மழைக்குப்பின் சேதமடையும் சாலைகள்! எப்போது சீரமைக்கப்படும்?
சென்னையில் தொடங்கி, கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பழுதடைந்த சாலைகளைப் பார்க்க முடியும். சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது
சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது யூனுஸ், இரு சக்கர வாகனத்தில் சின்னமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, சாலையிலிருந்த பள்ளத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த பேருந்து அவர் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் சாலை தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது. ஒரு மழைக்கே தாக்குப்பிடிக்காத இந்த சாலை மீண்டும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
ஒவ்வொரு மழைக் காலம் முடிந்ததும், அப்பகுதியில் உள்ள சாலைகள் உருமாறியிருப்பதை நாம் பார்க்க முடியும். “ஒரு முறை சாலை சேதமடைந்து, அது சரிசெய்ய வேண்டும் என்றால், அடுத்த தேர்தல் வரவேண்டும்” என்று கூறுகிறார் ஒரு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்.
நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் சாலைகள் முறையான பராமரிப்பற்று குண்டும் குழியுமாகக் காணப்படுவது வழக்கமாகிவிட்டது. அதேபோல் சாலையில் அமைக்கப்படும் கழிவு நீர் வடிகால் அமைப்பின் மூடும் பகுதி, சாலையிலிருந்து சற்று தூக்கலாக அமைத்துவிடுகின்றனர். எனவே அது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக முடிகிறது.
சென்னையில் தொடங்கி, கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், இந்த பிரச்சனையைப் பார்க்க முடியும். சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
கடந்த ஜூலை மாதத்தில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கொடுத்த பட்டியலில், 2017-ம் ஆண்டில் இந்தியாவில் 4,64,910 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அடுத்த ஆண்டான 2018-ம் ஆண்டு 4,67,044 சாலை விபத்துக்கள் பதிவாகி இருக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். 2019-ம் ஆண்டில் நாட்டில் 4,49,002 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய இரண்டு ஆண்டுகளை விடக் குறைந்து நமக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

2018-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 1,51,417 பேர் உயிரிழந்துள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் 1,51,113 பேர் உயிரிழந்துள்ளனர். போக்கு வரத்து விதி மீறலால் 71.1 சதவீதம் சாலை விபத்துகள் நடைபெறுவதாகவும், அவற்றில் 67.7 விபத்துகளில் மரணம் சம்பவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி எல்லாம் சாலைகள் பழுதடைகின்றன?
மக்கள் விதிகளை மீறிச் செயல்படுவதாக அரசு குறிப்பிட்டாலும், சாலைகளில் இருக்கும் முறையற்ற பராமரிப்பு மக்களை விதி மீறச்செய்வதாகவும், சாலைகளில் குழிகள் ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது. மறுபுறம் சாலையை ஆக்கிரமித்து, வாகனங்கள் நிறுத்துவது, மழைநீர் வடிகால்களை மூடுவது போன்றவை மக்கள் செய்யும் தவறாக உள்ளது.
சாலைகள் போடும் பணியின் போது, அவற்றை உடைத்துவிட்டு ஒன்று இரண்டு நாட்கள் அப்படியே விட்டுவிடுவர். இது அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போருக்கு ஆபத்தாக முடிகிறது. இத்தகைய செயல்பாடுகள் சென்னையின் முக்கிய சாலையிலும் அரங்கேறுகிறது. இரவு நேரத்தில் மட்டும் அங்குச் சாலைப் பணிகள் நடைபெறுவதால், ஒருநாள் சாலையை உடைத்துவிட்டுச் சென்றுவிடுவர். அதன்பின் சில நாட்கள் கழித்து வந்தே சாலையைச் சரி செய்வர். அப்படி இருக்கையில் வாகனத்தில் வருவோர் தடுக்கி விழும் அபாயம் அதிகரிக்கிறது.
மக்கள் கருத்து?
மழைக்குப் பின் சென்னை வேளச்சேரி பகுதியில் செய்தியாளர் வித்தியா மக்களிடம் சாலையில் இருக்கும் பிரச்சனைகள் பற்றிக் கேட்கும் முன், விதிமுறைகள் மீறி பலரும் வலப்புறமாக பயணித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், “ரொம்ப கஷ்டம். நால் நாளா முழுவதும் தண்ணீயாகவே இருக்கிறது. ரோடே சரியில்லை” என்று குறிப்பிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பயணிகள், “குண்டும் குழியுமாக இருக்கிறது. பயணிக்க ஏதுவாக இல்லை” என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், “வருடக் கணக்காகப் பாலத்தைக் கட்டி வருகிறார்கள். 10 வருடமாகச் சாலை இப்படியே உள்ளது. தேவையில்லாத பாலம் இது” என்று தெரிவிக்கின்றனர்.
மக்கள் வைக்கும் முக்கிய பிரச்சனை என்பது, பழுதடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்கள் எளிதில் சேதமடைகிறது, என்பதாக இருக்கிறது.
சாலையைச் சீரமைக்க அரசு, மக்களுடன் இணைந்து செயல்பட்டாலே சரியான தீர்வு கிடைக்கும். பொதுவாக காண்ராக்டருக்கு, கொடுத்துவிட்டு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர். அவர்கள், முறையாகப் பணி செய்கிறார்களா? இல்லையா என்பதைப் பார்ப்பதில்லை. சாலை போட்டு முடித்ததும், அது சேதமடையத் துவங்கிவிடும். அல்லது ஒரு மழை பெய்ததும், சாலை காணாமல் போய்விடும்.
