணீர் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். தண்ணீர் மீட்டார்களை மொத்தமாகப் பிடுங்கிப் பேரீச்சம் பழத்திற்கு விற்று போராட்டம் நடத்தினர். இறுதியில் மைசூர் மாநகராட்சியே மீண்டும் குடிநீர் விநியோகத்தைத் துவங்கியது. இது கோவை மாநகர மக்கள் அறிய வேண்டிய செய்தியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியிடம் கடன் பெறும் எந்த நாடும், 'ஆமை (பொறாமை, கல்லாமை போன்றவை) புகுந்த வீடு உருப்படாது' என்பது போன்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது என்ற கருத்தைப் பல சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். “தனியார்மயமாக்கலை உலக வங்கிதான் ஒழுங்குபடுத்தி நடத்தி வருகிறது. 20 வருடத்திற்கு முன், இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள அணைகளைப் பராமரிக்க உலக வங்கி நிதி கொடுத்தது. அதை வாங்கி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களும் பயன்படுத்திக் கொண்டன. அதன் அடுத்தகட்டமாக, அணைகள் தொடர்பான விவகாரங்களில் உலக வங்கியின் ஈடுபாடு அதிகரித்தது. அடுத்தடுத்த கட்டத்தில், தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்து நிற்கிறது. திட்டங்களில் எந்த ரகசியமும் இல்லை. வெளிப்படையாகவே கூறுகிறார்கள். உலக வங்கிதான் இந்த செயல்களில் ஈடுபடுகிறது!, அரசியல் தலைவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்று கூற முடியாது. அரசியல்வாதிகளுக்கும் விருப்பமும், லாபமும் அதிகமாகவே உள்ளது” என்கிறார் முருகவேள்
கோவை மாநகரின் நிலை?
90 ஆண்டுகளுக்கு மேலாகக் கோவை நகரத்தின் குடிநீர்த் தேவையைத் தமிழ்நாடு அரசே திட்டமிட்டுச் செயல்படுத்தியது. அடுத்து வரும் காலங்களில், குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யத் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் திட்டங்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் புறக்கணித்து உலக அளவிலான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் 2019-ம் ஆண்டின் தகவல்படி, 3.5 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. 72 மாநகராட்சி வார்டுகள் இருந்தன. இவை 60 வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம், மதுக்கரை, குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களை ஒன்றாகச் சேர்த்து 40 வார்ட்டுகளாக உருவாக்கப்பட்டு, தற்போது மொத்தம் 100 வார்ட்டுகள் உள்ளன.
பழைய வார்டுகளில் சரிவரத் தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. “தண்ணீர் பற்றாக்குறை என்ற போலி விம்பத்தை உருவாக்கி, தனியார் நிறுவனத்தைக் கொண்டு வருகிறார்கள்” என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எப்படி இருந்தாலும், 60 வார்ட்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன், தனியார்த் துறை மூலம் செயல்படுத்த ரூ.550.55 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் நோக்கம், நகரில் உள்ள பொது குடிநீர் குழாய்களை மொத்தமாக அகற்றிவிட்டு, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்பதை வழிமுறைப்படுத்தினர். அதேபோல் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீருக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கவும், அதன்மூலம் குடிநீர் பயன்பாட்டைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் தான் சூயஸ் நிறுவனத்திடம் 26 ஆண்டுகளுக்குக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி பிரான்ஸ் சூயஸ் நிறுவனம் 60 வார்டுகளில் உள்ள கிட்டத்தட்ட 1.5 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும். 40 வார்டுகளில் உள்ள 1.2 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர், கோவை மாநகராட்சியே வழங்கும் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சூயஸ் நிறுவனம் சார்பாக 32 புதிய நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு வருவதாகவும், 1700 கிலோமீட்டருக்கு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், 3 வது மாடி வரை மின்சாரம் இல்லாமல் நீரியல் ஈர்ப்பு விதிகளின்படி தண்ணீர் மேலே கொண்டு சேர்க்கப்படுகிறது என்று இந்த பணிகளைக் கவனித்து வரும் ஒருவர் குறிப்பிடுகிறார். அதேபோல், குழாய்களில் ஏற்படும் கசிவுகள் முழுவதும் தடுக்கப்படுவதாகவும், இதன்மூலம் பெருமளவு தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் கூறப்படுகிறது. சூயஸ்க்கு ரூ.550.55 கோடிக்குத் திட்டம் போடப்பட்டாலும், தற்போது ரூ. 3,167 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சில மாற்றங்களுடன் குடிநீர் கட்டணத்தை சூயஸ் நிர்ணயித்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால், கட்டணத்தை உயர்த்தலாம் ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மைசூரின் நிலை கோவைக்கு வராது என்று சொல்ல முடியாது.
இது பற்றி எழுத்தாளர் முருகவேள் கூறுகையில், “கோவையில் குறிப்பிட்ட வார்டுகளை தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது எப்போதும் இருக்கும். 15 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் என்பது சாதாரணமானது. அதைப் பயன்படுத்தி தனியார்மயமாக்கத் திட்டமிட்டனர். ஒரு பிரச்சனை வந்தால் அதைச் சரி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு தப்பி ஓடுவது எப்படிச் சரியாக இருக்கும்.

தண்ணீர் வழங்கலைக் கோவை மாநகராட்சியே செய்யலாம். அதன் வழிமுறையில் சில சிக்கல் இருந்ததே தவிர, 90களில் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளனர். மாநகராட்சிக்கே உள்கட்டமைப்பு சரியாக உள்ளது. இன்றும் மாநகராட்சி போட்டு வைத்துள்ள கட்டமைப்பிலேயே சூயஸ் தண்ணீர் வழங்கி வருகிறது. தங்களால் முடியாது, தனியாரால்தான் முடியும் என்று கூறுவது எல்லாம் பொய்யான விஷயம்.
நகரத்திலிருந்து குடிசைகளை அகற்றி, புறநகரில் கொண்டு சென்றுவிட்டநிலையில், தற்போது அனைவருக்கும் மாநகராட்சிக்குக் கொடுப்பதில் என்ன சிக்கல்?. பணக்காரர்கள் நகரத்திலிருந்தால்தான் அதிக அளவில் பணம் கிடைக்கும் என்று, ஏழைகளை வெளியே கொண்டு சென்றுவிட்டனர்” என்கிறார்.
கோவையில் சோதனை முயற்சியாகத் துவங்கப்பட்ட இந்த திட்டம், அடுத்தடுத்த மாவட்டங்களில் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், தனியார் குடிநீர் விநியோகத்திற்கும் தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தண்ணீர் விநியோகம் ஒழுங்குபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு வெவ்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகிறது. “ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பதுவே, அனைத்து பகுதியிலும் தனியார்மயம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படுவதே. இதே திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் ஜவஹர் நகர புனரமைப்பு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தில் வரைவறிகையிலேயே நகராட்சி, ஊராட்சியில் புனரமைக்கத் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமயமாக்கலின் அடுத்த நிலையாக இது உள்ளது. கல்வி, சுகாதாரம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் தனியாரிடம் ஒப்படைக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி என்பது நகரத்தை ஒழுங்குபடுத்துவது, அழகுபடுத்துவது மட்டுமல்லாமல் தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளையும் தனியாருக்குக் கொடுப்பதுவே அதன் பங்கு” என்ற கருத்தை முருகவேள் முன்வைக்கிறார்.
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு?
2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் 24x7 குடிநீர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு 595 கோடி செலவில் திட்டத்தை நிறைவேற்ற, பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தனியாரிடம் கோவை நகரக் குடிநீர் வழங்கலை, கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பலகட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தது.
திமுக தேர்தல் வாக்குறுதியில், சூயஸ் திட்டத்தைப் பற்றிய விஷயம் முக்கிய பங்குபெற்ற நிலையில், திமுக ஆட்சியை பிடித்தபின் சூயஸ் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக எந்த விஷயத்தையும் ஆலோசிக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் சூயஸ் திட்டத்தின் செயல்முறையை நேரடியாக ஆய்வும் செய்துள்ளார்.

இதற்குக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமார், சூயஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த சூயஸ் நிறுவனம் 26 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய அனுமதி வழங்கி இருப்பது அபாயகரமானது எனவும், இந்த குடிநீர் விநியோக திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக எந்த விஷயமும் பேசப்பட்டதாக தெரியவில்லை.
முருகவேள் தரப்பில், “திமுகவிற்குத் தண்ணீரை தனியார்மயமாக்கல் செய்தபோது, அதிமுக மேல் அதிருப்தி இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள, எதிர்த்தவர்களை திமுக ஆதரித்தது. அதைத் தவிர தனியார்மயமாக்கலில் திமுகவின் திட்டமும், அதிமுகவின் திட்டமும் ஒன்றுதான். திமுகவே செம்பரம்பாக்கம் நீரைச் சுத்திகரிக்கும் வேலையைத் தனியாரிடமே கொடுத்திருந்தார்கள். பொதுவாகப் பார்த்தால், திமுக தனியார்மயமாக்கலுக்கு எதிரான அமைப்பு இல்லை” என்றார்.
மேலும், “இதற்குத் தீர்வு என்பது எல்லாவற்றையும் நகரமயமாக்குவதை நிறுத்த வேண்டும். அனைவரும் கோயம்புத்தூருக்குச் சென்றால்தான் பிழைக்க முடியும் என்ற சிந்தனை விடுத்து, தாங்கள் இருக்கும் இடத்தில் வாழ வழிவகை செய்ய வேண்டும். நகரமயமாக்கல் அதிகமாகிவிட்டே போனால், நகரத்தில் செலவாளிக்கும் தண்ணீரின் அளவும் அதிகமாகிக் கொண்டே போகும்” என்கிறார் நீலத்தங்கம் எழுத்தாளர்.
