மீண்டும் பலிவாங்கிய தேங்காப்பட்டணம் துறைமுகம்! 'அரசிடம் கொண்டு சேர்க்காத அதிகாரிகள்' தீர்வுதான் என்ன?
கடந்த ஆண்டு நான் பதிவு செய்திருந்த தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் தற்போது மீண்டும் ஒரு கோர விபத்து அரங்கேறி ஒருவர் உயிரிழந்துள்ளார். சீரமைக்க 77 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து தேங்காப்பட்டணம் விஷயத்தில் சரிவரச் செயல்படவில்லை என்ற கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கோர விபத்து நடக்கும் பகுதியை புதிய அரசிற்கு நினைவூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி, தொடர்ந்து விபத்துகள் சந்திக்கும் தேங்காப்பட்டணம் துறைமுகம் பற்றிய செய்தியைக் களத்திலிருந்து பதிவு செய்திருந்தேன். அதன்பின் அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தாலும், துறைமுகத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளதா...?
தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மாற்றம் செய்வது அவ்வளவு எளிதானது இல்லைதான். பலிவாங்கப்பட்ட உயிர்களைவிட அது கடினமானதும் அல்ல.
17-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த சர்ஜுன்(40) என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் இனையம் புத்தன்துறையை சேர்ந்த பிரிட்டன் ராஜா(32) மற்றும் மரியதாசன் (50), தேங்காப்பட்டணத்தை சேர்ந்த வினித்(22), முள்ளூர்துறையை சேர்ந்த சைஜூ (29), உள்பட மொத்தம் 7 பேர் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். துறைமுகத்தின் முகத்துவாரம் பகுதியை கடக்கும் போது, ராட்சத அலை ஏற்பட்டு அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதைப் பார்த்த மற்ற மீனவர்கள், 6 பேரைப் பத்திரமாக மீட்ட நிலையில், பிரிட்டன் ராஜாவை மட்டும் மயங்கிய நிலையில் மீட்டுள்ளனர். அவர் சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த ஒரு சம்பவம் அல்ல. நான் நேரடியாகச் சென்றபோது, அந்த பகுதியில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்த மீனவர்கள் புகைப்படங்களை காட்டினர். துறைமுகம் கட்டுவதற்குப் போராட்டம், கட்டி முடித்தபின் உயிருக்குப் போராட்டம், என்ற நிலைதான் நீடிக்கிறது.
2019-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட தேங்காப்பட்டணம் துறைமுகத்தை அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்துள்ளார். திறந்து வைக்கப்பட்ட நாளிலிருந்து அந்த பகுதியில் விபத்துகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

2020-ம் ஆண்டில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு முன்னதாக இரண்டு பேரும், தற்போது ஒருவரும் என்று மொத்தமாக 8 பேர் உயிரிழந்துவிட்டனர். 100க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்த இந்த பகுதியால் பல மீனவர்கள் படகுகளை இழந்துள்ளனர்.
ஏன் விபத்து நடக்கிறது?
தேங்காப்பட்டணம் துறைமுகம், தாமிரபரணி ஆறு கடலில் சேரும் பொழிமுகத்தில் அமைந்துள்ளது. துறைமுகத்தின் முகத்துவாரம் கடலுக்குள் இருக்க வேண்டும். ஆனால் அது கடற்கரையுடன் நின்றுவிடுகிறது. அதாவது ஒரு துறைமுகத்தின் முகத்துவாரம் கடலுக்குள் சென்று முடிவடைந்தால் தான், அங்கு அலைகள் எழும்பாது. ஆனால் தேங்காப்பட்டணம் துறைமுகத்தைப் பொறுத்தவரையில், முகத்துவாரம் கரையுடன் முடிவடைந்துவிடுகிறது. எனவே அலைகள் வேகமாக வீசும்போது அந்த வழியாகச் செல்லும் படகுகள் தூக்கி வீசப்படுகிறது.
அதேபோல் முகத்துவாரம் குறுகலான பாதையாகவே இருக்கிறது. மீனவர்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் ராபின்சன் குறிப்பிடுகையில், “துறைமுகத்தின் முகத்துவாரம் கிழக்கு-மேற்காகவோ அல்லது மேற்கு-கிழக்காகவோ, சற்று அகலமாகவும் கடலின் உட்பகுதிக்குள் சென்றடைவது போன்றும் இருக்க வேண்டும். இதில் நீளமாகக் கட்டியிருக்கும் பகுதியை உடைப்பது சிரமம், ஆனால் இந்த குறுகலான கட்டுமானத்தை நீளப்படுத்துவதுடன் அகலப்படுத்தவும் செய்யலாம். அதைத் தான் தொடர் கோரிக்கையாக முன் வைத்து வருகிறோம்” என்றார்.
ஆரோக்கியதாஸ் என்ற முதியவர், “இங்குப் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் கற்கள் தான் இறப்பிற்கு முக்கிய காரணம். அலைகள் வேகமாக வீசும்போது, படகுடன் மீனவர்கள் தூக்கி வீசப்படுகின்றனர். அவர்கள் இந்த கற்களுக்கு இடையே சென்று சிக்கிக்கொண்டு வெளியில் வர இயலாமல் உயிரிழக்கின்றனர். அவர்களது வலை மற்றும் படகு உடைந்த நிலையில் கண்டறியப்படுகிறது” என்றார்.

துறைமுகத்தின் வடிவமைப்பைக் கூகுள் பக்கத்தில் எடுக்கப்பட்ட படம் மற்றும் மற்றொரு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படத்தைப் பதிவிட்டுள்ளேன். இந்த படத்தில் கடல் அமைதியாக இருப்பது போன்று இருக்கிறது. ஆனால், பெரும்பாலான நேரத்தில் கற்களுக்குமேல் கடல் அலை தூக்கி வீசப்படுவதைப் பார்க்க முடிகிறது.

அதேபோல் கடலும், ஆறும் சேரும் இடம் மற்றும், அலை அடிக்கும் பகுதி என்பதால் துறைமுகத்திற்குள் மணல் அதிக அளவில் சேருகிறது. இந்த மணல்களும் விபத்திற்குக் காரணமாக அமைகின்றன. படகுகள் பல நேரங்களில் மணலில் தட்டி அப்படியே நின்றுவிடுகிறது. நீண்ட கோரிக்கைக்குப் பின் மணலை அகற்ற 1.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன் பின் அந்த கருவி துறை முகத்திற்கு கொண்டுவர 3 மாதக் காலங்கள் ஆனது, என்றார் ராபின்சன்.
அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படாமல் இருந்ததாகத் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் ஜூலை 1-ம் தேதி 77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு மற்றும் சமீபத்திய விபத்து குறித்து ராபின்சன் அவர்களிடம் கேட்டபோது, “77 கோடி சீரமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அடித்துவரப்படும் மணலை அகற்ற எந்த திட்டமும் இல்லை. துறைமுகத்தை முழுவதும் மாற்றி அமைத்தால்தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

தினமும் விபத்துகள் நடக்கிறது. மீன்வளத்துறையிலிருந்து எதுவும் செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் அரசிடம் இந்த தகவலை கொண்டு சேர்ப்பதில்லை. எதற்கு எடுத்தாலும் காவல்துறையினர் மட்டும் அனுப்பப்படுகின்றனர். அந்த அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வருவதில்லை. நேற்றைய விபத்திற்குப் பின்னரும் கூட துறைசார் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்தில் வந்து பார்க்கவில்லை” என்றார்.
