'அதிகரிக்கும் காற்றுமாசு மழையைப் பாதிக்கும்' | தமிழ்நாட்டின் நிலை?
காற்று மாசு அதிகரிப்பால், மழையின் அளவு குறையலாம். எச்சரிக்கும் Climate trends-ன் ஆய்வு
காற்று மாசு, நீர் மாசு இயற்கை மாசு என்று எந்த பகுதியைச் சுற்றிப் பார்த்தாலும், மாசுபாட்டுக்குப் பஞ்சம் இல்லை. பல ஆய்வுகள் மூலம் எச்சரிக்கப்பட்டாலும், அதை நிவர்த்தி செய்யவோ, தீர்வு காணவோ முடியாத நிலையே நீடிக்கிறது.
தமிழ்நாட்டிலும், இதே நிலைதான். தற்போதைய ஓர் ஆய்வின் மூலம் வெளியான செய்தியைப் பார்க்கையில், தமிழ்நாட்டில் பெய்துவரும் மழை பாதிப்பை ஏற்படுத்துமா?... நீண்ட காலத்திற்கு மழை இல்லாமல் போகுமா? என்று எல்லாம் சிந்திக்கத் தூண்டுகிறது.
ஆய்வில் கூறப்படுவது?
இந்தியா வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் குளிர் காலம், வெயில் காலம் என்று இரண்டிலும் காற்று மாசு அதிகரித்தே காணப்படுகிறது. தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் குறைந்தபட்ச அளவான PM2.5 (2.3 மைக்ரோமீட்டருக்கு குறைவான விட்டம் கொண்ட துகள்களைக் குறிக்கிறது) தரவின் அடிப்படையில், 40 ug/m3 இருக்க வேண்டும். ஆனால் டெல்லி பெருநகரில் PM 2.5க்கு கணக்கிடுகையில், மார்ச் முதல் மே மாதத்தில் 95.6 ug/m3 இருக்கும். அதுவே கொரோனா கால ஊரடங்கின் போது, 69 ug/m3 என்ற அளவில் குறைந்தது. ஊரடங்கிற்குப் பின், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.
லக்னோவில் 2019-ம் ஆண்டில் PM 2.5 என்பது, 103 ug/m3 என்ற அளவிலும், கொரோனா காலகட்டத்தில் 92 ug/m3 அளவிலும் குறைந்தது. தொடர்ந்து 2021 ஊரடங்கில் 79.6ug/m3ஆகக் குறைந்திருந்தது.
காற்று மாசு என்பது ஆரோக்கியம் மற்றும் பொருளாதார தாக்கம் ஆகியவற்றைப் பாதித்த நிலையில், தற்போது இந்தியாவில் பருவ மழையையும் பாதிக்கிறது என்று Climate trends ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மாசு பருவமழையையும் அதிக அளவில் பாதிப்படையச் செய்கிறது. காற்று மாசுபாடு என்பது மானுடவியல் மூலம் வளிமண்டலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட துகள்கள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஏதேனும் ஒரு செயல்பாட்டால் இயற்கைகளில் பரப்பப்படும் மாசுகளின் ஆதாரம். காற்று வடிவத்தில் ஏற்படும் மாற்றம், வெப்ப மயமாதல் போன்ற காரணங்களால் தென்மேற்கு பருவமழை, கோடைக்கால மழை என்று நிலத்திற்கும் கடலுக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபடுகிறது.
மனிதனால் உருவாக்கப்பட்ட பலவற்றால், வெப்பமயமாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
“காற்று மாசுபாடு, தென்மேற்கு பருவமழையை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. சில இடங்களில் 50 சதவீதம் வரை மழை குறைவாக இருக்கும். மழையின் அளவை பாதிப்படையச் செய்வது மட்டுமல்லாமல் காலத்தையும் மாற்றி அமைக்கிறது. அதன்படி, சில இடங்களில் கால தாமதமாகப் பருவமழை துவங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம்” என்று இந்திய வளிமண்டல தொழில்நுட்ப பிரிவு ஐஐடி பேராசிரியர் டாக்டர் திலிப் கங்குலி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து IPCC வெளியிட்ட 1951-2019 இடையில் காற்று மாசு அதிகரித்திருப்பதைக் காட்டியது.
தமிழ்நாட்டின் நிலை?
டெல்லி, லக்னோ போன்ற இடங்கள் மட்டும் இதில் பெருமளவில் குறிப்பிட்டுப் பதிவு செய்திருந்தாலும், தமிழ்நாட்டின் நிலையை பற்றி நாம் அனைவருக்கும் கேள்வி எழும்.
2019-ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையின்படி தமிழ்நாட்டில் சென்னையில் சல்பர் டை ஆக்சைட் -8, நைட்ரஜன் டை ஆக்சைடு-18, PM10 -73 என்ற வீதத்தில் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய பகுதிகளிலும் காற்று மாசின் தரம் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் சற்று ஏற்ற இறக்கமாகப் பதிவிட்டுள்ளதைப் பார்க்கலாம்.

காற்று தரநிலையில் சராசரியாக சல்பர் டை ஆக்சைட் 50µg/m3, NO2 = 40 µg/m3, PM10 = 60 µg/m3 என்ற வீதத்தில் உள்ளது.
இதில் சல்பர் டை ஆக்சைட் மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைட்டு அளவு குறைவாகவும், PM10 அளவு அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் PM 2.5 சராசரி அளவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

CAAQM (Central Control Room for Air Quality Management) படியும், குறைவான அளவு தமிழ்நாட்டில் காற்றுமாசு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்த அளவில், தமிழ்நாட்டில் ஏற்படும் காற்று மாசு அளவு குறைவாக உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் காட்டுகின்றன. ஆனால், அளவு சரியானதாக இருக்கிறதா என்பது மிகவும் கேள்விக்குறியான ஒன்றுதான்.
இதற்கு முன் கொடுக்கப்பட்ட பல தரவுகள் படியும், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மாசின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பதைப் பார்த்திருக்க முடியும்.
