’முதல்ல என்ன வித்தியாசமா பாத்தாங்க… இனி ஆச்சரியமா பாப்பாங்க’- திருநங்கையின் மகிழ்ச்சி!
திரும்பத் திரும்ப நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே செயல்படுத்துகிறார்களே தவிர எங்களின் உரிமையை எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள்.
சென்னையில் புதிய வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ரூ. 3,770 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயிலின் நீட்டிப்பைக் கடந்த 14ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
இந்த மெட்ரோ ரயில் நிலையம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இங்கு 13 திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இத்தகைய முயற்சி வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்த புதியவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 13 பேரில் ஒருவரான நிர்மலாவை தொடர்புகொண்டு பேசினேன்.
”ரொம்ப சந்தோசமா இருக்கு. கஷ்டபடுற குடும்பத்துல இருந்துதான் வந்திருக்கேன். அன்னனைக்கு உழைச்சிதான் சாப்டவேண்டிருக்கும். டிப்ளோமா சிவில் இன்ஜீனியரிங் படிச்சிருக்கேன். மூனு வருசம் என்.ஜி.ஓ-ல ஃபீல்டு ஆபிசரா வேலை செஞ்சேன். அதுக்கு அப்புறம் கல்யாணம் ஆகிட்டதால வீட்லையே இருந்தேன். இப்போ இந்த வேலை கிடைச்சிருக்கு. பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் ஒரு நல்ல விடிவு காலம் பொறந்துருக்கு. திருநங்கைகள் பரவாயில்லையே அப்படினு ஒரு 40 சதவிகித பேர் சொல்லிட்டு இருக்காங்க. இப்போ யூனிஃபார்ம்லாம் போட்டுகிட்டு வரும்போது அக்கம்பக்கத்து வீடு, பக்கத்து தெருவுனு எங்களுக்குனு ஒரு மதிப்பு மரியாதை கிடைக்குது.

இங்க 8 மணி நேர வேலை. அதுல, ரெண்டு மணி நேரம் டிக்கெட் கவுண்டர்ல இருக்குறது, ரெண்டு மணி நேரம் பிளாட்ஃபார்மில் பேசஞ்சருக்கு உதவியா இருக்குறது, வெப்பநிலை பார்க்கிறதுன்னு மொத்தம் 7 பேர் இதுபோன்ற வேலைகளைப் பகிர்ந்து செஞ்சிட்டு இருக்கோம்.
இதுக்கு அப்புறம் அடுத்த தலைமுறையில வரும் திருநங்கைகளுக்கும் அவங்க படிப்புக்கு ஏத்த மாதிரி வேலை வாய்ப்பு கொடுத்தாங்கனா ரொம்ப ஹாப்பியா இருக்கும்.
நம்ம பையன் திருநங்கையா பொறந்திருந்தாலும், அவன் ஒரு நல்ல போஸ்டிங்கல இருக்கான், அவன எல்லாரும் மதிப்பா நடத்துவாங்க அப்படினு சொல்லி என் அம்மா ரெண்டு மூனு நாளா ரொம்ப சந்தோசபடுறாங்க. யாரு உங்களுக்கு வேலை கொடுத்தாங்களோ அவங்க நல்லா இருக்கணும். அவங்களுக்கு கையெடுத்து கும்பிடுறேனு அம்மா சொன்னாங்க.

ஊருல இவன் என்ன இப்படி இருக்கான்.. அப்படினு எல்லாரும் வித்தியாசமா பாத்தாங்க. இப்போ இந்த போஸ்டிங்ல இருந்துட்டு ஊருல போய் இறங்கினா ஆச்சரியமா பார்ப்பாங்க. திருநங்கையா மாறுனா கூட நல்ல வேலைய பாத்துக்கிட்டானு பெருமை படுவாங்கா” என்று மகிழ்ச்சியோடு பேசினார்.
13 transgender persons have been hired by Chennai Metro Rail to work in in the newly opened New Washermanpet Metro Rail station @the_hindu @THChennai #ChennaiMetro pic.twitter.com/2253keroAn
— Sunitha Sekar (@SunithaSekar) February 15, 2021
இதுகுறித்து துணை முதல்வர் ஓபிஎஸ், “ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சம ஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே மாண்புமிகு அம்மா அரசின் விருப்பம். மூன்றாம் பாலினத்தவர் மீதான தவறான பார்வையை மாற்றி சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவதில் அம்மாவின் அரசு என்றும் துணைநிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே மாண்புமிகு அம்மாஅரசின் விருப்பம். மூன்றாம் பாலினத்தவர் மீதான தவறான பார்வையை மாற்றி சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவதில் அம்மாவின்அரசு என்றும் துணைநிற்கும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) February 15, 2021
இதனைதொடர்ந்து இந்தியாவின் முதல் திருநங்கை பட்டதாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரரும், திருநர் உரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான கிரேஸ் பானுவிடம் பேசினேன்.
”திருநங்கைகளுக்கு புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை கிடைத்திருப்பது மகிழ்ச்சி. கேரளா, பெங்களூர் போன்ற மாநிலங்களிலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகள் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இதனால் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துவிடும் என்றில்லை. திருநங்கை சமூகத்தினருக்கு உதவி செய்திருக்கிறார்கள், இது ஒரு அங்கீகாரம் அவ்வளவுதான்.
இந்த பணியும் கூட தற்காலிக பணிதான். நிரந்தர பணி இல்லை. நாங்கள் முழுக்க முழுக்க நிரந்தர பணியைத்தான் எதிர்பார்க்கிறோம். மாதம் தோறும் நிரந்தர வருமானம் வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. இதனால் 13 திருநங்கைகள் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இதுபோன்ற வாய்ப்புகளை பெருநகரங்களில் இருக்கக்கூடிய திருநங்கைகள் பயன்படுத்திகொள்கிறார்கள். ஆனால் கிராமப் புறங்களில் இருக்கக்கூடியவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு என்ன மாதிரியான வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்? என்பதையும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இப்போது இருக்கக்கூடிய தலைமுறையை விசிபிலிட்டி தலைமுறை என்று சொல்லலாம். இதுவரைக்கும் வெளியில் தெரியாமல் இருந்த சமூகம் இன்று அதிகமாக வெளியில் தெரிகிறது. சமூகமும் அவர்களை அங்கீகரிக்கிறது, ஏற்றுக்கொள்கிறது. ஆனால் எங்களுக்கான உரிமையைப் பற்றிப் பேசும்போது இந்த சமூகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். எங்களுக்கான உரிமைகள் இங்குக் கொடுக்கப்படவில்லை. ஆனால் எங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள் அவ்வளவுதான்.
எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறோம். அந்த இட ஒதுக்கீடு குறித்து எந்த முடிவையும் ஏன் எடுக்க மறுக்கிறார்கள். திரும்பத் திரும்ப நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே செயல்படுத்துகிறார்களே தவிர எங்களின் உரிமையை எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். எப்போது உரிமை கிடைக்கிறதோ அப்போதுதான் முழு சுதந்திரத்தை உணர முடியும். வெறுமனே நலன் சார்ந்த விஷயங்களைச் செய்யும்போது பாராட்டுவேன் அவ்வளவுதான்” என்றார்.
