'SC/ST சட்டம் 6 மாதத்தில் தீர்ப்பு வழங்க சொல்கிறது, ஆறு வருடங்களாகியும் தீர்ப்பு வழங்கவில்லை!'
'பல குற்றங்கள் வெளியில் தெரிவதில்லை. சட்டம் பற்றிய விழிப்புணர்வு யாருக்குத்தான் இருக்கிறது என்கிறீர்கள்?' தலித் சமூகத்தினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகப் புகார் கொடுப்பது தாமதமாகுவது குறித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய ஆதிக்கம் என்பது இன்னமும் குறையாமல் இருக்கிறது. சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த நிகழ்வு மட்டுமல்ல, பல இடங்களில் சாதிய ஆதிக்கம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இதுபோன்ற நடைமுறைகள் இன்று துவங்கியது இல்லை. பண்டைய காலத்திலிருந்தே, சாதியை ஆதிக்கம் என்பது இருக்கிறது. தமிழ்நாட்டில் தலித் சாதியினரை அடிமைப்படுத்தி வேலை வாங்குவது, படிப்பதற்கு தடை விதிப்பது, கோயிலில் அனுமதிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகளை வழக்கத்தில் வைத்திருந்தனர்.
அந்த நாட்களில் நடந்த வன்முறைகள் தற்போது குறைந்திருக்கிறது என்று நாம் நினைத்து மகிழ்ச்சியடைய முடியாது. சமீபத்திய காலத்தில்தான், தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டதும் நிகழ்ந்தது. இதுபோன்று சாதியின் பெயரால் இருக்கும் ஆதிக்கத்தை நாம் ஒவ்வொரு இடங்களில் பார்க்க முடியும்.
கோவையில் நடந்தது என்ன?
இரு வேறு விதத்தில் இந்த தகவல் பகிரப்படுகிறது. கோவை மாவட்டம் ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கோபால்சாமி தன்னுடைய சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்கக் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். பணியிலிருந்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, கோபால்சாமி கொண்டு வந்த ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி, வேறு ஆவணங்களைக் கொண்டுவரும்படி கூறியுள்ளார்.
அதற்கு கோபால்சாமி, கலைசெல்வியிடம் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது குறுக்கிட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி, கிராம நிர்வாக அலுவலரிடம் தவறாகப் பேசவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். முத்துசாமியின் மீது கோபம் அடைந்த கோபால்சாமி, முத்துசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே வேலையில் இருக்க முடியும், இல்லை என்றால் ஊரியிலிருந்தும், வேலையிலிருந்தும் வெளியேற்றிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் பற்றிய வீடியோ வெளியான நிலையில் கண்டனங்கள் எழுந்ததுடன், விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது, என்று பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் அவர்களிடம் கேட்டபோது, “கோயம்புத்தூர் பிரச்சனையில் அவர் காலில் விழக் கூறவில்லை. அப்படி இருந்தும், காலில் விழுந்தால்தான் தப்பிக்க முடியும் என்ற மனநிலையை உருவாக்கியுள்ளனர். காலில் வந்து விழு என்று கூறுவதை விட இது மிகவும் கொடியது. ஒருவரை, தன்னை பகைத்துவிட்டு ஊரில் குடியிருக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். என்னைப் பகைத்துக்கொண்டால், இந்த ஊரில் குடியிருக்க முடியாது என்ற வார்த்தை, அந்த ஊரில் இருக்கும் சாதிய முக்கியத்துவத்தையே காட்டுகிறது.
பல சட்டங்கள் வந்த பின்னரும், இத்தகைய மனோபாவம் மாறவில்லை. உடையார்பாளையம் தற்போது நிகழ்ந்ததில் ஒரே ஒரு எடுத்துக்காட்டு. இதுபோன்று சூழல் இந்நாட்டில் பெருமளவில் உள்ளது என்பது தான், நம் ஜனநாயகத்தின் தோல்வி என்று பார்க்க வேண்டியுள்ளது” குறிப்பிட்டார்.
இருவரையும் தனித்தனியாக விசாரணை நடத்தியதில், காலில் விழ வைத்தது உறுதியாகியுள்ளது. எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். தற்போது கோபால்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில், “இச்சம்பவம் மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். நாம் நாகரீகமான சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகத்தை இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
காலில் விழவைத்த கோபால்சாமி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்ட தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சாதிய ஆதிக்க மனோபாவத்துடன் நடந்து கொண்ட கோபால்சாமிக்கு உரியத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். சாதிய ஆணவத்தின் காரணமாக நிகழும் கௌரவக் கொலைகளும், அவர்களுக்குரிய நிலங்கள் பறிக்கப்படுவதும், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதும், அவமானப்படுத்துவதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இனிமேல் இப்படி ஒரு கொடுமைகள் நிகழாவண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் இதற்கு முன்னர் சாதிய ஆதிக்கத்தால் 17 பேரின் உயிரைப் பலிவாங்கிய சம்பவமும் நிகழ்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதாவது 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தின் அருகே நடூர் என்ற பகுதியில் ஆதி திராவிடர்கள் வசிக்கும் காலனிக்கு அருகில் கட்டியிருந்த 25 அடி உயரம் உள்ள தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது. சுவர் அந்த பகுதியில் வசித்து வந்தவர்கள் வீட்டின் மீது விழுந்ததில், உறங்கிக்கொண்டிருந்த 17-பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்று வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு விதத்தில் சாதிய கொடுமை நடந்துகொண்டே இருக்கிறது. 2020-21-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, தெற்கு திட்டை ஊராட்சிமன்ற தலைவராக ராஜேஷ்வரி சரவணக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஊராட்சி உறுப்பினர்கள் ராஜேஷ்வரியை தரையில் அமர வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து புகார் எழுந்த பின் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆடுமேச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தலித் நபருக்கும் மாற்றுச் சாதியைச் சேர்ந்த சிவசங்கு என்ற நபருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், தலித் நபரை சிவசங்கும் அவரது கூட்டாளிகளும் இணைந்து காலில் விழ வைத்தனர்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது, அரக்கோணம் அருகே தேர்தல் பிரச்சனையைப் பயன்படுத்தி. தலித்து சமூகத்தை சேர்ந்த 4 இளைஞர்களை வன்னியர் சாதியினர் தாக்கியதில் இரண்டுபேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இச்சம்பவம் மது அருந்தும்போது ஏற்பட்ட சண்டை என்று பாமக கட்சி தெரிவித்தது. விசிக இது சாதிய தாக்குதல் என்று எதிர்வினையாற்றியிருந்தது.
2021-ம் ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் ஒட்டந்தல் கிரமத்தில் வன்னியர் சாதியினரிடம் அனுமதிகோராமால் கோயில் திருவிழா நடத்தியதாகக் கூறி தலித்து பிரிவைச் சேர்ந்த 3 பெரியவர்களைக் காலில் விழ வைத்த சம்பவமும் அரங்கேறியது. இச்சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு சாதிய ஆதிக்கம் என்பது எந்த விதத்திலும் குறையவில்லை. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் எத்தனை முறை இந்த பிரச்சனைக்குக் குரல்கொடுத்தலும் ஓய்வது போன்று தெரியவில்லை.
“ஆட்சியாளர்கள் இதுபோன்ற செயல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சியாளர்கள் மட்டுமே முழுமையாக மாற்றிட முடியுமா என்றால், அது முடியாது. சமூகம் ஒட்டுமொத்தமாகச் சட்டத்திற்குப் பயப்பட வேண்டும். இல்லை என்றால் ஒரு ஜனநாயக சிந்தனை ஒட்டுமொத்த நாடும் பெற வேண்டும். அதற்கு அரசின் நடவடிக்கை உள்ளது. பாடத்திட்டத்தின் செயல்முறைகள் உள்ளன. இதில் திமுக, அதிமுகவை வேறுபடுத்திப் பார்க்கையில், அதிமுக அப்படி ஒரு குற்றம் நடந்ததாகக் காட்டிக்கொள்வதில்லை. திமுக ஆட்சியில் குற்றம் நடந்த இடத்திற்கு நேரடியாக யாராவது செல்கின்றனர். இதுவே ஒரு பெரிய மாற்றம் தான். இந்த மாற்றங்களால் மட்டும், இதுபோன்ற சூழல்களை முற்றிலும் தவிர்க்க முடியுமா என்றால் அது நிச்சயம் முடியாது.

இதற்குக் கல்வித்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளது. நீதிமன்றம் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் ஆறு மாதத்தில் தீர்ப்பு வழங்கச் சொல்கிறது. 6 வருடம் ஆனால் கூட தீர்ப்பு வழங்கவில்லை. சட்டத்தின் நேரடி பொறுப்பாளரான நீதிமன்றமே சட்டத்தை மீறும்போது என்ன செய்ய முடியும். இந்த வழக்கை நல்ல வழக்கு என்று பதிவு செய்துள்ளனர். அடுத்த 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கினால், மக்களின் மனதில் இருக்கும்போதே அதன் தீர்ப்பு வந்தால் சம்மந்தப்பட்ட கோபால்சாமி சிறைக்குச் செல்வார். அப்போது மற்றவர்களுக்கும் பயம் ஏற்படும். ஆனால் 6 வருடங்கள் ஆனபின்னர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்கிறார்கள். இதை ஆட்சியாளர்கள் மட்டும் செய்ய முடியாது அனைத்தும் ஒன்றுபட்டே செய்ய வேண்டும்" என்கிறார் சாமுவேல் ராஜ்.
எஸ்.டி, எஸ்.சி எதிரான வன்முறைகளில் பல இடங்களில் தாமதமாகவே புகார் கொடுக்கப்படுகிறது. இது பற்றி சாமுவேல் ராஜ் கூறுகையில், “பல குற்றங்கள் வெளியில் தெரிவதில்லை. சட்டம் பற்றிய விழிப்புணர்வு யாருக்குத்தான் இருக்கிறது என்கிறீர்கள்?. பெண்கள் பற்றிய சட்டங்கள் இருக்கிறது. இந்த சட்டங்கள் பற்றி எத்தனை பெண்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தலித் உரிமைகளுக்காகச் சட்டம் மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சாதாரண மக்களிடம் சட்டத்தைக் கொண்டு சேர்ப்பது அரசின் பொறுப்பு தானே. பாதிக்கப்பட்ட பெண்களிடம் சட்டத்தைக் கொண்டு சென்று சேர்ப்பது, தலித்துகள், பழங்குடியினரிடம் கொண்டு சேர்ப்பது போன்றவை அரசின் கடமைதானே. நாம் இவ்வளவு பேசும்போது தொழிலாளர்கள் சட்டம் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
Update: (ஆகஸ்ட் 21)
இந்த விவகாரத்தில் முதலில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட அரசு ஊழியரின் வீடியோ, மட்டும் வெளியிடப்பட்ட நிலையில், சரியாக ஒருவாரம் கழித்து முத்துசாமி, கோபால்சாமியைத் தாக்கிய பின்னரே, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக வீடியோ வெளியிடப்பட்டது. இவ்வாறு வீடியோ எடுத்த நபர் சுயநலத்திற்காக, இரு சமூகத்தினரிடையே பிரச்சனையைத் தூண்டிவிட்டதாகப் புகார் எழுந்தது. எனவே அந்த பெயர் குறிப்பிடப்படாத நபர் மீது போலீசார், 153 (ஏ) (பி) இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், விவகாரத்தில் விஏஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, கோபால்சாமி அளித்த புகாரின் பேரில், காயப்படுத்துதல் பிரிவில் முத்துசாமி மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்த போலீஸார், பின்னர் பிணையில் விடுவித்தனர்.
ஒரு தனிநபர், தன்மூலம் வீடியோ வைரலாக வேண்டும் என்று நினைத்து, இரு சமூகத்தினரிடையே மோதலை உண்டாக்கியது மற்றும் அனைவரையும் திசை திருப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
