10 லட்சம் கொரோனா நிதி வழங்கிய Village Cooking Youtube Channel
பிரமாண்டமாக, விதவிதமாக சமையல் செய்யும் இவர்கள், செய்த உணவை காப்பகங்களுக்கு வழங்கிவந்துள்ளனர். சமூக நன்னோக்குடன் செயல்படும் இவர்கள் தற்போது கொரோனா நிவாரண நிதியும் வழங்கியுள்ளனர்.
பொழுதுபோக்கிற்காக பெயர்போன யூட்யூப், பலரின் திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக மாறியுள்ளது. வணிக ரீதியாகவும் திறமைகளுக்கு தக்க சன்மானம் கிடைக்க பெற்ற இந்த தளத்தில் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளது Village Cooking என்ற யூட்யூப் சேனல்.
யூட்யூபில் ஒரு கோடி சப்ஸ்க்ரைபெர்ஸை கடந்த முதல் தமிழ் சேனல் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்காக யூட்யூப் நிறுவனம் தந்துள்ள டைமண்ட் பட்டனை பெற்றதுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் கொரோனா நிதி வழங்கியுள்ளனர்.
இத்தகைய சாதனை படைத்த இந்த சேனலை நிற்வகிப்பது பெரிய நிறுவனமோ, பின்னணி உள்ள தயாரிப்போ அல்ல. இந்த சேனலை புதுக்கோட்டையை சேர்ந்த 6 பேர் கொண்ட குழு இயக்கி வருகிறது. இந்த ஆறு பேரும் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்தில் பயிர் செய்யும் காலம் போக மீதமுள்ள மாதங்களில் ஏதேனும் புதுமையாக செய்யவேண்டும் என்ற இவர்களின் முயற்சி தான் Village Cooking Channel. 2018 ஆம் ஆண்டு சோதனையாக இந்த சேனலை ஆரம்பித்து சமையல் வீடியோக்களை பதிவிட்டனர். பெரிய தம்பி என்ற பெரியவரின் வழிகாட்டுதலில் ஐந்து இளைஞர்கள் இதை நடத்திவருகிறார்கள். சமையல் சேனல் என்றால் யூட்யூபில் ஆயிரம் குவியும். அதில் இவர்கள் தனித்து தெரிய என்ன காரணம் என்றால் அது இவர்களது வெகுளி பேச்சும், மண் மனம் மாறாத சமையல் குறிப்பும் தான். திறந்த வெளியில் கிராமபுற பாரம்பரிய முறையில், பிரமாண்டமாக சமைத்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளது இந்த பட்டாளம்.

சுப்பிரமணியம், ஐய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் ஆகிய ஐவர் தான் பெரியதம்பியின் இளம்படை. சமையல் வல்லுனரான தாத்தா பெரியதம்பியின் குறிப்புகள் கொண்டு, M Phil பட்டதாரியான சுப்ரமணியன், தன் சக உறவினர்களோடு தொடங்கிய இந்த கூட்டுமுயற்சி, குறுகிய காலத்தில் பெரிய மைல்கல்லை அடைந்துள்ளது. இவர்களின் சமையல் எந்த அளவு பிரபலம் என்றால், பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த காங்கிரஸ் MP ராகுல் காந்தி இவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
பிரமாண்டமாக, விதவிதமாக சமையல் செய்யும் இவர்கள், செய்த உணவை காப்பகங்களுக்கு வழங்கிவந்துள்ளனர். சமூக நன்னோக்குடன் செயல்படும் இவர்கள் தற்போது கொரோனா நிவாரண நிதியும் வழங்கியுள்ளனர். சிறிய கிராமத்தில், கூடிய வசதிகள் கொண்டு உலக மக்களை மகிழ்வித்து வரும் இந்த விவசாய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!
