ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து இயற்றப்பட்ட சட்டம் ரத்து!
ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டுக்கு மட்டும் தடை விதித்துச் சட்டம் இயற்றி உள்ளது. இந்த விளையாட்டு சூதாட்டம் இல்லை. திறமைக்கான விளையாட்டு
2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி ஆன்லைன் ரம்மி, புரோக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ’இந்த விளையாட்டுகளுக்கு, அடிமையாகி சிலர் இறந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியின்போது, ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாவதாக கூறி, உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டுக்கு மட்டும் தடை விதித்துச் சட்டம் இயற்றி உள்ளது. இந்த விளையாட்டு சூதாட்டம் இல்லை. திறமைக்கான விளையாட்டு’ என்று வாதிட்டனர். மேலும், இந்த சட்டத்தை இயற்ற முறையாக எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விளையாட்டுகளால் பலர் பணத்தை ஏமாந்துள்ளனர். பொதுநலனை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டது. சட்டத்தை இயற்ற அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. மேலும், இச்சட்டம் போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சட்டத்தை ரத்து செய்கிறோம். மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்க முடியாது உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை” என, தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

Related Stories
ஆன்லைன் சூதாட்டம் என்பது புதைமணலை விட மோசமானது! - தடை செய்ய வலியுறுத்தும் ராமதாஸ்