கெயில் ஓம்வெத் உயிரிழப்பு: மார்க்சியத்துக்கும் அம்பேத்கரியத்துக்குமான உறவைத் தனது எழுத்தில் வலியுறுத்தியவர்!
டாக்டர் கெயில் ஓம்வெத்தின் உடல் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சாங்லி மாவட்டம் காசேகானில் கிராந்திவீர் பாபுஜி பதங்கர் சன்ஸ்தா வளாகத்தில் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர், ஆய்வாளர், கல்வியாளர், சிந்தனையாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட கெயில் ஓம்வெத் இன்று (ஆகஸ்ட் 25ஆம்) உயிரிழந்துள்ளார். உடல்நல குறைவால் உயிரிழந்த அவருக்கு வயது 81. அமெரிக்காவில் பிறந்த இவர், இந்தியாவில் குடியுரிமை பெற்றவர். நாட்டின் பல்வேறு மக்கள் இயக்கங்களில் பங்கேற்றவர். தனது முனைவர் பட்ட ஆய்வின்போது இந்தியாவிற்கு வருகை தந்து இங்குள்ள சமூக இயக்கங்களைப் பற்றிப் படித்தார். மேலும் மகாத்மா புலேவின் பணி குறித்தும் அவர் படித்தார். கெயில் ஓம்வெத்-ன் உயிரிழப்பு பலரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தலித் அரசியல், பெண்கள் போராட்டம், சாதி எதிர்ப்பு இயக்கம், காலனித்துவ சமூகம் உள்ளிட்டவைகள் குறித்த 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். Understanding Caste – 2011, Ambedkar : Towards an Enlightened India – 2004, Patriarchy – 1986, Seeking Begumpura : The Social vision of Anti Caste intellectuals – 2008, Dalits and the Democratic Revolution : Dr. Ambedkar and the dalit movement in colonial – 1994, Dalit Visions – 1995, Buddhism in India : Challenging Brahmanis and caste – 2003, Social justice philanthropy – 2009, The Songs of Tukuba – 2012, The Dalit Liberation movement in the colonial period – 2004, Gender and Technology : Emerging visions from Asia – 1995 உள்ளிட்டவை அவர் எழுதிய புத்தகங்கள்.

இறுதி சடங்கு நாளை (ஆகஸ்ட் 26) சாங்லி மாவட்டத்தில் உள்ள கசேகானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“முனைவர். கெயில் ஓம்வெத் ஒரு சிறந்த எழுத்தாளர். சக்திவாய்ந்த சமூக விஞ்ஞானி. 1970, 1980, 1990 களில் நாங்கள் பல பேரணிகள், தேசிய மாநாடுகளில் ஒன்றாக வேலை செய்தோம். மகாராஷ்டிராவில் மகளிர் விடுதலை இயக்கத்தின் ஐக்கிய முன்னணியின் அனைத்து கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று” என இந்திய பெண்கள் சங்கத்தின் துணைத் தலைவர் விபூடி பட்டேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், “அம்பேத்கரிய -பெண்ணிய சிந்தனையாளர் கெயில் ஓம்வெத் (1941-2021) காலமாகியிருக்கிறார். அம்பேத்கரைப் பற்றி படிக்க - எழுத முற்படுகிற எவரும் கெயில் ஓம்வெத் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. எழுத்து மட்டுமல்லாது சொந்த வாழ்விலும் முன்மாதிரியாக இருந்தவர். எந்த சாதி எதிர்ப்பு கருத்தாக்கங்கள் பற்றி எழுதினாரோ அதற்கேற்ப தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். விவசாய சமுதாயத்தோடு ஆய்வுரீதியான இணக்கத்தைக் கொண்டிருந்த அவர் விவசாய குடும்பத்திலேயே வாழ்ந்து முடித்திருக்கிறார்.
அமெரிக்காவில் பிறந்த கெயில் அங்கிருந்த மாணவர்-கறுப்பின - பெண்ணிய எழுச்சிகளின் பின்புலத்தில் உருவானவர். அதே எண்ணவோட்டத்தோடு இந்தியா வருகை புரிந்தார். இவருடைய முதல் நூல் பெண்ணியம் தொடர்பானது. பெண்ணிய சிந்தனைகள் என்பவற்றை ஒரே மாதிரியாக பார்க்க முடியாது என்பதை சொன்னவர் இவர். எலினார் ஸெலியட்டின் மாணவியாக ஆரம்பித்த அவரின் ஆய்வேடு பூலேவின் சத்யசோதக் சமாஜம் பற்றியது. Cultural Revolt in a Colonial Society: The Non-Brahmin Movement in western india என்பது அவருடைய ஆய்வாகும். நாங்கள் ஆங்கிலத்தில் பெரியார் பற்றி எழுத முற்பட்டபோது அதற்கு முன்மாதிரியாக கெயிலின் நூலையே கொண்டோம் என்று குறிப்பிட்டார் வ.கீதா.
கெயில் ஓம்வெத் பூலே -அம்பேத்கரியரான பாரத் பதங்கர் என்பவரைக் காதல் மணம் புரிந்தார். ஷ்ராமிக் முக்திதள் அமைப்பின் நிறுவனர் அவர்.
கெயில் ஓம்வெத் 1970 களில் இடதுசாரிகளோடு நெருக்கமாக இருந்தார். அக்காலத்தில் அவர் சாதி தொடர்பாக இடதுசாரிகளோடு நடத்திய விவாதங்களை குறிப்பிட்டுச் சொல்வார்கள். 1990 களில் இடதுசாரி கண்ணோட்டத்துடன் தலித் பிரச்சினைகளை அணுக முற்பட்ட செயற்பாட்டாளர்களிடையே கெயிலின் கட்டுரைகளும் விவாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது (வர்க்கம் - சாதி- நிலம் என்ற நூல்). பிறகு பெண் தொடர்பான பிரச்சினைகளை பெண்ணிய நோக்கோடு நிலத்தோடும், சாதி எதிர்ப்பு போராட்டங்களோடும் இணைத்துத் தொடர்ந்து எழுத தொடங்கினார். பூலே, அம்பேத்கர் ஆகியோரை இந்தியாவின் நிகரற்ற சிந்தனையாளர்களாக நிறுவியதில் அவருக்கு முக்கிய பங்கிருக்கிறது. Dalits and the Democratic Revolution, Buddhism in india : Challenging Brahmanism and Caste போன்றவை அவர் நூல்களுள் முக்கியமானவையாகும். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு தலித் தோழமை மையம் சார்பாக வழக்கறிஞர் ரஜினி மதுரையில் நடத்திய அம்பேத்கர் 2000 கருத்தரங்கிற்கு கெயிலை அழைத்திருந்தார்கள்.
தொல்.திருமாவளவன் அவர்களின் Talisman என்ற ஆங்கில நூலுக்கு (தமிழில் அடங்க மறு) அணிந்துரை வழங்கியதோடு அதை வெளியிட்டும் பேசினார் கெயில். அந்த அணிந்துரையில் திராவிட ஆட்சி நிலவும் தமிழகத்தின் தலித் புறக்கணிப்பைப் பற்றி தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியிருந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக உபாதைகளோடு இருந்த அவரின் உடல்நிலை கடைசி வாரத்தில் மோசமாகியதால் காலமாகியிருக்கிறார். தொடக்கத்தில் கோட்பாட்டு அழுத்தத்தோடு நூல்களை எழுதிய அவர், 1990 களுக்குப் பிறகு செயற்பாட்டாளர் தொனியோடு எழுத்துகளை எளிமைப்படுத்திக் கொண்டார் என்ற விமர்சனமும் உண்டு. சில கட்டுரைகள் அவ்வப்போது மொழி பெயர்க்கப்பட்டதைத் தாண்டி அவருடைய முக்கியமான நூல்கள் தமிழில் வெளியாகவில்லை. முதலில் வர்க்கம் - சாதி-நிலம் என்ற நூல் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. அவரது இரண்டு கட்டுரைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுச் சாதி, வர்க்கம், நிலம் என்ற தலைப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன என்று இந்நூல் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் கே.கேசவன். அண்மையில் அம்பேத்கர்: ஒரு புதிய இந்தியாவுக்காக என்ற நூல் வெளியானது. கெயில் ஓம்வெத் அவர்களை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் தனது முகநூல் பக்கத்தில், “உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளரும் செயற்பாட்டாளருமான கெயில் ஓம்வெத் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து துயருற்றேன்.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி 80 ஆவது பிறந்தநாளைக் கண்ட அவர் கடந்த சில ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். அமெரிக்காவில் பிறந்து இந்தியாவில் பாரத் பதங்கரை மணந்து மகாராஷ்டிராவிலேயே வாழ்ந்துவந்த கெயில் அம்பேத்கரிய சிந்தனைகளை உலக அரங்குக்கு எடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் நிறப்பிரிகை இதழை நடத்திய காலத்தில் அவரோடு கடிதத் தொடர்பு இருந்தது. மாநில மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய அறிவுஜீவிகள் அதிகமாக உருவாகவேண்டும் என அப்போது ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மராத்தி தலித் இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரையொன்றை மொழிபெயர்த்து நிறப்பிரிகை தலித் இலக்கிய இணைப்பில் ( 1994 நவம்பர்) வெளியிட்டேன். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் கட்டுரைகளை மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Talisman என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். அதற்கு கெயில் ஓம்வெத் அவர்கள்தான் முன்னுரை எழுதியிருந்தார். அந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்னைக்கு அவர் வந்திருந்தபோதுதான் கடைசியாக அவரை சந்தித்தேன்.
மார்க்சியத்துக்கும் அம்பேத்கரியத்துக்குமான உறவைத் தனது எழுத்திலும் செயல்பாடுகளிலும் வலியுறுத்திவந்த கெயில் ஓம்வெத் தலித் மக்களுக்கு நம்பகமான தோழராகத் திகழ்ந்தார்.

ஷ்ராமிக் முக்தி தள் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான பாரத் பதங்கரை மணம்புரிந்து மகாராஷ்டிராவிலேயே வாழ்ந்துவந்தார். அவரது மகள் பிராச்சி, மருமகன் தேஜஸ்வி, பேத்தி நியா தற்போது அமெரிக்காவில் வாழ்கின்றனர்.
டாக்டர் கெயில் ஓம்வெத்தின் உடல் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சாங்லி மாவட்டம் காசேகானில் கிராந்திவீர் பாபுஜி பதங்கர் சன்ஸ்தா வளாகத்தில் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு என் அஞ்சலி! அவரை இழந்து வாடும் அவரது இணையர் பாரத் பதங்கருக்கும், மகள் பிராச்சிக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories
"திமுக கொடி கம்பம் நட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: 1.5 லட்சம் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?"