700 அரங்குகள், 6 லட்சம் தலைப்புகள்: தொடங்குகிறது 44-வது சென்னை புத்தக கண்காட்சி!
புத்தகக் கண்காட்சியை எதிர்வரும் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திறந்துவைக்கிறார். அன்று மாலையே சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் உலகப் புகழ் பெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி கொண்டாட்டமாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் கரோனா ஊரடங்கால் புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை. வெறுமனே புத்தக விற்பனைக்கான இடமாக மட்டும் இல்லாமல், கலை இலக்கிய ஆர்வலர்களின் கூடுதலுக்கான இடமாகவும் சென்னை புத்தகக் கண்காட்சி இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறாததால் வாசகர்களும் புத்தக விற்பனையாளர்களும் ஏமாற்றத்துடன் இருந்தனர். இந்தநிலையில்தான், 44-வது புத்தகக் கண்காட்சி 24ஆம் தேதி தொடங்குகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை பபாசி அறிவித்தது.
இதுகுறித்து பபாசி வெளியிட்ட அறிக்கையில், “44-வது சென்னை புத்தகக் கண்காட்சி எதிர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும். மொத்தம் 14 நாட்கள் நடைபெறும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை திறந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு நீலம் பதிப்பகத்தில் இருந்து புதியதாக என்னென்ன புத்தகங்கள் வெளிவருகின்றன, புத்தகக் கண்காட்சிக்கு எப்படி தயார் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கரை தொடர்புகொண்டு பேசினேன்.
இந்த ஆண்டு சிறு வரிசை நூல்களைக் கொண்டுவரவிருக்கிறோம் என்று பேசத் தொடங்கிய வாசுகி பாஸ்கர், “அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் போன்றவர்களின் சிறு வரிசை நூல்களை 20, 30 பக்கங்களில் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறோம். அந்தவகையில் இந்த முறை அண்ணல் அம்பேத்கரின் ‘விசா’ வுக்காக காத்திருக்கிறேன் என்ற சிறுநூலை முதலாவதாக வெளியிடுகின்றோம்.
எழுத்தாளர் ஸ்டாலின் இராஜாங்கம் எழுதியுள்ள ‘அயோத்திதாசர் என்னும் வைத்தியர்’, ’தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்’ என்கிற இரு புத்தகங்களையும் வெளியிடுகின்றோம்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் வே. அலக்ஸ் எழுதிய ‘பஞ்சமி நில உரிமை’ புத்தகத்தை தற்போது மறுபதிப்பு செய்து வெளியிடுகின்றோம். மேலும், ‘ஓணம் பண்டிகை பௌத்த பண்பாட்டு வரலாறு’ என்கிற புத்தகமும் வெளிவருகிறது.

தொடர்ந்து, ஆப்பிரிக்க கருப்பின மக்களின் மொழிபெயர்ப்பு கவிதையான ‘இது கருப்பர்களின் காலம்’ என்கிற புத்தகத்தை எஸ்.ஜே சிவசங்கர் மொழிபெயர்த்திருக்கிறார். அதையும், அண்ணல் அம்பேத்கர் அவரது மனைவி ரமாபாய்க்கு எழுதிய கடிதத்தை ஒரு சிறு வெளியீட்டாகவும் வெளியிடுகிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில், 5 புதிய புத்தகங்களை வெளியிட்டோம். அந்த 5 புத்தகங்களுமே புத்தகக் கண்காட்சியிலேயே காலியாகிவிட்டன. அதனைதொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் 6 அல்லது 7 புத்தகங்களை வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். ஆனால், அந்த சமயத்தில் கரோனா வந்துவிட்டது. கடந்த ஆண்டில் அச்சடித்த புத்தகங்களை கரோனோ காலகட்டத்தில்தான் நாங்கள் மறுபதிப்பே செய்யத் தொடங்கினோம். கரோனா காலகட்டத்தில் நிறையப் பேர் ஆன்லைனில் புத்தகங்களை வாங்கினார்கள். இன்னும் சொல்லப்போனால் எங்கள் பதிப்பகத்தின் புத்தகங்கள் அமேசானில் டாப் செல்லிங் புத்தகமாகக் கூட இருந்தது. கரோனா சமயத்தில் மட்டும் சுமார் 500 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
டிசம்பர், ஜனவரி என்பது கொண்டாட்டமான மாதங்கள். பொங்கலை ஒட்டி புத்தகக் கண்காட்சி வருவதால் அது நன்றாக இருக்கும். இந்த ஆண்டு நடத்தாமல் விடக் கூடாது என்பதற்காக நடத்துகிறார்கள். அது எந்த அளவு இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் வழக்கமான மக்கள் கூட்டம் இருக்காது, கொஞ்சம் குறையும் என்று நான் நினைக்கிறேன்.
பொதுவாகத் தமிழ்ச் சூழலில் புத்தகக் கண்காட்சியை ஒட்டி புத்தகங்களை வேகவேகமாக கொண்டுவரக்கூடிய போக்கு இருக்கிறது. வணிகத்திற்குப் புத்தகக் கண்காட்சி ஒரு முக்கியமான காலகட்டமாக இருந்தாலும்கூட ஒரு நூல் தயாரிப்பதற்கான தகுந்த நேரத்தை எடுத்து செலவு செய்கிற கலாச்சாரம் நம்முடைய தமிழ் இலக்கிய சூழலில் இல்லை. புத்தகக் கண்காட்சியை ஒட்டி வேக வேகமாக கொண்டுவரக்கூடிய சூழல் இங்கு இருக்கிறது. அதை சுயவிமர்சனமாக ஏற்றுக்கொண்டு புத்தகக் கண்காட்சி என்பது கூடுகைக்கான இடமாக இருக்கிற அதே சூழ்நிலையில், புத்தகங்களைத் துரிதமாகப் பயன்படுத்துவது மாறவேண்டும் என்று நான் நினைக்கிறேன். புத்தகக் கண்காட்சி புத்தகங்களைக் கொண்டுவருவதற்கான இடமாக மட்டும் மாறக்கூடாது, அனைத்திற்கும் ஒரு தளத்தை அமைத்துக்கொடுப்பதற்கான இடம்தான் அது. ஆனால் அவசர அவசரமாகப் புத்தகங்களைக் கொண்டுவரும் சூழ்நிலையாக மாறிவிட்டது” என்றார்.
இதுகுறித்து பபாசி துணைத்தலைவர் நாகராஜனைத் தொடர்புகொண்டு பேசியபோது, ”கடந்த ஆண்டு பதிப்பக துறை திணறிக்கொண்டிருந்தது. மூச்சுக் காற்று விடுவதுபோல இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில்தான் புத்தக விற்பனையை புதியதாகத் தொடங்குவதுபோல இருக்கிறது. பொருளாதார ரீதியாக நொடிந்து போனதால் சென்னை புத்தகக் கண்காட்சியில் வரக்கூடிய விற்பனையை வைத்துத்தான் இதன் பிறகு வரும் அனைத்திற்கும் திட்டம் போடவேண்டும். ஏனென்றால் எங்களிடம் நிறையப் புத்தகங்கள் ஸ்டாக்கில் இருக்கின்றன. கடன் வாங்கி நிறைய புதுப்புத்தகங்களையும் கொண்டுவருகிறோம். இந்த புத்தக விற்பனையை பொறுத்துத்தான் அனைத்தும் இருக்கிறது” என்றார்.

கரோனா காலத்தில் புத்தக விற்பனை நன்றாக இருந்தது என்று சில பதிப்பாளர்கள் சொல்கிறார்கள். அதைப் பற்றி உங்களின் கருத்து என்னவென்று கேட்டேன். அதற்கு பதிலளித்த நாகராஜன், “10 சதவிகித பேர்தான் ஆன்லைனில் புத்தகங்களை வாங்குகிறார்கள். புத்தகங்களை நேரடியாகப் பார்த்து, படித்து வாங்குவதுதான் சிறந்த உணர்வைத் தரும். இல்லை என்றால் புத்தகத்தைப் படித்தவர்கள் யாராவது சொல்லி வாங்குவதும் சிறப்பாக இருக்கும்.
இங்கு புத்தகத்தைப் பற்றி எந்த மீடியாவும் எழுதுவதில்லை. எந்த மீடியாவும் புத்தகத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. எங்களுக்கு மீடியாவின் வெளிச்சம் இல்லாததால் மக்கள் நேரடியாகப் புத்தகக் கண்காட்சிக்கு வந்து பார்த்து வாங்குவதுதான் நிறைவு.
புத்தகத்திற்காக எந்த மீடியாவிலும் எங்களால் விளம்பரம் கொடுக்கமுடியாது. அதனால் இந்த தொழிலில் மீடியாவும் எங்களை கண்டுகொள்வது இல்லை” என்றார்.
பாரதி புத்தகாலயத்தின் பதிப்பகத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிய அவர், “இந்த புத்தக கண்காட்சிக்கு எங்கள் பதிப்பகத்தில் இருந்து நிறையப் புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன. தாமதமாகத்தான் வேலையைத் தொடங்கினோம். 40, 50 புத்தகங்களை வெளிகொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறோம். அனைத்து வேலைகளும் முடியும் நிலையில் வந்து நிற்கிறது.
பெரும்பாலும் அனைத்து பகுதிகளும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. அதனால் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் திரளாக வருவார்கள் என்று நினைக்கிறேன். மீடியாவும் உதவி செய்தால் நிச்சயமாக மக்கள் கூட்டம் வரும்.
உலகத்தின் பல பகுதிகளில் நடக்கும் பெரிய புத்தகக் கண்காட்சியை எல்லாம் ரத்து செய்துவிட்டார்கள். ஆனால் சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. வருடம் வருடம் நடைபெறும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும் கூட்டங்களும் இந்த ஆண்டும் நடைபெறும் ” என்று தெரிவித்தார்.

இதனிடையே இன்று (பிப்ரவரி 19) தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் (பபாசி) சென்னை YMCA மைதானத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “சென்னை புத்தகக் கண்காட்சியை எதிர்வரும் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திறந்துவைக்கிறார். அன்று மாலையே சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் இந்த புத்தகக் கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் 21ஆம் தேதி காலை பெசண்ட் நகரில் முன்னாள் சென்னை மாநகராட்சியின் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் மினி மாராத்தான் நடைபெறவிருக்கிறது. புத்தகக் கண்காட்சியை 700 அரங்குகளில், 6 லட்சம் தலைப்புகளில் அமைக்கப்படவிருக்கிறோம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த ஆண்டில் சென்ற ஆண்டை போலவே சுமார் 10 லட்சம் வாசகர்கள் வருகை தருவார்கள் என்று நம்புகிறோம்.

தினந்தோறும் மாலையில் நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அறிமுகம் செய்த புத்தகங்களைக் காட்சிப் படுத்த இருக்கிறோம். வழக்கம் போல 10 சதவிகித கழிவு விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட இருக்கிறோம். புதியதாக வெளியிடப்படும் புத்தகங்களுக்கு 20 லிருந்து 30 சதவிகித கழிவு விலையிலும் பதிப்பாளர்கள் விற்பனை செய்ய இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஓவியங்களை காட்சிப்படுத்த இரண்டு அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 4, 5 புத்தகங்களை வெளியிட்டுள்ள சிறிய எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் இந்த புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் விதமாக ரேக் சிஸ்டம் என்கிற முறையில் புதிய அடுக்குகளை ஒதுக்கீடு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் என்பதால் அந்த தினத்தில் நடைபெறும் மாலை நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களாளே நடத்தப்பட இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
