'தூண்டில் வளைவு அமைப்போம், என்று பூச்சாண்டி வித்தை...' அதானி துறைமுக பிரச்சனை நினைவூட்டும் முயற்சி!
'மழை நேரத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடும். எண்ணூரிலிருந்து, சூலூர்பேட்டை வரை கடலை நம்பி ஒரு லட்சம் பேர் உள்ளனர். துறைமுகம் அமைக்கப்பட்டுவிட்டால், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவர்' அதானி துறைமுகம் பற்றி பழவேற்காடு மக்கள் குறிப்பிடுகின்றனர்.
சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம்..., கடந்த மார்ச் மாதத்திற்குப் பின் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அப்போது “'ஒரு சிறிய தீவில் மூன்று துறைமுகங்கள்.' அதானியின் முகம் கோணாமல் பார்க்கிறதா அரசு” என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டது. தற்போது மக்களின் நினைவூட்டும் போராட்டத்தை, தொடர்ந்து நாமும் இந்த பிரச்சனையைப் பற்றி நினைவூட்ட வேண்டியுள்ளது.
2018-ல் காட்டுப்பள்ளியில் அமைந்திருந்த துறைமுகத்தை அதானி போர்ட் நிர்வாகம் வாங்கியது. இந்த துறைமுகத்தை 330 ஏக்கரிலிருந்து 6110 ஏக்கராக விரிவுபடுத்த அதானி நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான வழிகளை விரைவுபடுத்தியது. விரிவாக்கத் திட்டத்தில் கடல் உட்பகுதி, உப்பளங்கள், சதுப்புநிலங்கள் என்று அடிப்படை இயற்கை அமைப்பு, மற்றும் கடல் விவசாயத்தைப் பாதிக்கும் வகையில் வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் அரிப்பு, வெள்ள அபாயம், நிலத்தடி நீர் பாதிப்பு என்று பல காரணங்களைச் சுட்டிக்காட்டி #StopAdani, #SavePulicat ஆகிய ஹேஷ்டேக்குகளில் பலர் எதிர்ப்புகளைப் பதிவிட்டிருந்தனர்.
துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும்?... துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால், கடல் அலைகளால் கரையில் சேர்க்கப்படும் மண்ணின் அளவு தெற்கு பகுதியில் அதிகமாகும். குறுக்காகக் கட்டப்படும் கட்டுமானங்களால், வடக்கு பகுதியில் மண்ண அரிப்பு ஏற்படும். இதை முந்தைய சென்னை துறைமுகத்தின் வடிவமைப்பில் பார்க்கலாம்.
அதேபோல் மணல்மேடை சேதப்படுத்தி கட்டிடம் கட்டுவதால், கடல்நீர் நிலத்தடி நீருடன் கலந்து உப்பு நீராக மாறிவிடும். மேலும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அதானி துறைமுகத்திலிருந்து 2.1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. துறைமுக பணிகள் முடித்தபின்,பறவைகள் சரணாலயம் பெருமளவில் பாதிப்படையும் என்று இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவற்றைத் தவிர, சென்னை எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனை என்பது மழைக் காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர். அதாவது கடந்த காலங்களில் நாம் பலமுறை பார்த்த வெள்ளப் பெருக்கும். சென்னையில் ஆறுவழியாக வரும் தண்ணீர், மூன்று முகத்துவாரம் வழியாக மட்டுமே கடலில் கலக்கின்றன. தெற்கு பகுதியில் எண்ணூர் முகத்துவாரம், மையப்பகுதியில் கருங்காலி முகத்துவாரம், வடக்கு பகுதியில் பழவேற்காடு முகத்துவாரம், ஆகிய பகுதிகளில் வழியாக மட்டுமே தண்ணீர் கடலில் சேர்கிறது. அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால், கருங்காலி முகத்துவாரத்தை முற்றிலும் மூட திட்டமிட்டுள்ளது. அவ்வாறு என்றால், இரண்டு முகத்துவாரங்கள் வழியாக மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படும். பழவேற்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் அதிகரித்தால், அந்த நீர் எண்ணூர் முகத்துவாரத்தை நோக்கி நகரும், இந்த இரண்டு முகத்துவாரம் வழியாக வெளியேற முடியாத நீர் நீண்ட நாட்கள் தேங்கி நிற்கும்.
இதைத் தவிர 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த, மீனவர்கள் கடலை நம்பியே உள்ளனர். துறைமுகம் வந்தால், மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காரணம், துறைமுக விரிவாக்கம் செய்கையில் கற்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு கடலில் நிரப்பப்படும். அவ்வாறு நிரப்பும்பட்சத்தில், கடலின் மீன்களின் வளம் குறையும் என்று மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி கூறுகையில், “அதானி துறைமுக நிர்வாகம் தரப்பில், யாருக்கும் எந்த பாதிப்பு வராது. தூண்டில் வளைவு அமைப்போம், என்று பூச்சாண்டி வித்தை காண்பிப்பது போன்று சொல்கிறார்கள். ஏற்கனவே காமராஜர் துறைமுகத்தால் அதிகம் அனுபவப்பட்டுள்ளோம். அங்கிருந்து வரும் கழிவுகளால் மீன்கள் செத்துப் போவது, மீன் உற்பத்தியாகாமல் போவது போன்ற பிரச்சனை ஏற்பட்டது. இவர்கள், உங்கள் நன்மைக்காகவே இதைச் செய்கிறோம் என்கின்றனர். ஆந்திராவிலும், இதுபோன்று ஏமாற்றிவிட்டு, அங்குள்ள மக்கள் சொந்த இடத்திற்குச் செல்லவே பாஸ் வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்தினர், அதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்றே நாங்கள் போராடுகிறோம்” என்றார்.
அதானி துறைமுகம் பற்றித் தேர்தலில் கூட பல கட்சிகள் தரப்பில், வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. திமுக தரப்பில், அதானி துறைமுகத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் நாம் தமிழர் கட்சி தரப்பிலும் அதே வாக்குறுதியை அளித்திருந்தனர். எனவே அவற்றை நினைவூட்டும் விதமாக மீன் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது பற்றி மகாலட்சுமி குறிப்பிடுகையில், “நேற்றைய (09.09.2021) தினம், இறால் செய்து எம்.பி கனிமொழி அவர்களைப் பார்த்துக் கொடுத்தோம். அவர்கள் சாப்பிட்டு நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். அக்டோபர் 16 உணவு திருவிழா நடத்த உள்ளோம். அதற்கு முதலமைச்சரையும், கனிமொழி மேம்மையும் அழைக்க உள்ளோம். இவை மூலம், அதானி துறைமுக பிரச்சனையை நினைவூட்டுகிறோம்” என்றார்.
மேலும், “காட்டுப்பள்ளி துறைமுகத்தால் அதிகமான பிரச்சனைகள் இருந்தது. கொரோனா நேரத்தில், போராட்டம் எதுவும் செய்ய முடியாததால், நிறுத்தி வைத்திருந்தோம். மீண்டும் அவற்றை நினைவூட்ட நினைக்கிறோம்.
கடல் பரப்பை 2500 ஏக்கர் அளவு அதானி நிர்வாகம் வாங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். துறை முகத்தைச் சுற்றி சுவர் எழுப்பியுள்ளனர். துறைமுகத்தைச் சுற்றிலும், சிறுசிறு நிறுவனங்கள் வந்துள்ளது. காபி தூள் நிறுவனம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. அவை யாருடையது என்றே தெரியாத அளவில், அதானி நிர்வாகம் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இது மக்கள் கவனத்திற்கு வரவில்லை.
காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் செய்தால், நாங்கள் வேலைக்கே செல்ல முடியாது. கடலில் கல்லை கொட்டி விடுவார்கள். கடலில், சேறு மிகுந்த பகுதியில் தான் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும், அந்த பகுதி முழுக்க கல்லைக் கொண்டு கொட்டி மூடிவிடுவார்கள்.
இதைத் தவிரத் துறைமுகம் வந்தால், அந்த பகுதியில் மழை நேரத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடும். எண்ணூரிலிருந்து, சூலூர்பேட்டை வரை கடலை நம்பி ஒரு லட்சம் பேர் உள்ளனர். துறைமுகம் அமைக்கப்பட்டுவிட்டால், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவர். மணலை கொட்டி முகத்துவாரத்தை மூடக்கினால், ஆற்றில் தொழில் செய்யும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர்” என்றார்.
அதானி குழுமம்!
அதானி துறைமுகத்தின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், மத்திய அரசின் ஆதரவோடு அதானி துறைமுகம் எந்தவித அச்சமும் இல்லாமல் பல இடங்களைக் கையகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. உண்மையில் அதானியின் பல திட்டங்களில் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் மக்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
#stopadani என்ற ஹேஷ்டேக்கில் நான் தேடிய போது, stopadanimovement என்ற பக்கம் வந்தது. அந்த பக்கத்தில், அதானியின் பல திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம். கோவா மாநிலம், மொல்லம் என்ற பகுதியில் அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி மாதம் 30-ம் தேதி SAVE MOLLEM என்ற பதிவு போடப்பட்டுள்ளது. மொல்லம் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் உள்ளது. அந்த பகுதியில் அதானியின் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், சரணாலயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
அதேபோல் மியான்மரில் இராணுவம் ஆட்சி கைபற்றிய போதிலும், அந்நாட்டில் அதானி குழுமம் தொடர்ந்து தனது வணிகத்தை நிறுத்தவில்லை. அத்துடன், அங்கும் துறைமுகம் அமைத்துள்ளது. இந்த சம்பவம் பற்றி மார்ச் 30-ம் தேதி எதிர்ப்பு தெரிவித்துப் பதிவு போடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கிரேட் கோரல் ரீஃப் எனப்படும், பவளப்பாறைகள் அமைந்துள்ள இடத்தில், நிலக்கரி சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் கடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அவர்கள், “பவளப்பாறைகள் நிலக்கரி கிடையாது” என்ற வாசகத்துடன் இந்த போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர். இதுபோன்று அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிரான போராட்டம் என்பது மிகப்பெரியதாக உள்ளது.
மேலும், அதானிக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி உள்ளதாகவும், அவருக்குக் கண்டனம் தெரிவித்தும் பதிவுகள் போடப்பட்டுள்ளது. “இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் பற்றி விரிவாகப் பேசுகிறார். அதே சமயம், அதானிக்கு நிலக்கரி எடுக்க ஸ்டேட் வங்கி மூலம் 5000 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறது. மக்கள் பணத்தை, மக்களுக்குப் பயன்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள், மாறாகப் பணக்காரரான, அதானிக்கு கொடுக்க மக்கள் விரும்பவில்லை” என்று பதிவிடப்பட்டுள்ளது.
