''இது 40 ஆண்டுகால போராட்டம்: தேவேந்திர குல வேளாளர் என்பதே எங்களுக்கு மகிழ்ச்சி!'' - ஜான் பாண்டியன்
இதுவரை எந்த சமூக மக்களுக்கும் இதுபோல அரசாணை வெளியிட்டது இல்லை. இதுவே முதல் முறை. எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மோடி ஜி-க்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும் எங்கள் மக்கள் நன்றி விசுவாசமாக இருப்பார்கள்.
தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் தங்களை அழைக்கவேண்டும் என்று பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகள் வைக்கும் கோரிக்கை சமீபத்திய அரசியல் சூழலில் தீவிரமாகியது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் மசோதா கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 13) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பள்ளன், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகள் அடங்கும். இந்த மசோதா மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் கிடைத்ததும் இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்றுக் கூறப்படுகிறது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே சென்னை வந்த பிரதமர் மோடி, “கடந்த 2015ஆம் ஆண்டு டெல்லியில் தேவேந்திர குல வேளாளர்களை சந்தித்து பேசினேன். அப்போது, தேவேந்திர என்ற வார்த்தை நரேந்திர என்கிற என் பெயரைப் போலவே இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்று கூறியிருந்தார்.
இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் பேஸ்புக் பக்கத்தில், “தேவேந்திரகுல வேளாளர் - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல். தமிழ்நாட்டிலுள்ள எஸ்சி சாதிகளில் 7 சாதிகளைத் தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அழைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெயர் மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள பாஜக அரசு எஸ்சி பட்டியலிலிருந்து வெளியேறவேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையை ஏற்காதது ஏன் எனத் தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கையை நீண்ட காலமாக முன்வைத்தவரும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஜான் பாண்டியனிடம் பேசியபோது, “ஏழு பட்டியலின உட்பிரிவுகளைத் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என்பது எங்களின் 40 ஆண்டுகால போராட்டம். இந்த கோரிக்கையை ஏற்கக்கோரி புரட்சி தலைவர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜி.கே.மூப்பனார், ஜெயலலிதா என எல்லோரையும் சந்தித்திருக்கிறேன். கடைசியில் மோடிஜிதான் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அவரால்தான் இது எங்களுக்குக் கிடைக்கிறது.
இதுவரை எந்த சமூக மக்களுக்கும் இதுபோல அரசாணை வெளியிட்டது இல்லை. இதுவே முதல் முறை. எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மோடி ஜி-க்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும் எங்கள் மக்கள் நன்றி விசுவாசமாக இருப்பார்கள். இந்த மகிழ்ச்சியில் மிதந்துகொண்டு இருக்கிறோம். பட்டியலினத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறினால் மிக்க மகிழ்ச்சி.

மத்திய, மாநில அரசுகளுக்கு என்றும் விசுவாசமாக இருப்போம். இதை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம். கண்டிப்பாக மோடி ஜி-க்கு விசுவாசமாக இருப்போம். இந்த வரலாற்றில் எடப்பாடி அண்ணனும் இடம் பெற்றிருக்கிறார். தேவேந்திர குல வேளாளர் அரசாணை என்றால் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மற்றும் மோடி ஜி தான் நினைவில் இருப்பர்” என்று குறிப்பிட்டார்.
இது குறித்து பாமக வழக்கறிஞர் பாலுவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “பள்ளன், குடும்பன், காலாடி உள்ளிட்ட ஏழு பட்டியலின உட்பிரிவுகளைத் தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதனை முழுமையாக வரவேற்கிறது. தேவேந்திர குல வேளாளர்களின் உரிமையையும், பெருமையையும் எவரும் பேசுவதற்கு முன்பாக முதன் முதலாக அவர்களுக்காகக் குரல் கொடுத்தவர் எங்கள் கட்சியின் நிறுவனர் சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா.
1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் ’ஒரு தாய் மக்கள்’ என்ற பெயரில் மாநாடு நடத்தி வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்தோடு அந்த மாநாட்டை நடத்தி முடித்தார் மருத்துவர் அய்யா. அந்தவகையில் தற்போது மத்திய அரசு இதைச் சட்ட மசோதாவாகக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதனை முழுமையாக ஆதரிக்கிறது. இதனை அமல்படுத்தவேண்டும் என்பதை இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

1996ஆம் ஆண்டு மதுரை தென் மாவட்டங்களில் மிகப் பெரிய சாதிய கலவரங்கள் ஏற்பட்டபோது மருத்துவர் அய்யா மதுரைக்குச் சென்று அங்கிருந்த தேவேந்திர குல வேளாளர், தேவர் சமூகத்தில் இருக்கக்கூடிய முன்னணி தலைவர்களைச் சந்தித்து ஒரு சுமுகமான சூழல் ஏற்படுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதன் காரணமாக பெரும் போராட்டமாக உருவெடுக்க இருந்த அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. தெற்கே அமைதியை ஏற்படுத்த வேண்டும், வன்முறையைக் கைவிட வேண்டும் என்று மருத்துவர் அய்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய ஜான் பாண்டியன், 1989ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டபோது முதல் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பெரம்பலூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டார். அதன்பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜான் பாண்டியனின் திருமணத்தை மருத்துவர் அய்யாதான் நடத்திவைத்தார் என்பதை இந்த தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தவகையில் தேவேந்திர குல வேளாளர்களின் பெருமையையும், உரிமையையும் பாதுகாப்பதற்கு பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும். மத்திய மாநில அரசுகள் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
அவரிடம், தேவேந்திர குல வேளாளர் என்று எங்களை அழைக்க வேண்டும் மற்றும் பட்டியலினத்திலிருந்து எங்களை வெளியேற்ற வேண்டும் என்று இரண்டு கோரிக்கைகளை அந்த சமூகத்தினர் முன்வைத்திருந்தனர். ஆனால், இதில் ஒரு கோரிக்கைக்கு மட்டும் மத்திய அரசு தீர்வை நோக்கி நகர்ந்துள்ளது என்று நான் கேட்ட போது,” இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் அந்த சமூக மக்களிடம் கலந்து பேசி, அவர்களின் கோரிக்கை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து நிறைவேற்றவேண்டும்” என்றார்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், “ஒரு பக்கம் மகிழ்ச்சி, ஒரு பக்கம் துக்கம் என்றுதான் இதை சொல்லவேண்டும். ஏறக்குறைய 30 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக இந்தப் உட் பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாளர்கள் என்கிற ஒரே பெயரில் அழைக்கவேண்டும் என்பதும் தேவேந்திர குல வேளாளர்களை அவர்கள் இடம்பெற்றிருக்கக்கூடிய பட்டியலினத்திலிருந்து நீக்கிடவேண்டும் என்பதும் எங்களின் தலையாய கோரிக்கையாக இருந்தது. எங்கள் சமூதாய மக்களைப் பட்டியலினத்தில் சேர்த்ததுதான் பொதுத்தளங்களில் நாங்கள் ஒடுக்கப்பட்டதற்குக் காரணம். எனவே தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியலின பிரிவில் இருந்து நீக்குங்கள் என்றுதான் நாங்கள் குரல்கொடுத்துவருகிறோம். நாங்கள் வைத்த ஒட்டுமொத்த கோரிக்கையில் இருந்து ஒரு சிறிய பாகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பெயரை மட்டும் மாற்றம் செய்து மக்களவையில் மசோதா தாக்கல் செய்திருக்கிறார்கள். இது தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பெயர் மாற்றம் மகிழ்ச்சிதரக் கூடிய ஒன்றாக இருந்தாலும் பட்டியலினத்திலேயே நீடிப்பார்கள் என்று மத்திய அரசு சொல்லக்கூடியது மிக பெரிய கோபத்தையும், வருத்தத்தையும் தேவேந்திர குல வேளாளர் மக்களிடத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

தேவேந்திரக் குள வேளாளர்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் வேளாண்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழக்கூடியவர்கள். எங்கள் பாரம்பரியம் தமிழ் இந்து பாரம்பரியம். எங்களைத் தவறுதலாகப் பட்டியலினத்தில் சேர்த்துவிட்டார்கள். கடந்த 2000 ஆண்டுகளாக எங்களுக்குத் தீண்டாமை கொடுமை நடந்ததாக எந்த வரலாறும் கிடையாது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிலவுடமையாளர்களாக இருந்தவர்கள் நாங்கள். அந்நிய படைப்புகளால் நிலம் பறிபோனவர்கள். இப்படியான சமூகத்தை வறுமையைக் காரணமாகக் காட்டி பட்டியலினத்தில் சேர்த்துவிட்டனர். இந்த சமூதாய மக்கள் தங்களது பூர்விகத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இடஒதுக்கீடுக்காக போராடவில்லை.
இட ஒதுக்கீடு இல்லாவிட்டாலும் இந்த சமூதாயத்தில் எங்களால் காலூன்றி நிற்கமுடியும். இதை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் எனக்கு ஆதங்கம். நாம் என்ன கேட்கிறோம், இந்த அரசு என்ன கொடுக்கிறது என்பதுதான் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்குக் கோபம். தேவேந்திர குல வேளாளர் மக்கள் பட்டியலினத்தில் இருந்து வெளியேறுவதால் இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த சமூக மக்களுக்குப் பாதிப்பு? யாராவது இதில் புண்படுகிறார்களா?
பட்டியலினத்தில் இருப்பவர்கள் எந்த தகுதி திறமையில் இருந்தாலும் அவர்களுக்கு சமமான மதிப்பு மரியாதை கொடுக்கக்கூடிய மனநிலை இந்த சமூகத்தில் இல்லை. எங்கள் மக்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகப் பட்டியலினத்தைப் பார்க்கிறார்கள்.
பட்டியலினத்தில் இருந்துகொண்டு தனியாக தேநீர்க்கடை, மளிகைக் கடை கூட போடமுடியாத அளவிற்கு பொதுத்தளத்தில் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். படித்த இளைஞர்கள் தனியார்த் துறைக்கு வேலைக்குச் செல்லும்போது சான்றிதழைப் பார்த்து பட்டியலினத்தவர்கள் என்பதால் அவர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. ஆனால் எல்லாவித தகுதிகளையும் படைத்தவர்களாக இருக்கிறார்கள். எனவே எங்களுக்குப் பெயர் மாற்றம் மட்டுமே போதாது. பட்டியலினத்திலிருந்தே எங்களை நீக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
“தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதை ஒரு சாரர் எதிர்க்கவும் செய்கிறார்கள். ஆனால் அந்த சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதில் நிஜமாகவே பாஜகவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இதை ஆதரித்து வலியுறுத்தியதால் அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகிறார்கள்.
இது ஓட்டு வங்கியாக மாறுமா என்பது எவ்வளவு சாத்தியம் என்று நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அதிக தேவந்திர குல வேளாளர்கள் சிதறிக்கிடக்கிறார்கள். மிகப் பெருவாரியான தேவேந்திரக் குல வேளாளர்கள் அதிமுகவை ஆதரிக்கிறார்கள் என்றால், இந்த முடிவு வேறு சமூக மக்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் பிள்ளைமார் சாதியை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். அந்த பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சாதி சான்றிதழ் கொடுக்கும்போது வெள்ளாளர், வேளாளர் என்று தான் பதிவு செய்து கொடுக்கின்றனர். இப்போது நானும் வேளாளர், அவர்களும் வேளாளரா? என்றுதான் கேட்பார்கள். முதலியார் சாதியில் வெள்ளாள கவுண்டர் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அதை எதிர்க்கிறார்கள். எங்களிடம் பண்ணை வேலை செய்தவர்களும் நாங்களும் ஒரே சாதியா என்ற ஒரு பார்வை இருக்கிறது.

எது பலம் என்று அதிமுக செய்திருக்கிறதோ அது பலவீனமாகவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், இழப்புக்கு வாய்ப்பிருக்கிறதே தவிரப் பெரிய அரசியல் ஆதாயம் இல்லை. அந்த சமூக மக்களுக்கு மனத் திருப்தியைக் கொடுக்கும். தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கு ஒரு கவுரவ, அடையாளத்தை அரசியல் சட்ட ரீதியாகக் கொடுப்பது அந்த சமூகத்தின் பார்வையில் நல்ல விஷயம்தான். அரசியலில் ரீதியாக இது பலன் தருமா என்றால் பெருத்த சந்தேகம்தான். ” என்று பத்திரிக்கையாளர் லெட்சுமணன் தெரிவித்தார்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப்பேட்டியில், “
மத்திய அரசின் விளக்கம்:
இதனிடையே தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியலினத்திலிருந்து நீக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து மத்திய அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், “பட்டியல் பிரிவிலிருந்து தேவேந்திர குல வேளாளர் இனத்தை நீக்குவது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்திகள் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏழு பட்டியல் பிரிவு இனங்களைத் தேவேந்திர குல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், தமிழ்நாட்டின் பட்டியல் இனங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, பட்டியல் பிரிவிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்படுவார்கள் என்பது முழுவதும் தவறானது என்றும், உண்மை நிலையை அது பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பட்டியல் பிரிவில் தேவேந்திர குல வேளாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் 7 பிரிவுகளைச் சேர்ப்பதற்கான மசோதா மக்களவையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது”.
