பழங்குடிகளுக்காக போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்!
இடைக்கால ஜாமீன் வழக்கு நிலுவையில் இருந்த நிலையிலே மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த போராளியின் மரணத்துக்கு தமிழ் சமுதாயமே இரங்கல் தெரிவித்தது.
பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் காலமானார். அவருக்கு 84 வயது. திருச்சியில் பிறந்த இவர் இங்குள்ள பழங்குடிகளுக்கு மட்டுமின்றி ஜார்கண்ட் மாநிலத்திலும் பழங்குடிகளின் உரிமைக்காக போராடி வந்தார். பீமா கோரேகான் வன்முறை வழக்கில் கைதாகி மஹாராஷ்டிராவில் சிறையில் இருந்துவந்தவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தியா உற்று நோக்கும் இந்த தமிழன் யார் ?
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன் பகுதியில் 2017-ம் ஆண்டு இருசமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் ஸ்டான் சுவாமியைக் கைது செய்தனர்.
ஸ்டேன் சுவாமிக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த அமைப்புடன் சேர்ந்து இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்றும் என்ஐஏ அவர் மீது குற்றஞ்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இவரின் கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கெனவே பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் அவர் உடல்நிலை மேலும் மோசமானது. கடைசியாக அவர் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவில் கூட "என்னை மருத்துவமனையில் சேர்ப்பதால் எந்த பலனும் இருக்காது. என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை. நான் இந்த சிறையிலேயே இறந்துவிடுகிறேன் என்னை மருத்துவமனையில் சேர்க்காதீர்கள்" என்று கூறியிருந்தார்.
ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் கடந்த மே 29 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர் இடைக்கால ஜாமீன் வழக்கு நிலுவையில் இருந்த நிலையிலே மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த போராளியின் மரணத்துக்கு தமிழ் சமுதாயமே இரங்கல் தெரிவித்தது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட பல கட்சி தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.
