மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு - ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!
பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பீகாரில் 3 மாவட்டங்களில் மின்னல் தாக்கி மொத்தமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் 9 பேரும், ஜமூய் மாவட்டத்தில் 2 பேரும், போஜ்பூரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
சரன் மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்தது போக 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சப்ரா சதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஹரி கிஷோர் ராய் கூறியுள்ளார்.
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் தன்னுடைய இரங்கலை தெரிவித்து நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
மேலும் காயமடைந்தவர்கள் அனைவரும் சீக்கிரமாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தத காரணத்தால் மக்கள் நடமாட்டம் இல்லை என்றும் அதனால் மின்னல் தாக்கிய போது பாதிப்பு குறைவாக இருந்ததாகவும் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
இதேபோல் வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும் எச்சரிக்கைகளை முறையாக பார்த்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படியும் முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.