மதுவிற்கான தேவை என்பது, தமிழ்நாட்டில் எப்போதும் குறைந்தது இல்லை. ஊரடங்கு வேளையில் கூட இந்திய மதுபான ஆலைகள் கூட்டமைப்பின் தலைவர் வினோத் கிரி, மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும்படி மாநில அரசுகளிடம் கோரியிருந்தார். அதன்பின்னரே மதுக் கடைகள் திறக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாட்டில் மது விற்பனை 5 ஆண்டுகள் நஷ்டத்தைச் சந்தித்தாக, RTI தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், மது விற்பனையாலேயே தமிழ்நாடு அரசின் நிதிநிலை சமாளிக்கப்பட்டு வருவதாக, பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மது விற்பனையே நஷ்டத்தைச் சந்தித்துள்ளது முரண்பட்ட தகவல்தான். மது உற்பத்தி? தமிழ்நாட்டின் மதுவுக்கு எதிரான நடவடிக்கை? விரிவான தகவல்கள்.
கொரோனா ஊரடங்கு நேரத்தை நாம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். ஊரடங்கு போடப்பட்டதும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், மதுக்கடைகள் மூடப்பட்டது. மே மாதத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
அந்நாட்களில் மது விற்பனைக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டது. எனவே, காலை 4 மணி முதலே பலரும் வரிசையில் காத்திருக்கத் துவங்கிவிட்டனர். இது பற்றிய கள விவரம் சேகரிக்கச் சென்ற ஏசியாவில் செய்திக்குழுவிடம் பேசிய சிலர், “வேலையில்லை, பணம் இல்லை, நீண்ட நாட்களுக்குப் பின்னர் தற்போதுதான் மது வாங்க வந்துள்ளோம்” என்று தெரிவித்தனர். அதிலும் ஒருவரிடம் அந்நாட்களில் அரசால் கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாயைப் பற்றிக் கேட்டபோது, “எங்க கொடுக்கிறார்கள். அதான், டாஸ்மாக்குல வாங்கிக்கிறாங்களே” என்று கையில் குடையுடன், மது வாங்கும் வரிசையில் காத்திருந்தபடி கூறினார்.
இப்படி மதுவிற்கான தேவை என்பது, தமிழ்நாட்டில் எப்போதும் குறைந்தது இல்லை. ஊரடங்கு வேளையில் கூட இந்திய மதுபான ஆலைகள் கூட்டமைப்பின் தலைவர் வினோத் கிரி, மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும்படி மாநில அரசுகளிடம் கோரியிருந்தார். அதன்பின்னரே மதுக் கடைகள் திறக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதுவின் மூலம் வருவாய் வருகிறது. மாநிலங்களுக்கு 20 முதல் 40 சதவீதம் வருவாய் மதுவிலிருந்தே கிடைக்கிறது.
இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் 5-ஆண்டுகள் மது விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, காசிமாயன் என்ற நபர் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மது விற்பனை தொடர்பாக RTI தாக்கல் செய்துள்ளார். அதன் மூலம் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு மது மூலம் அதிகபட்சமாக 232.73 கோடி லாபம் கிடைத்துள்ளது.
2011-ம் ஆண்டு 3.56 கோடி நஷ்டமும், 2012-ம் ஆண்டு 1.3.64 கோடி நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2013-ம் ஆண்டு 64.44 கோடி நஷ்டமும், 2019-ம் ஆண்டு 71.93 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை கலால் துறைக்குக் கீழ் இயங்கி வருகிறது. இந்த துறை மூலம், மது கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்கின்றனர். அரசின் தகவல் அடிப்படையில், 2008-09 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மதிப்பு 10,601, பத்து ஆண்டுகள் கழித்து 2018-19-ம் ஆண்டில் 31157.83 கோடியாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே கொரோனா ஊரடங்கின்போது நீண்ட நாட்கள் கடைகள் திறக்கப்படாததால், வருவாய் குறைந்தது. அதற்கு முக்கிய காரணம், பல இடங்களில், மது பாட்டில்கள் கள்ளச்சந்தையிலும் விற்பனை செய்து வந்தனர்.
மதுவிற்கு எதிர்ப்பு
மது விற்பதற்குப் பல கட்சிகள் சார்பில் எதிர்ப்புகள் அடிக்கடி தெரிவிக்கப்படுவதுண்டு. ஆனால் இந்த எதிர்ப்பினால், பெரிய அளவில் பலன் இல்லை என்றே கூறவேண்டும். திமுக பலமுறை மதுக்கடைகளை மூட போராடினாலும், மதுக்கடைகளை அந்த கட்சியைச் சேர்ந்தவர்களே நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துகொண்டே இருக்கிறது. அதேபோல் பாமக உள்ளிட்ட பிற கட்சிகளும், மதுக்கடைகளை மூட பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர்.
2016-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் அருகே டாஸ்மாக் கடைகள் நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அப்போது செயல்பட்டு வந்த 6200 மதுக்கடைகளில், 3000 கடைகளை மூடப்பட்டது. உடனே மாநில நெடுஞ்சாலைகள் மாவட்ட நெடுஞ்சாலைகளாகவும், மாவட்ட நெடுஞ்சாலைகள் பஞ்சாயத்துச் சாலைகளாகவும் மாற்றித் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கொரோனா காலத்தில் ஊரடங்கு போடப்பட்டது தமிழ்நாட்டில் வருவாய் இழப்பு அதிகரித்தது. எனவே டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா தொற்று பரவலைக் குறிப்பிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. உடனே மேல்முறையீடு செய்த நீதிமன்றம் மதுக்கடைகளை மூடினால் கடுமையான வருவாய் பற்றாக்குறையும் நிதி இழப்பும் ஏற்படும் என்ற காரணங்களை அடுக்கினர்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும், டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஆளும் அரசு எப்போதும் உடந்தையாக இருந்ததில்லை.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் வருவாயிலேயே இயங்குகிறது என்ற வாதம் பலரும் முன்வைக்கும் நிலையில், தற்போதைய தகவல்கள் அதை உடைத்துள்ளன. டாஸ்மாக் வியாபாரமே இங்கு நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தால் தமிழ்நாட்டின் செலவுகளுக்கு அரசு என்ன செய்தது என்பதுபோன்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது. அதேபோல் தீபாவளி, புத்தாண்டு போன்ற நாட்களில் மதுவை விட அதிகமாக விற்கப்பட்ட பொருள் என்பது எதுவும் இருக்காது என்றே கூறவேண்டும். மதுவின் நிலையைத்தான் அரசு தரப்பில் வெளியிடவும் படுகிறது. எனினும் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
