ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு ஏன் இவ்வளவு கண்டனம்?
அந்த வகையில் மக்கள், நெட்டிசன்கள், திரை பிரபலங்கள், இயக்குனர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, புதிய டிஜிட்டல் கொள்கை என வரிசையாக நிகழ்ந்துவரும் சட்டத் திருத்தங்களின் அடுத்த கட்டமாக இந்த ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு பார்க்கப்படுகிறது. இது மக்கள் கருத்துக்கு முன்வைக்கப்பட்டது ஜூலை 2 ஆம் தேதி வரை மக்கள் தங்கள் ஆதரவு அல்லது எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. அந்த வகையில் மக்கள், நெட்டிசன்கள், திரை பிரபலங்கள், இயக்குனர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிக்கிறது.
ஒளிப்பதிவுச் சட்டம் 1952-ன் பிரிவு 5B (1)-ல், "ஒரு படம் நாட்டின் பாதுகாப்புக்கோ, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கோ, மற்ற நாடுகளுடனான நட்புறவுக்கோ, சட்ட ஒழுங்கிற்கோ, ஒழுக்கம் அல்லது அறநெறிக்கோ ஊறுவிளைவிப்பதாக இருந்தால் அதற்குச் சான்றிதழோ பொதுவெளியில் திரையிடப்படுவதற்கான அனுமதியோ மறுக்கப்படும். இது அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது இதுபோன்ற எந்தவொரு குற்றத்திற்கும் பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்திருத்த வரைவில், இந்தப் பிரிவு 5B (1)-ஐ மீறும் எந்தவொரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழையும் புதிய பிரிவு 6 (1)-ன் படி, மத்திய அரசு திரும்பப் பெற முடியும். அதாவது சென்சாரே ஒப்புதல் அளித்திருந்தாலும் மத்திய அரசு நினைத்தால் ஒரு படம் வெளியாவதைத் தடுக்க முடியும். சென்சார் போர்டின் முடிவை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட முடியும்.
ஏற்கனவே ஒரு திரைப்படம் வெளியாக மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது நாம் அறிந்தது. பெருவாரியான மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவல்ல திரைப்படங்கள் இந்த சென்சார் போர்டை கடப்பதே சமயங்களில் கடினமாக இருந்துவருகிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவும், அரசியல் செல்வாக்காலும் இந்த சென்சார் சான்றிதழை ஆயுதமாக கொண்டு கலைஞர்களின் படைப்புக்களை வதைப்பதுண்டு.அப்படியெல்லாம் ஒரு கலைஞன் இன்னல்களைச் சந்திக்கையில் அவனுக்குக் கைகொடுத்தது திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்தான்.
ஆனால் தற்போது மத்திய அரசு தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் படி, இந்தத் தீர்ப்பாயமும் கலைக்கப்பட்டவிட்டது. திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில் இப்படியொரு சட்டத் திருத்தத்தையும் மத்திய அரசு புகட்டி இருப்பதுதான் அனைவரின் கண்டனத்திற்குரியதாக உள்ளது. இந்த சட்ட திருத்தும் நிறைவேற்றப்பட்டால் கலை உலகே ஸ்தம்பித்து விடும்.
ஏற்கெனவே இருக்கும் 'U', 'U/A', மற்றும் 'A' சான்றிதழ்களுடன் வயது வாரியாக சில புதிய சான்றிதழ்களும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அதன்படி, 'U/A 7+', 'U/A 13+' and 'U/A 16+' என 'U/A' சான்றிதழை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.
இந்த வரைவில் சேர்க்கப்பட்டிருக்கும் பிரிவு 6AA-யின் படி, "ஒரு படைப்பாளியின் எழுத்துபூர்வ அனுமதியில்லாமல், அதை நகல் எடுக்கவோ, அதை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ பதிவு செய்யவோ, ஒளிபரப்பு செய்யவோ கூடாது. மீறினால், 3 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.3,00,000 அல்லது படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவிகிதம் வரை அபராதமும் வசூலிக்கப்படும்.''
தற்போதுள்ள சட்டத்தின்படி, ஒரு படத்தின் சென்சார் சான்றிதழ் 10 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர், அதைப் புதுப்பிக்கவேண்டும்.
சமீபகாலமாக ஆளும் அரசுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை திரைப்படம் மூலம் தெரிவிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டுவரவே மத்திய அரசு இத்தகைய சட்டதிருத்தத்தை கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு கலைஞனின் படைப்பை சிதைக்கும் சட்டமாக மட்டுமே திரை உலகம் இதை பார்க்கிறது. கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், ஹன்சல் மேத்தா, வெற்றிமாறன், நந்திதா தாஸ், ஃபர்ஹான் அக்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சூரியா, கார்த்தி உள்ளிட்ட பலரும் வெளிப்படையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிரான தன் கருத்தை ஊடகங்களில் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
