மிசோரம் செல்வதை தவிர்க்குமாறு அஸ்ஸாம் மக்களுக்கு அறிவுரை!
அஸ்ஸாமை சேர்ந்த மக்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நம் மாநில மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி மிசோரத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் | மிசோரம் செல்வதை தவிர்க்குமாறு அஸ்ஸாம் மக்களுக்கு அறிவுரை!
அஸ்ஸாம் மற்றும் மிசோரம் எல்லையில் கடந்த 2 மாதங்களாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழு, பணியிலிருந்த அஸ்ஸாம் காவல்துறையினர் மீது கம்பு, கற்களைக் கொண்டு தாக்கினர்..பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அஸ்ஸாம் மாநில காவல்துறையினர் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இரு மாநில எல்லைப் பகுதியிலும், சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநில உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அஸ்ஸாமை சேர்ந்த மக்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நம் மாநில மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி மிசோரத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தொழில், வேலை காரணமாக, மிசோரத்தில் வசித்து வரும், அஸ்ஸாம் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
