கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பது யூகமே..! - மருத்துவர் பிரவீன் குமார்
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸின் 3வது அலை விரைவில் தொடங்கும் என பல்வேறு மருத்துவ அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், 3வது அலையானது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கொரோனா 3வது அலை குழந்தைகளைத் தாக்குமா..? கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி ஆகியவை குறித்து, டெல்லி லேடிங்ஹார்டு மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள், மருத்துவ பிரிவு இயக்குனர், டாக்டர் பிரவீன் குமார் கூறியிருப்பதாவது,
“கொரோனா வைரஸ் உருமாறும் தன்மை உடையது. கொரோனாவின் மூன்றாவது அலையானது குழந்தைகளைப் பாதிக்கும் அல்லது அடுத்த அலையின் போது தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பவை எல்லாம் யூகத்தின் அடிப்படையிலான கூற்றுகளே ஆகும்.
தற்போதைய சூழலில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி அனுமதிக்கப்படவில்லை. மேலும், பெரும்பான்மையான பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆகவே, அடுத்த அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று யூகத்தின் அடிப்படையிலேயே கூறப்படுகிறது. எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குழந்தைகளை எப்படிப் தாக்கும் என்பதைக் கூறமுடியாது. வரும்காலங்களில் கொரோனா பாதிப்பானது குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
பெரியவர்கள் வெளியில் சென்று வரும்போது தொற்று தாக்கும் அபாயம் அதிகமிருப்பதால், பொதுமக்கள் அதிகமாகக் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது குழந்தைகளை கொரோனா தொற்று தாக்குவதிலிருந்து நாம் காத்துக் கொள்ளலாம். தற்போது, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதன்மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளும், பிறந்த குழந்தைகளும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.
