'தென்மேற்கு பருவ மழையை அறிவித்தவர் பெயர் காகம்' சரியாகக் கணித்த வானிலை ஆய்வாளர்கள்!
தற்போது மழை பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்க வானிலை ஆய்வாளர்கள் இருந்தாலும், முந்தைய காலங்களில் யார் மூலம் மழையை கண்டறிந்தனர்? எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்? என்ற கேள்வி எழலாம். அதற்கான விடைதான் இந்த தொகுப்பு.
மழை! தமிழ் நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னை துவங்கி, கன்னியாகுமரி வரை வெவ்வேறு காரணங்களால் மழை பொழிவைப் பார்க்க முடிகிறது. மழையை வாழ்த்தி வரவேற்கும் நாம், சில சந்தர்ப்பங்களில் நிகழும் விபத்துகளால், தூற்றவும் செய்கிறோம். மழையால் ஏற்பட்ட துயர சம்பவங்கள் ஆயிரம் இருந்தாலும், 2002, 2005 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, ஓகி புயல் போன்றவை குறிப்பிட்டுப் பேசப்பட்டு வருகிறது. இதுபோன்ற துயர சம்பவங்களுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும், மழை என்ற ஒரு அடிப்படை காரணம் மட்டுமே மக்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
நான் மழையைக் குறை கூறப் போகிறேனா? என்றால், இல்லை. மழையை உணர்ந்து விவசாயம் செய்வது, மழை பார்த்து வீட்டு விசேசங்கள் வைப்பது, மழையைப் பார்த்து பயணம் மேற்கொள்வது என்று ஒவ்வொரு விஷயத்திலும் மழையை முன்கூட்டியே கணித்து, வேலைகளைச் செய்து வந்தனர் முன்னோர்கள்.
ஆனால், இது தொழில்நுட்ப காலம். நீங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன் மூலமாகக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் மழை பொழிய வாய்ப்பு உள்ளதா? என்று பார்க்கக் கூடி வசதி உருவாக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வாளர்கள், மழை பொய்த அடுத்த கணம், இந்த பகுதியில் எத்தனை செ.மீ மழை பெய்துள்ளது என்ற விவரத்தை உடனுக்குடன் ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

மழையின் அளவை கண்டறிவது எப்படி?
ஒருமுறை, முன்னாள் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செய்தியாளர்கள் சந்திப்பில் மழையின் அளவை கண்டறிவது பற்றி விவரித்துள்ளார். அதில், ஒரு இடத்தில் உருளை வடிவத்திலான பாத்திரம் வைத்து, மழை நின்றபின், அதில் இருக்கும் நீரின் அளவை அளவுகோலால் அளந்தால், மழை பெய்த நேரத்தில் எவ்வளவு மி.மி அல்லது செ.மீ மழைப் பதிவாகியுள்ளது என்பதைக் கண்டறியலாம்.
அதேபோல் வெவ்வேறு பகுதிகளில், மழையை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த கருவிகள் கொண்டு அளவிட்டு, வானிலை ஆய்வு மையத்திற்குக் கூறுவர்.
மழை பெய்வதை முன்கூட்டியே கண்டறிய பல்வேறு தொழில்நுட்ப வசதிகள், வானிலை ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு காற்றின் திசை, வேகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு மழை பற்றிய தகவல்களை முன்னெச்சரிக்கின்றனர்.
இது டிஜிட்டல் உலகம் எனவே வெவ்வேறு விதத்தில் மழையைக் கணக்கிடுகின்றனர்... நம் முன்னோர்கள் எவ்வாறு மழையைக் கணக்கிட்டிருப்பர்?
எழுத்தாளர் நக்கீரன் 'நீர் எழுத்து' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “அப்போது, மழையை அறிவிக்க இருவர் இருந்தனர். இருவரில் தென்மேற்கு பருவ மழையை அறிவித்தவர் பெயர் காகம். வடகிழக்கு பருவ மழையை அறிவித்தவர் தூக்கணாங்குருவி.
காகம் சித்திரை மாதத்தில் வேப்ப மரத்தில் கூடுகட்டுவது வழக்கம். கூட்டை வெளிப்புறமாகக் கட்டுகிறதா? உட்புறமாகக் கட்டுகிறதா? என்பதைக் கவனிப்பர். வெளிப்புறமாகக் கட்டினால், அவ்வாண்டு மழைக் குறைவு. மழையால் குஞ்சுகளுக்கு ஆபத்தில்லை. உட்புறமாகக் கட்டினால், அவ்வாண்டு மழை நன்கு பெய்யும். குஞ்சுகளின் பாதுகாப்பு கருதி உட்புறமாகக் கட்டுகிறது. இதைக் கவனித்தே தென்மாவட்டங்களின் உழவர்கள் உழவுக்கு அணியமாவர்.
தூக்கணங்குருவி கூட்டின் அடிப்பகுதியின் வாய் வடதிரை அல்லது தென்திசை நோக்கித் திரும்பிருக்குமாம். அது வடக்கு நோக்கினால் அவ்வாண்டு மழை அதிகமில்லை. குஞ்சுகளுக்கு ஆபத்தில்லை என்று அத்திசையில் வாயிலை வைக்கும். தெற்கு நோக்கினால் மழை அதிகமுண்டு. சில சமயங்களில் கிணற்றிலுள்ள கூடுகளை வைத்துக் கணிப்பர். கிணற்றின் அடியில் கூடு கட்டினால், அவ்வாண்டு மழை குறைவு. உச்சியில் கட்டினால் மழை மிகுதி. வட மாவட்டங்களின் உழவர்கள் இதைக் கணித்தே வேளாண்மையைத் தீர்மானிப்பர். இதுபோல தைலான் குருவித் தரையைத் தொட்டால் மழை; உழவாரக் குருவிகள் குறுக்கும் நெடுக்கும் கூட்டமாகப் பறந்தால் மழை; கொக்கு மேடேறினால் மழை என்ற கணிப்பு உண்டு” என்று புத்தகத்தில் 94 மற்றும் 95-வது பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.

வியத்தகு விஷயம் என்பது, இயற்கையின் மூலம் கணிக்கும் முன்னோர்கள், சரியான நேரத்தில் விதைப்பது, அறுவடை செய்வது என்று பெரும்பாலும் சரியான கணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் தற்போதைய நாட்களில், பல நேரங்களில் அந்த கணிப்பு தவறுவதையும் பார்க்க முடிகிறது. அதேபோல் சரியான நேரத்தில் தற்போதைய தூக்கணங்குருவிகள் கணிக்க முடியாமலும் திணறுகின்றனர்.
தற்போதைய மழை?
தற்போது வடகிழக்கு பருவமழை என்றாலும், கேரளா போன்ற சில மாநிலங்களில் அதி கனமழை பெய்ய முக்கிய காரணம் காலநிலை மாற்றம் என்று பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டில் அதி தீவிர தண்ணீர் பஞ்சமும், அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்கத்து மாநிலமான கேரளாவில் அதி தீவிர மழையையும் நாம் பார்க்க முடிந்தது.
Council for Energy, Environment and Water என்ற அமைப்பு "Mapping India's Climate Vulnerability' என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்துள்ளது. அதில் இந்தியாவில் அதிகம் பாதிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 12வது இடத்தை பிடித்துள்ளது. எனவே மழை வெள்ளம் போன்றவை கணக்கிட முடியாத அளவு அதிகமாகவோ, கணக்கிட முடியாத அளவு குறைவாகவோ இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை மழை என்பது, 2 மாதங்களில் பெய்ய வேண்டிய அளவை வெறும் 20 நாட்களில் பெய்து தீர்க்கவும் வாய்ப்புள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு இருந்தால், மழையைச் சரிவரக் கணிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதேபோல், மழையால் ஏற்படும் பாதிப்பையும் யாராலும் கணிக்க முடியாமல் போகலாம்.
